போஸ்டர் செய்தி

நீங்கள் வெற்றிப் பெற தகுதியான நபர்: பிரதமர் மோடியை பாராட்டிய டிரம்ப்

ஒசாகா,ஜூன்.28–

ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், மாநாட்டில் பேசுவதற்கு முன்பு மோடியும் டிரம்ப்பும் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார்.ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்கியது. ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியாக வரவேற்று மேடைக்கு அழைத்தார். அவர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர், அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியதாவது:–

நீங்கள் வெற்றிக்கு தகுதியானவர். நீங்கள் முதன்முறையாக பொறுப்பேற்றபோது, இந்தியாவில் பல பிரிவுகள் இருந்தன. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது அனைவரும் சேர்ந்து இருக்கிறார்கள். நீங்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதில் நல்ல பணியை செய்துள்ளீர்கள். இதற்கு உங்கள் திறமையே காரணம்.

இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமடைந்துள்ளது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். நாங்கள் பல துறைகளில் ஒன்றாகச் செயல்படுகிறோம். தற்போது வர்த்தகம் தொடர்பாகவும் பேசுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *