சிறுகதை

நாட்டியப்பெண் – ராஜா செல்லமுத்து

Spread the love

உற்சவ உற்சாகத்தில் உறைந்து போய் குளிரூட்டப்பட்ட ஒரு அரங்கில் பரத நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தாள் பவித்ரா.
சங்கீதப் பெயரையே வைத்ததால் என்னவோ அவளுக்கு சங்கீதமே வாழ்க்கையாய் வாய்த்தது. பிஞ்சு வயதிலிருந்தே அவள் பஞ்சுப்பாதங்கள் சலங்கையைக் கட்டிக் கொண்டு சதிராட்டம் போட்டன. அரங்கும் மேடையில் 360 டிகிரியும் அவள் சுழன்று சுழன்று ஆடும்போது பார்ப்பவர்களுக்குத் தலை சுற்றியதேயொழிய அவளின் அடவுகளும் அபிநயங்களும் அச்சுப்பிசகாமலே இருந்தன. முகக் கண்களை விட அவளின் நகக்கண்களே நன்றாகப் பேசிக்கொண்டிருந்தன. அவளின் நடனத்தை நான்கு பக்கமிருந்த காமிராக்கள் படம் பிடித்தன. எட்டுத் திசைகளிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர். இருக்கைகள் ஆட்களால் நிரம்பி வழிந்தன.
‘‘இந்தப்பொண்ணு நல்லா ஆடுறா..?’’என்று ஒரு வெத்தலைக்கிழவி விவரம் சொன்னாள்.
‘‘ஆமா..இவ ஜதி விலகாம ஆடுறா.. எல்லாம் கடவுள் குடுப்பினை.. இந்த வயசிலயே.. இந்தப்போடு போட்டான்னா..! இனி எட்டி வர்ற வயசுல எல்லாத்தையும் எட்டிப்புடிப்பா போ..’’ என்று நட்டு வாங்கத்தையும் மீறி பேசிக் கொண்டிருந்தனர் இரண்டு பெருசுகள்.
‘‘இவங்க என்னமோ பாடுறாங்க..?அந்தப்பொண்ணு என்னமோ ஆடுது.. நமக்கு ஒன்னும் புடிபடல..ஏதோ டான்ஸ் ஆடுறாங்கன்னு மட்டும் தெரியுது மத்தபடி இதோட அர்த்தமே எனக்குத் தெரியல..’’ என்று ஒருவர் புலம்ப
‘‘எனக்கு மட்டும் புரியுதா என்ன..?’’ எதோ கேட்போம் ..பாப்போம்..’’ என்று இரண்டு பேர் சத்தம் வெளிய கேட்காமல் மெதுவாக பேசிக்கொண்டிருந்தனர்.
‘‘இந்தப்பொண்ணு ரொம்ப அழகா இருக்காங்க..டான்ஸருக்கு உண்டான எல்லா அங்க லட்சணங்களும் இருக்கு..’’
‘‘ஆமா.. ஒடிசலான ஒடம்பு.. நேர்த்தியான கண்ணு.. மூக்கும் முழியுமா அவ்வளவு லச்சணமா இருக்கு..’’
‘‘ஆமா..’’
‘‘அதான் எல்லாரும் ஒக்காந்த எடத்த விட்டு அசையாம அப்பிடியே.. ஒக்காந்து பாத்திட்டு இருக்காங்க..’’ என்று சுரேஷ் சொல்ல
‘‘ஒனக்கு ஒன்னு தெரியுமா..?’’
‘‘என்ன..?’’ என்று மெல்லக் கேட்ட சுரேஷுக்கு அவன் காதிலே போய் பக்கவாத்திய இசையோடு பதில் சொன்னான் பிரபு.
‘‘கூட்டமோ.. ஆட்டமோ.. பாட்டமோ..கொண்டாட்டமோ..?’’ ஒரு ஆண் பேசுனா..! மொதல்ல கேப்பாங்க.. அப்பறம் பாப்பாங்க..ஆனா..! ஒரு பொண்ணு பேசுனா..! மொதல்ல பாப்பாங்க.. அப்பெறம் கேப்பாங்க.. – இது தான் பொண்ணோட அழகு..’’ என்று பிரபு சொல்ல சிரிக்கும் சத்தம் வெளியே தெரியாமல் சிரித்தான் சுரேஷ்.
அரங்கம் அதிரும் சமஸ்கிருத சங்கீதத்தைத் தமிழர்கள் தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தனர். பவித்ராவின் பாவனைகளை அப்படியே படம் பிடித்துக் கொண்டிருந்தன நான்கு பக்கமும் நட்டு வைத்திருந்த காமிராக்கள். கூரிய மூக்கை நீட்டுவது போன்ற ஜூம் லென்ஸ் காமிரா வைத்தூக்கிய காமிராக்காரர்கள் அவளின் அபிநயங்களை அப்படியே பதிவு செய்து ஒரு முறை சரி பார்த்துக்கொண்டனர்.
‘பட்..பட்..’ என்று பூமி அதிர தன் மென்பஞ்சுப்பாதங்களை அடித்து அடித்து ஆடிக்கொண்டிருந்தாள் பவித்ரா.
மங்கிய ஒலியில் மயங்கிக் கிடந்த அந்த அறையை ‘ டுர் என்ற சத்தத்தோடு திறந்து வந்தது ஒரு கூட்டம்.
‘‘யாரு அது..?’’ ப்ளீஸ் க்ளோஸ் த டோர்; டோண்ட் டிஸ்டர்ப் அதர்ஸ்..’’ என்ற நுனி நாக்கு ஆங்கிலத்தை ஒரு பெண் உச்சரிக்க
‘‘ஹலோ..டோண்ட் சே வேர்ட்ஸ். ஹவ் வீ கம் டூ த ஆடிடோரியம்..’’ என்று மறு ஆங்கிலத்தில் பதில் சொன்னாள் ஒரு மடிசார் மாமி.
‘‘அங்க பாருங்க சீட் இருக்கு..’’ என்று ஒரு பெரியவர் சொன்னார்.
‘‘எங்க சார்..?’’என்று ரொம்பவே மரியாதையாகக் கேட்டாள் இன்னொரு மடிசார் மாமி
‘‘இப்பிடியே.. லெப்ட்ல போயி ரைட்ல டேர்ன் பண்ணுங்க..’’ என்று சொல்ல வந்த அந்தக்கூட்டம் காலியான இடம் தேடி ஓடியது.
பவித்ரா ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள்.
‘‘இந்தப் பொண்ணுதானே..!’’
‘‘ஆமா..’’
‘‘எப்பிடியிருக்கா..?’’
‘‘ரொம்ப நல்லாயிருக்கா..? மூக்கும் முழியும் அவ்வளவு லட்சணம். அப்பா என்ன பண்றார்..?’’என்று ஒருத்தி கேட்டாள்.
‘‘ரயில்வே. ரிடையராம்..’’
‘‘ஓ..அம்மா..’’
‘‘ஹவுஸ் ஒய்ப் தான்.. ஒரு பையன்,ஒரு பொண்ணு எந்த பிக்கல் பிடிங்கலும் இல்ல..” என்றாள் ஒருத்தி
‘‘பிரபா..’’
‘‘சொல்லுங்கோ..’’
‘‘நோக்கு தான் பிடிக்கணும்.. நாங்க பொண்ணு பாத்து எந்த பிரயோசணும் இல்ல..இந்தா மேடையில ஆடின்டு இருக்காளே பவித்ரா..அவ தான் ஒனக்கு மாட்டுப்பொண்ணு.. ஒன்னோட புள்ளாண்டானுக்கு இவ சரியா வருவாளான்னு நீயே முடிவு பண்ணிக்கோ..’’ என்று ஒரு மாமி சொன்னார்.
‘‘ம் ..- பொண்ணு நல்ல பொண்ணுதான்..! ஆனா..! இந்த ஆட்டம் ஆடுறா.. வீட்டுல வந்து பண்ட பாத்திரங்கள தேச்சு , சோறு தண்ணி ஆக்கி வைப்பாளோ.. என்னவோ.. அதான் எனக்கு பயமா இருக்கு..’’ என்று பிரபா பதறினாள். கூடியிருந்த கூட்டம் பரத நாட்டியத்தை ரசித்துக்கொண்டிருந்தது.
கடைசியாக வந்த கூட்டம் மட்டும் பவித்ராவைப் பெண் பார்க்கும் படலமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரண்டு மூன்று இருக்கை தள்ளி உட்கார்ந்த சங்கர் வைத்த கண் வாங்காமல் பவித்ரா ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தான்.
‘‘சங்கர்.. சங்கர்..’’ என்று பூனைக்கால் பொருத்திப்பேசினாள் சங்கரின் அம்மா
‘‘என்னம்மா..’’ என்று மயிலிறகிலும் மென்மையாய் பதில் சொன்னான் சங்கர்
‘‘உனக்கு பொண்ணு புடிச்சிருக்கா..?’’
‘‘ம்.. – புடிச்சிருக்கம்மா..’’அவன் புன்னகையே பதில் சொன்னது.
‘‘இப்படி ஆடிட்டு இருக்காளேன்னு நினைக்காதே.. – எல்லாம் கல்யாணம் வரைக்கும் தான். அதுக்கப்பறம் வீட்டோட அடங்கிப் போயிருவானு அவங்க அப்பா சொல்லிட்டாரு சரியா..?’’என்று ஒரு மாமி சொல்ல அந்த இருட்டிலும் ரொம்ப பலமாகத் தலையாட்டினான் சங்கர்.
அப்படியும் இப்படியும் ஆடி ஓடி ஆடி முடித்து பவித்ரா நின்ற போது பரிசுகளும் விருதுகளும் கொடுக்க மேடையேறினர் விழாக் குழுவினர்.
அது வரையில் இருளில் மூழ்கிக் கிடந்த அரங்கம் இருளை விலக்கி வெளிச்சத்தை உடுத்தியது.
‘‘ஐயோ.. அந்தா.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திட்டாங்க..’’ என்று பவித்ராவின் அப்பாவும் அம்மாவும் சங்கர் குடும்பத்தை நோக்கி வந்தனர்.
‘‘எப்ப வந்தீங்க..?’’
‘‘நாங்க வந்து அரை மணி நேரமாச்சு .. அப்பிடியா..?’’
‘‘ஆமா..’’ –
‘‘பொண்ணு எப்டியிருக்கா..?’’
‘‘எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..’’ என்று குடும்பங்கள் சம்மந்தம் பேசிக்கொண்டிருந்தனர்.
‘‘பவித்ரா.. உண்மையில் வெரி குட் டான்ஸர்.. இவளோட நாடி நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்திலயும் பரதம் ஊறிப்போயிக் கெடக்கு.. இந்த ஒரு பொண்ணு போதும் நம்மோட பாரம்பரியத்த காப்பாத்துறதுக்கு..ஸி இஸ் ஆன் அசட் டு அவர் கன்ட்ரி.. ஸி இஸ் நாட் எ கேர்ள்..ஸி இஸ் சாத்சாத் சரஸ்வதி.. இவங்கனோட நம்ம பரத நாட்டியம் ரொம்பவே புகழடையப் போகுது..’’ என்று பேசிய விழாக்குழுவினர் அவள் தோளைச்சுற்றி சால்வையைப்போர்த்தி நினைவுப்பரிசு வழங்கினர்.
‘‘அம்மா.. நீங்க கேக்குறது புரியுது.. இந்த நடனமெல்லாம் சும்மா தான்.. ஆப்டர் மேரேஜ் அவளா நிறுத்திருவா..நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்கோ..’’ என்று பவித்ராவின் அம்மா சொல்லவுடன் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சந்தேசப்பட்டனர்.
பிறகு அந்த அரங்கத்திலேயே இருவீட்டாருக்கும் இடையே திருமண ஒப்பந்தம் முக்கால் வாசி நிறைவுப்பெற்றது.
‘‘பவித்ராவின் நடனத்தால் தான் பரத நாட்டியத்துக்கு பெருமை வரப்போகுது கடைசி வரைக்கும் பவித்ரா ஆடிக்கிட்டே இருக்கணும்..’’ என்று பேசிக்கொண்டிருந்தனர் விழாக்குழுவினர்.
அவர்களின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆமோதித்து அரங்கம் அதிர கைத் தட்டி ரசித்துக்கொண்டிருந்தது கூட்டம்.
பவித்ராவை தன்னவளாக ஆகர்சித்துக் கொண்டிருந்தான் சங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *