செய்திகள்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்ட மண் பரிசோதனை பணி துவங்கியது

திருச்சி, செப். 12–

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி இன்று துவங்கியது.

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகள் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. முதலமைச்சர் உத்தரவுப்படி இடிந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. ஆற்றுக்குள் இரும்பு குழாய்கள் மற்றும் சவுக்கு கட்டைகளை இறக்கியும், பெரிய பாறாங்கற்களை கொட்டியும், மணல் மூட்டைகளை அடுக்கியும் தண்ணீரை தேக்கினர். ஆனாலும் நீர்க்கசிவு முழுமையாக தடுத்து நிறுத்தப்படவில்லை. தண்ணீர் கசிந்து செல்வதை தடுத்து நிறுத்தும் பணியில் இன்னும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்கொம்பில் உடைப்பு ஏற்பட்டதும், தற்காலிக சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மேலணையிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் புதிய அணை ஒன்று கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது, முழுமையாக இரண்டு பக்கங்களிலும் கொள்ளிடத்தில் கட்டுகிறோம். 325 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பகுதியில் செய்கிறோம், அந்தப் பகுதியில் 10 கண்மாய் இருக்கிறது, அதற்கு 85 கோடி ரூபாய் மதிப்பில் அந்தப் பணியை அங்கு துவக்குகிறோம். ஆகவே, இரண்டு பகுதிகளிலுமே, புதிதாக 100 மீட்டருக்கு அப்பால் கதவணை கட்டப்படும், கிட்டத்தட்ட 15 மாதத்தில் கட்டுவதற்கு நிபுணர் குழு தெரிவித்திருக்கின்றார்கள். அந்தப் பணிகளெல்லாம் வேகமாக, துரிதமாக நடைபெறுவதற்குண்டான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். இந்த பணிகள் 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

6 பேர் குழு சோதனை

முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து புதிய கதவணை கட்டுவதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் 6 பேர் முக்கொம்புக்கு வந்து தங்களது ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளனர்.

இந்த குழுவினர் முதல்கட்டமாக 45 மதகுகள் கொண்ட அணையின் அருகில் 9 இடங்களிலும், 10 மதகுகள் கொண்ட அணை பகுதியில் 4 இடங்களிலும் மண் பரிசோதனை செய்வதற்கான பூர்வாங்க பணிகளை இன்று தொடங்கி உள்ளனர்.

இதற்காக அந்த பகுதிகளில் ஆற்றுக்குள் கருவிகள் மூலம் துளை போடப்பட்டு வருகிறது. மண்ணின் உறுதித்தன்மை, நீர்மட்டம் ஆகியவற்றை அறிவதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படுவதாகவும், மேலும் நவீன கருவிகளின் உதவியுடன் நிலம் அளவு எடுக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் புதிய கதவணையை எப்படி அமைப்பது? என்பது பற்றிய வரைபடம் தயாரிக்கப்பட இருப்பதாகவும் தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *