சிறுகதை

நன்கொடை – ராஜா செல்லமுத்து

ரவி தன் பிறந்தநாள் , திருமணநாள் என்று எந்த நல்ல நாட்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு ஆசிரமத்திற்கு போய் உதவிகள் செய்வதும் அதைப் படம்பிடித்து வாட்ஸ் அப் ஃபேஸ்புக் என்று விளம்பரப்படுத்துவதும் வழக்கம். இதனால் அவரின் புகழ் பரவிக் கிடந்தது. அந்த விளம்பர படுத்துதல் அவருக்கு என்ன சந்தோஷத்தை தருகிறது என்பதெல்லாம் தெரியாது . ஆனால் அவர் உதவி செய்யும் ஒவ்வொரு நேரத்திலும் அதைப் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவது அவருக்கு மட்டுமல்ல. இந்த வேலையை அவர் செய்யவில்லை என்றாலும் அவரை சுற்றியிருக்கும் கைத்தடிகள் செய்வார்கள்.

என்ன ரவி இவ்வளோ பணம் கொடுக்கிறிங்க. எவ்வளவு சாப்பாடு கொடுக்குறீங்க. அது மத்தவங்களுக்கு தெரிய வேண்டாமா ?அதுக்குதான். யார் கொடுப்பா இந்த காலத்துல எச்சி கையில ஈ ஓட்டாத இந்த மனுஷங்க மத்தியில இவ்வளவு பணத்தை இவ்வளவு நன்கொடையாக கொடுக்கறீங்க. இதை விளம்பரப்படுத்தாம வேற என்ன செய்றது ? நீங்க பேசாம இருங்க என்று ரவியை அடக்கிவைப்பார்கள் நண்பர்கள்.

இல்ல இது வேணுமா? இது தவறு இல்லையா? என்று ரவி கேட்டாலும் உடனிருக்கும் நண்பர்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்போது ரவி எது செய்தாலும் மற்றவர்கள் விளம்பரப்படுத்த மறந்தாலும் ரவி முன்வந்து போட்டோக்கள் எடுப்பது செய்திகள் எழுதுவது என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார்.

போற போக்க பாத்தா ரவி இந்தத் தொகுதியில் எம்எல்ஏ ஆகிருவாரு போல. ஏன் இவ்வளவு சுருக்கமாக சொல்றீங்க தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராய் ஆயிருவார்னு சொல்லுங்க என்று அவரிடம் வாங்கித் தின்னும் அல்லக்கைகள் அள்ளிவிட்டு கொண்டிருப்பார்கள்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில் எத்தனையோ ஆசிரமங்கள். அனாதை இல்லங்கள். முதியோர் இல்லங்கள் என்று வாரி வழங்கிக் கொண்டிருந்தார் ரவி.

அதனையே விளம்பரங்களாக பதிவுகளாக வெளிவந்து கொண்டே இருந்தன. அவர் தான் குடியிருக்கும் பகுதிகள் அத்தனையும் நன்கொடை அளித்து விட்டு வேறொரு நாள் வெளியூர் செல்ல வேண்டியதாயிற்று.

அங்கே ஒரு அனாதை ஆசிரமத்தில் நன்கொடையும் பொருளுதவியும் சாப்பாடும் கொடுக்க முடிவானது. அதை செய்வதற்கு ரவியும் அவரின் கைத்தடிகளும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள் .

அந்த அனாதை ஆசிரமத்திற்கு நுழைந்த ரவி காலை உணவு. மதிய உணவு . இரவு உணவு என்று கொடுத்துவிட்டு அந்த ஆசிரம நிர்வாகிகளிடம் ஒரு கணிசமான தொகையையும் கொடுத்தார். இவ்வளவையும் செய்த ரவியை அந்த ஆசிரம நிர்வாகி பாராட்டவோ? வாழ்த்தவோ? நல்லது என்று சொல்ல சொல்லவோஇல்லை . இது ரவிக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது.

என்ன நம்ம எது கொடுத்தாலும் நம்மள பெருமையா பேசி உற்சாகப்படுத்தி உங்கள மாதிரி யாரும் இல்ல. அப்படின்னு சொல்ற ஆட்களுக்கு மத்தியில் இந்த நிர்வாகி வித்தியாசமா இருக்காரே என்று நினைத்த ரவி அவரிடம் வாய்விட்டு கேட்டுவிட்டார்.

இவ்வளவு பண்ணி இருக்கேன் நீங்க ஒரு நன்றி கூட சொல்லலையே ?ஏன் ? என்று கேட்டபோது அந்த நிர்வாகி சிரித்துக் கொண்டே ரவியைப் பார்த்து சொன்னார்.

சார் நீங்க பணக்காரங்க. வசதி உள்ளவங்க. உங்ககிட்ட பணமும் பொருளும் இருந்தா . அது பணமும் பொருளா மட்டும்தான் இருக்கும். நீங்க குழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் போதும் நன்கொடையாக கொடுக்கும் போதுதான் அது தானமா ஆகுது. நாங்க இல்லன்னா உங்க பொருள் பொருளாதான் இருக்கும்.அதனால நீங்க தான் எங்களுக்கு நன்றி சொல்லணும். உங்க பொருளை உங்க பணத்தை எங்க கிட்ட கொடுத்து அதை நன்கொடையாக வழங்கி நல்ல பேர் எடுக்கறீங்க.

அதனால இனிமேல் நீங்க யாருக்கு பணம் கொடுத்தாலும் பொருள் கொடுத்தாலும் உதவி செஞ்சாலும் அதை அவங்ககிட்ட இருந்து வேறு வார்த்தைகள் வரும் எதிர்பார்க்காதீர்கள்.உங்க பணத்தை பொருளை பகிர்ந்து கொண்டதற்கு நீங்கதான் அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு வாங்க .அதுதான் முறை என்று அந்த நிர்வாகி சொன்னபோது ரவியின் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைவது போல இருந்தது.

அதுவரை இல்லாத ஒரு புதிய தத்துவத்தை ரவியிடம் அந்த நிர்வாகி சொன்னார்.

அன்றிலிருந்து எந்த நன்கொடையும் எந்த பொருளும் எங்கு கொடுத்தாலும் ரவி அந்த நிர்வாகியிடம் தான் தான் நன்றி சொல்வாரே தவிர அவர்களிடமிருந்து எந்த நன்மையும் எதிர்பார்க்க மாட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *