செய்திகள்

நாளை அமைச்சராக பதவி ஏற்கிறார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, டிச.13-

தமிழக அமைச்சரவை 2-வது முறையாக மாற்றப்படுகிறது. கவர்னர் மாளிகையில் நாளை (புதன்கிழமை) காலை நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார்.

முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

கட்சியிலும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். கடந்த மாதம் 27-ந் தேதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவருக்கு அமைச்சர்களும், கட்சியின் முன்னணி தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாக்களில் பேசிய சில அமைச்சர்கள், ‘உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். இதுதவிர பல மாவட்டங்களில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

சமீபத்தில் உதயநிதியிடம் அமைச்சர் பதவி குறித்து கேட்டபோது, ‘அதை முதல்வர் தான் முடிவெடுப்பார்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, நாளை காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

400 பேருக்கு அழைப்பு

இது தொடர்பாக கவர்னரின் செயலர் ஆனந்த ராவ் வி.பாட்டீல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் பரிந்துரையின்படி, சேப்பாக்கம்– திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை, தமிழக அமைச்சரவையில் சேர்க்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையின் தர்பார் அரங்கில் 14-ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விழாவில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர்கள் எண்ணிக்கை

35 ஆக உயர்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சேர்த்து தமிழக அமைச்சரவையில் மொத்தம் 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதால் அது 35 ஆக உயரும்.

இந்தநிலையில் அவருக்கு தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் அமைச்சர் அறையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அங்குள்ள 2-வது தளத்தில் அமைச்சர்கள் பொன்முடி, சக்கரபாணி அறைகளுக்கு அருகே அறை தயார் செய்யப்பட்டு வருகிறது.

அமைச்சரவை விரிவாக்கம் தவிர, சில மூத்த அமைச்சர்கள் கவனிக்கும் துறைகளும் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் ராஜகண்ணப்பன் வகித்து வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடமும், அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றப்பட்டது. இதன் பிறகு 2-வது முறையாக அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *