செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் விதிமுறைகள் பின்பற்றலில் அலட்சியம் ஏன்?


வை – மை வரும் நல்ல தலைமை… பாகம்–3 – ஆர்.முத்துக்குமார்


தேர்தல் பிரச்சாரங்கள் துவங்கிவிட்டது. அனல் பறக்கும் பிரச்சார உரைகளில் தேர்தல் நன்நடத்தை மீறல் இருப்பதாக எதிர்அணிகளின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுவதும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தருவதும் அதிகரித்து வருகிறது.

பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பேசிப் பழகிய பலர் அரசியல் மேடைகளில் பேசும்போது தேர்தல் விதிமீறலாக இருப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.

பிரதமர் மோடி கோவையில் வாகன ஊர்வலம் சென்ற போது பலர் வழி நெடுக அவருக்கு வரவேற்பு தரும்விதத்தில் பூக்களை தூவியும் கையசைத்தும் மகிழ்ச்சி பொங்க வரவேற்பு தந்த நிகழ்வில் பல இடங்களில் பள்ளி சிறுவர்களும் இருந்தனர்.

அவர்கள் பெற்றோர்களுடன் வந்து இருந்ததால் தலைவரை பார்க்க வந்தவர்கள் என்று கூறிவிடலாம். ஆனால் பள்ளிச் சீருடையில் அல்லவா பலர் வந்து இருந்தனர்!

பள்ளி நிர்வாகிகள் மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சிக்கு அனுபவ பாடம் தர அப்படி ஒரு ஏற்பாட்டை செய்து இருக்கலாம்! ஆனால் பள்ளியின் விளம்பரத்திற்காகவும் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு பெறவும் இப்படி பள்ளி மாணவர்களை வீதியில் நிற்க வைத்து பிரதமருக்கு வரவேற்பு என்பது தவறான செயல்; தேர்தல் ஆணையமும் சிறுவர் நல சங்கங்களும் இதை கண்டிக்காமல் விட்டு விடக்கூடாது.

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தேர்தல் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடன் ஆலோசிப்பது வாடிக்கை.

சமீபத்தில் சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் தேர்தல் அதிகாரியை விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையோடு குற்றச்சாட்டுகளை சோதனை செய்து அதில் தவறுகள் இருந்தால் எந்த கட்சியாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி கேட்டுக் கொண்டது வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச் சாவடிகளில் பந்தல் அமைக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும். மெட்ரோ ரெயில்கள், வந்தே பாரத் ரெயில்களில் உள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும். வாகன சோதனையின் போது ஆவணங்களை சரிபார்த்து உடனடியாக ரொக்கப் பணத்தை பொதுமக்களிடம் கொடுத்துவிட வேண்டும்.

அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் அதிகார துஷ்பிரயோகம் இல்லாமலும் நடத்தப்பட வேண்டும். 85 வயது தாண்டிய முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் வாக்களிக்கும் சூழல் ஏற்படும் போது எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் வாக்குச்சாவடி அதிகாரிகள் செயல்படவேண்டும். பதற்றமான வாக்கு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தே.மு.தி.க. கட்சியின் சார்பில் ஜி.சந்தோஷ்குமார் பேசும் போது சுட்டிக் காட்டியது வாகன சோதனை பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலும் மரியாதைக் குறைவாகவும் இருக்கக் கூடாது என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் சத்தியமூர்த்தி வைத்த கோரிக்கை உண்மையில் நம்மை சிந்திக்க வைக்கும் ஒன்றாகும்!

அவர் கேட்டது தேர்தல் நடத்தை விதிகளைக் கூறி அம்பேத்கார் உட்பட பல தலைவர்களின் சிலைகளை மூடி விடுவது சரிதானா?

இப்படி தேர்தல் நேரத்தில் 15 நாட்களுக்கு ஒரு தலைவரின் சிலையை மூடி விடும் போது அரசியல் தலைவர்களோ அந்த தலைவரின் வாரிசு நாங்கள் என கூறிக் கொண்டும் அவர்களின் கனவை உண்மையாக்குவேன் என்று பிரச்சாரமும் செய்வார் அல்லவா?

பொதுமக்கள் முன் சிலையாய் நிற்கும் தலைவர்கள் சிலைகளை துணி போட்டு மறைத்து விடுவதால் அரசியல் ஆதாயத்திற்கு அவரை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அதே தலைவரின் வழியில் ஆட்சியை நடத்துவேன் என்று கூறினால் அது தவறில்லை!

அவர் முகம் தெரியக்கூடாது; ஆனால் அவரது கூற்றுகளுக்கு உயிர்ப்பிப்பு தருவது தேர்தல் களத்தில் நல்லது என்று ஆகிவிட்டது.

சபையில் இது பற்றிய அறிவிப்புகள் சரியானதாக ஏற்கப்படவேண்டுமா?

ஆக அத்தலைவரின் நல்ல காரியங்கள் தொடரலாம்; ஆனால் அவர் முகத்தை பிரச்சார சாதனமாக்கி விடக்கூடாது.

இன்றைய முதல்முறை வாக்காளர்கள் முதல் பல முறை வாக்களித்துள்ள அனுபவம் பெற்ற வாக்காளர்களும் அரசியல் நிபுணர்களும் கூடி இது பற்றி பேசி ஆட்சியைப் பிடித்த பிறகும் எப்படிப் பேச வேண்டும்; எப்படிச் செயல்பட வேண்டும் என்று கண்காணித்து அறிவுரை தர அரசியல் தலைவர்கள் ஆலோசித்தாக வேண்டும்.


மேலும் வாசிக்க:

வை–மை தரும் நல்ல தலைமை… பாகம் –1: தமிழகத்தில் தேர்தல் களம் தயார்

வை–மை தரும் நல்ல தலைமை… பாகம் –2: உலகமே பாராட்டும் தேர்தல் கட்டுமானம்: வென்றவரை கேள்வி கேட்கும் உரிமை வாக்காளர்கள் பெற வழி காண்போம்


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *