திருப்பதி, ஜன. 24–
விஜபி தரிசன நன்கொடை மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.650 கோடி கிடைத்திருப்பதாக, தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலை தேவஸ்தானம் (TTD) நிர்வகித்து வருகிறது. இந்த தேவஸ்தானம் ”ஸ்ரீ வெங்கடேஸ்வர அலயால நிர்மானம் டிரஸ்ட்” (Srivani) என்ற பெயரில் அறக்கட்டளையை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இதில் பக்தர்கள் பலரும் தொடர்ச்சியாக நன்கொடை அளித்து வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீவானி டிரஸ்ட், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக எஸ்.சி, எஸ்.டி, பி.சி காலனிகளில் கோயில்கள் கட்டுவது, பழமை வாய்ந்த இந்து கோயில்களை புதுப்பிப்பது, நிதி நெருக்கடியால் தவித்து வரும் கோயில்களை போதிய நிதியை ஒதுக்குவது, தூப – தீபா நெய்வேத்யம் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
ரூ.650 கோடி வசூல்
மேலும் ஸ்ரீவானி டிரஸ்டிற்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தால் அவர்களுக்கு ஒரு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படும். இந்நிலையில் விஐபி தரிசன டிக்கெட் மீதான மவுசு கூடியதால் பலரும் ஆர்வத்துடன் நன்கொடை அளிக்க தொடங்கினர். இதன் விளைவாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஸ்ரீவானி ட்ரஸ்டிற்கு 650 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீவானி ட்ரஸ்டில் உள்ள நிதியானது படிப்படியாக மாநில அரசுக்கு அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விளக்கமளித்துள்ள தர்மா ரெட்டி, ஸ்ரீவானி டிரஸ்டிற்கு பெறப்படும் நிதி முழுவதும் வெளிப்படையான முறையில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென்று தனியாக ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நிரந்தர வைப்புத் தொகையாக வெளிப்படைத் தன்மை உடன் பணம் போடப்படுகிறது. தேவஸ்தானத்தின் பொது வங்கிக் கணக்கில் கூட போடப்படுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.