செய்திகள்

கர்நாடகாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட முடிவு: முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரு, அக்.8–

கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை நவம்பர் மாதத்தில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அண்மையில் பீகாரில் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு புள்ளி விபரங்கள் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2016–ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

கடந்த 2013 முதல் 2018–ம் ஆண்டு வரை நான் முதல்வராக இருந்த போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ரூ.162 கோடி செலவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மக்களின் சமூக, பொருளாதார விபரங்களும் திரட்டப்பட்டன. எனது அரசு முடியும் தருவாயில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் அப்போது வெளியிட முடியவில்லை.

பின்னர் ஆட்சிக்கு வந்த ம.ஜ.த, பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் அந்த அறிக்கையை கிடப்பில் போட்டன. தற்போது மீண்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை தொடர்பான விவாதம் எழுந்துள்ளது.

என்னை பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியம். நாட்டு மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விபரங்கள் துல்லியமாக தெரிந்தால் தான் அதற்கேற்ற திட்டங்களை தீட்ட முடியும். தற்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு தலைவராக இருக்கும் ஜெயபிரகாஷ் ஹெக்டேவிடம் நவம்பர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளேன்.

அந்த அறிக்கைக்கு பிறகு இட ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து முடிவெடுக்கப்படும். தற்போதைய சூழலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என தனியாக பிரிப்பது குறித்து கருத்து கூற முடியாது.

இவ்வாறு முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *