100 வயது தாய்மாமனின் வாழ்த்து : ஸ்டாலினின் முன் நிழலாடும் சிந்தனை
ஆர். முத்துக்குமார்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மழைப் பாதிப்பு பகுதிகளில் நேரடியாகச் சென்று நிலைமையை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். பாதித்த பகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தும் வருகிறார். பாதித்தவர்களிடமே அவர்களது சவால்களையும் சங்கடங்களையும் கேட்டு தெரிந்தும் கொள்கிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் திருவாரூர் சென்று இருந்தபோது அவரது 100 வயது தாய்மாமாவிடம் நேரில் சென்று ஆசிகள் பெற்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகே கோவில் திருமாளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் உடன்பிறந்த அண்ணன் தட்சிணாமூர்த்தி வசித்து வருகிறார். இவருக்கு முன்தினம் 100-வது பிறந்தநாள்.
இதையடுத்து அவருக்கு நேற்று முன்தினமே ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் சீர்காழியில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட வந்த தமிழகமுதல்வர் ஸ்டாலின், கோவில் திருமாளம் கிராமத்துக்கு வந்து, தாய் மாமா தட்சிணாமூர்த்திக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வாழ்த்துப் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தட்சிணாமூர்த்தி, ‘‘திமுக நல்ல முறையில் ஆட்சி செய்கிறது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என்றார்.
தமிழக முதல்வருக்கு வயதானவர்களிடம் வாழ்த்துப் பெறுவது சிறப்பு; அதை விட முதியவர்களின் நிலைமையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருப்பது தமிழகத்திற்கும் நல்ல செய்தியாகும்.
ஒருவர் 90 வயதைத் தாண்டி விட்டாலே முதுமை காரணமாக இயலாமை, முடியாமை இயல்பாகவே வந்து விடுகிறது.
தன் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த திருப்தியுடன் வாழும் கட்டத்தில் அவர்களது வாரிசுகளும் பணி ஓய்வு பெற்று வயோதிகம் காரணமான சிக்கலில் சிக்கித் தவிக்கின்ற நிலை பல குடும்பங்களில் வந்தும் விடுகிறது.
100 வயதைத் தாண்டியவர்களை பார்த்துக்கொள்ளப் பேரன் பேத்திகளால் மட்டுமே உடல் வலிமை பெற்றவர்களாக இருப்பது தான் இயற்கையின் நியதி! ஆனால் இன்றைய அதிவேக தொலைத்தொடர்பு காலகட்டத்தில் இன்றைய இளைஞர்களுக்கு வீட்டு முதியவர்களை உடன் இருந்து கவனித்து கொள்ளும் மனநிலை இருந்தும் அதை பரிபூரணமாக செய்திட முடியாத நிலையும் உள்ளது என்பது தான் உண்மை.
முதியவர்களுக்கு நாடே கடமைப்பட்டு இருப்பதை மறந்துவிடாமல் அரசே முதியவர்களை காக்கப் புதிய அணுகுமுறைகள் நிச்சயம் தேவைப்படுகிறது.
தமிழகத்தில் பிறந்த குழந்தைகளை அரசே தத்தெடுத்து அவர்களை பேணிக்காக்கும் வசதியை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை நினைவுகூர்ந்து முதியவர்களுக்கும் உதவ அரசே முன்வர வேண்டும்.
பிறந்த குழந்தைகளுக்கு ‘தொட்டில் குழந்தை’ திட்டம் வந்ததுபோல் முதியோர்களுக்கு ‘கட்டில் குழந்தை’ திட்டத்தை பற்றி முதல்வர் ஸ்டாலின் யோசித்தால் வரும் காலத்தில் அவருக்கு வரலாற்று சிறப்பு மிக்க அங்கீகாரம் நிச்சயம் காத்திருக்கிறது.
‘முதுமை ஒரு கொடுமை’ என்ற வாதம் முன் வைக்கப்படுவது ஏன்? வயது கூடக் கூட எலும்புகளும் நரம்புகளும் வலுவிழந்து விடுகிறது. ஆகையால் நடமாட முடியாது முடங்கி இருக்க நேருகிறது.
அப்படியே நடந்து பயிற்சிகளில் ஈடுபட்டால் ஒரு கட்டத்தில் தடுமாறி எலும்பு முறிவும் ஏற்பட நடமாட முடியாது போக உடன் இருப்பவர் எப்போதும் இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
வசதி படைத்தவர்கள் முதியோருக்கு சர்க்கரை இருக்கை, முதியவரை தூக்கிக் காலில் அமர்த்தி வெளி உலகத்தை காட்டும் பணியாளரை சம்பளம் கொடுத்து வைத்துக் கொள்வது, முதியோர் இல்லத்தில் நல்ல வசதிகளுக்கு மாதா மாதம் கட்டணத்தை செலுத்தி விடமுடிகிறது.
ஆனால் தினக்கூலிபணிசெய்பவருக்கு அப்படிப்பட்ட செலவுகள் செய்யவே முடியாது தவிர்ப்பதால் தங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
அந்தப் பிள்ளையோ, மகளோ, மருமகனோ, மருமகளோ வயோதிகத்தில் திணற ஆரம்பித்தால் அவர்களது திணறல் மிகப்பெரிய தலைவலி ஆகும்.
அந்நிலையில் உள்ளவர்களுக்கு பண வசதியை மட்டும் தருவது நல்ல தீர்வு கிடையாது அல்லவா? சாப்பிட உணவுகளை எப்படி வரவழைப்பார்கள். சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளையா எப்படிசாப்பிட முடியும்?
தூங்கி எழும் பகுதியையும் தங்களது ஆடைகள் சுகாதாரம் இருப்பதையும் எப்படி உறுதி செய்ய முடியும்?
இதையெல்லாம் பற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவார். ஆகவே அவரே இந்த முதியோர் பிரச்சினைக்கு தீர்வை உகந்த வழிகயையும் அறிவிப்பார் என்று எதிர்பார்ப்போம்.
கட்டில் குழந்தையாக ஆகிவிட்டவர்கள் அரசுக்கு பாரமாகவே இருக்கும். ஆனால் அவர்களை பராமரிக்க செய்யப்படும் திட்டம் மிகப்பெரிய இயக்கமாகும்.
முதலில் ஓய்வு பெற்றவர்கள் நலமாக இருக்கும் வரை ஊதியம் இல்லாத அல்லது மிக குறைந்த ஊதியத்தில் அரசே சில சிறு பணிகளில் ஈடுபட வைக்கலாம்.
கட்டணமில்லா சேவைகளில் கண்காணிப்பாளர்களாக பணிகளில் ஈடுபட வைக்கலாம். அருங்காட்சியகம், உயிரியல் பூங்காக்களில் கூட்ட நெரிசல் பகுதிகளில் சேவைகள் பெற வருபவர்களுக்கு விண்ணப்பங்கள் எழுதி தரும் பணிகள், கழிப்பறை வாசல் பகுதியில் தற்சமயம் இளைஞர்கள் டோக்கன் தந்து காசு வசூலிப்பது அமர்ந்து செய்யும் பணி அல்லவா . முதியவர்களால் அதைச் செய்ய முடியும். அங்கு இளைஞன் அமர்ந்து உபயோகமான கடும் பணிகளில் ஈடுபட முடியாது போடுவதைத் தடுக்கலாம்.
இப்படி ஓய்வு பெற்றவர்கள் பணியாற்றினால் வருங்காலத் தலைமுறையும் நல்ல முன் உதாரணமாக வாழ வழிபிறக்கும்.
ஒரு கட்டத்தில் பணியாற்ற வந்தவருக்கு இறுதிக்கட்டத்தில் அரசே தத்தெடுத்து பார்த்துக் கொள்ளும் செலவு சரியானது என்ற அந்தஸ்தைப் பெற்று விடும்.
நவீன உலகில் மருத்துவ வசதிகள் மேன்மை பெற்று வருவதால் இறப்பு சதவிகிதம் உலகம் எங்கும் உயர்ந்து வருவது போல் தமிழகத்திலும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நம் எல்லோருக்கும் ஆரோக்கியமாய் பல ஆண்டுகள் வாழ ஆசை இருக்கிறது. அந்த ஆசை பூர்த்தி பெற்று 90களில் வாழும் போது எனக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமைகளை தந்த முதுமையை நொந்து கொள்ளும் நிலையில் அவருக்கு வேண்டிய வசதிகளை அமைத்துத் தர வேண்டிய கட்டாயம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு இருக்கிறது.
தாய் மாமாவின் வாழ்த்துப் பெற்ற அவர், மேலும் முதுமையில் வாழ்ந்து துவண்டு கொண்டு இருப்பவர்களுக்கும் உதவிட முன்வருவார் என்று எதிர்பார்ப்போம்.