செய்திகள் நாடும் நடப்பும்

உலகமே பாராட்டும் தேர்தல் கட்டுமானம்: வென்றவரை கேள்வி கேட்கும் உரிமை வாக்காளர்கள் பெற வழி காண்போம்


வை–மை தரும் நல்ல தலைமை… பாகம் –2


ஆர்.முத்துக்குமார்


நாடெங்கும் வேட்பாளர்கள் அறிவிப்புகள், ஆட்சியை பிடிக்க புதுக்கூட்டணிகள் என பல பரபரப்பான செய்திகள் வெளிவர முதல் கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகள், 21 மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் புதுவை யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரல் 19 தேர்தல் நடைபெறும். அதாவது அடுத்த மாதம் இந்த நாளில் 6.19 கோடி வாக்காளர்கள் அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்களித்து விட்டு வெற்றி யாருக்கு என்பதை தெரிந்து கொள்ள ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நாள் வரை பொறுமை காத்தாக வேண்டும்!

நாடெங்கும் 18 வது பொது தேர்தலுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில் நமது ஜனநாயக வளர்ச்சிகளை சற்றே திரும்பிப் பார்க்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்ததால் நமது கல்வி ,சம்பாதிப்பு, ஆட்சி அதிகாரம் என்று ஏதும் நம் கையில் கிடையாது.

ஆனால் 1947–ல் சுதந்திரம் பெற்றும் விட்டோம், நாடெங்கும் எப்படி வளர்ச்சிகளை உருவாக்குவது? என்பதையே பிரதானமாக யோசித்து ஆக வேண்டிய கட்டாயமும் இருந்தது.

1951–ல் தான் முதல் தேர்தலை நடத்தி இருந்தோம். ஆங்கிலேயர் விட்டுச் சென்ற நாள் முதலாய் பிரதமர் நேருவும் அவரது காங்கிரஸ் கட்சியின் சகாக்களும் ஆட்சி செய்தனர்.

சுதந்திரம் பெறும் முன்பே 1946–ல் மாநிலவாரி தேர்தல்கள் நடத்தப்பட்டு இருந்தது. அதில் காங்கிரஸ் தனிப்பெரும் மெஜாரிட்டி பெற்றும் இருந்தது.

அவர்கள் கூடி சுதந்திரம் பெற்ற நாளில் பிரதமராக நேருவை தேர்வு செய்து காபந்து அரசை உருவாக்கினர். அவரும் 15 அமைச்சர்களை கொண்ட மந்திரி சபை அமைத்து ஆட்சியை நடத்தினார். கடைசி வைஸ்ராய் மவுண்ட் பேட்டன்பிரபு தான் நேருவுக்கு பதவி பிரமாணம் செய்தும் உள்ளார்.

சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தலை நடத்தி முடிக்க இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் பட்டபாடு சொல்லி மாளாது. அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு, நாடு குடியரசாகிக்கொண்டிருந்த வேளை அது. இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த இந்தியா, வறுமையிலிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தது.

பிரிவினையும் கலவரமும் ஏற்படுத்திய வடுக்கள், காந்தி படுகொலை என அசாதாரணமான சூழல். கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய மக்களை வைத்துக்கொண்டு எடுத்த எடுப்பிலேயே அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்துவிட்ட நிலையில் தேர்தலை நடத்த வேண்டிய சூழல்.

முதலில் எப்படித் தேர்தலை நடத்துவது என்பதற்கு ஒரு சட்டம் வேண்டும் என்பதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் வடிவமைக்கப் பட்டது; நாடு முழுவதும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். யார் வாக்காளர்கள் என்பதைப் பட்டியலிடும் பணிகள் தொடங்கின.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு பெட்டி வைப்பது என்று முடிவு செய்து, தனித்தனி வாக்குப் பெட்டிகளைச் செய்து முடித்தனர். மக்களவையோடு சேர்த்து மாநிலசட்டமன்றங்களுக்கும் தேர்தலை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. 1951 அக்டோபர் 25 தொடங்கி 1952 பிப்ரவரி 21 வரை 68 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்காளர்பட்டியல் தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு கட்டத்தில் ஆய்வுசெய்த சுகுமார் சென், பெண்களின் பெயரை வட இந்தியாவில் காண முடியவில்லை என்று திகைத்திருக்கிறார். இன்னாரது மனைவி என்றோ, இன்னாரது மகள் என்றோதான் பெண் வாக்காளர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

அன்றைய காலத்தில் தனது மனைவியின் பெயரைப் பொதுவெளியில் பதிவுசெய்ய கணவர்கள் அனுமதித்து இருக்கவில்லை. வெறுத்துப்போன சுகுமார் சென், அந்தப் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அசல் பெயர்களுடன் பெண் வாக்காளர்களைக் குறிப்பிட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கச் சொன்னார். அப்படி நாடு முழுவதும் நீக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் 28 லட்சம்.

“முதல் தேர்தலில் போட்டிசமத்துவமாக இல்லை” என்று பதிவு செய்திருக்கிறார் லண்டனிலிருந்து வெளிவரும் ‘தி நியூ ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகையின் செய்தியாளர் அமிதா மல்லிக். “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குச் சென்று வெள்ளைக்காரர்களை நாட்டைவிட்டு அனுப்பிவிட்டோம் என்று மட்டும் சொல்வது போதுமானதாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருகாலத்தில் இந்தியர்களுக்கு அரசாளவே தெரியாது என்றே மேற்கத்திய நாடுகள் கருதிக்கொண்டிருந்தன. அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்துத் தருவதாகக்கூடக் கூறின. இந்தியாவின் தலைவர்கள் அதை ஏற்கவில்லை. இந்தியாவின் அரசியல் நிர்ணயசபை சட்டத்தை சுயமாக நமது தலைவர்களே இயற்றி மக்களாட்சியை மாண்புடன் நடத்தினார்கள்.

16 ஆண்டுகள் இந்தியப் பிரதமராக இருந்த பண்டித ஜவகர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் எதிர்காலம் என்னவாகுமோ என்று கருதிய நிலையில், நான்காவது பொதுத் தேர்தல் முடிந்த பின், ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையின் டெல்லி நிருபர், “இந்தியாவைச் சுதந்திரச் சட்டகத்துக்குள் வளர்த்தெடுக்கும் முயற்சிகள் தோற்றுவிட்டன.நடந்து முடிந்த நான்காவது பொதுத் தேர்தல்தான் சுதந்திர இந்திய ஜனநாயகப் பேரரசின் கடைசிப் பொதுத் தேர்தலாக இருக்கும்” என்று எழுதினார். மேற்கத்திய அறிஞர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி 17 பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்து, உலகக் கணிப்புகளையெல்லாம் இந்திய வாக்காளர்கள் தகர்த்துவிட்டனர்.

அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட தேர்தலாக முதல் பொதுத் தேர்தல் அமைந்தது. ஏறத்தாழ நான்கு மாத காலம் முதல் தேர்தலுக்கு ஆனதென்றால் 1980இல் நடைபெற்ற ஏழாவது தேர்தலை நடத்திட இந்தியா எடுத்துக்கொண்டது நான்கு நாள்கள் மட்டுமே. அதன் பின் 10ஆவது தேர்தல் முதல், கடந்த 17 ஆவது தேர்தல் (2019) வரை வாக்குப்பதிவுக்கு மட்டுமே இந்தியா எடுத்துக்கொண்ட காலம் மூன்று முதல் ஆறு வாரங்கள்.

இத்தகைய சூழலில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேதி அறிவிப்பதற்கு இரண்டு நாள்கள் முன்பாக, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டதும் அதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தமும் பேசுபொரு ளாகின. அதைத் தாண்டி, தேர்தல் பத்திர நடைமுறை குறித்து எழுந்த சர்ச்சைகளும், அதுதொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த முறை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. எல்லாவற்றையும் கடந்து,இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டமைக்க விருக்கும் இந்தப் பொதுத் தேர்தல், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது!18 வயது வந்தவர்களும் பல லட்சம் புது வாக்காளர்களும் முதல்முறை வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கை பதிவு செய்ய வரும்போது கடமை உணர்வுடன் நாம் தேசத்தின் வளர்ச்சிக்கு உண்மையாக வித்திடுகிறோம் என்ற உணர்வுடன் வாக்களித்து மகிழ வேண்டும்.

அவர்களுக்கு பிடித்த தலைவரோ, அரசியல்வாதியோ தங்களது தொகுதியில் இல்லையே என சலிப்புடன் தேர்தல் நாளில் வாக்குப்பதிவு கடமையை தவற விட்டு விடக்கூடாது.

உங்கள் வாக்கு யாரேனும் ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கப் போகிறது. அவரது செயல்பாடுகள் சரியாக இல்லையே என பின்னர் தெரிய வந்தால் அவரைத் தட்டிக் கேட்கும் உரிமையும் ஜனநாயகத்தில் இருக்கத்தான் செய்கிறது.

தேர்தல் ஆணையம் இதுவரை வாக்குப்பதிவு 100 சதவீதம் சரிவர இருக்க கடமையாற்றி அருமையான கட்டமைப்பை உருவாக்கி விட்டது.

வாக்காளர் வருகை 100 சதவீதத்தை எட்ட வாக்குப் பெற்று வென்றவர் வாக்காளர்களுக்கு பதில் சொல்லும் முறையை இனி வருங்காலத்தில் உறுதி செய்வது எப்படி? என்பதற்கு முக்கியத்துவம் தந்து யோசிக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.


தமிழகத்தில் தேர்தல் களம் தயார் – வை–மை தரும் நல்ல தலைமை… பாகம் –1


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *