செய்திகள்

திருச்சியில் பெரியார் உலகம்: 17-ந்தேதி மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

திராவிட கழக தலைவர் கி.வீரமணி தகவல்

சென்னை, செப்.7-

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு, சென்னை பெரியார் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17ந்தேதி அடிக்கல் நாட்ட இருப்பதாக திராவிட கழக கி.வீரமணி தெரிவித்து உள்ளார்.

திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம், கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்தில், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் துரை சந்திரசேகர், வீ.அன்புராஜ், ரா.ஜெயக்குமார், பொருளாளர் பி.குமரேசன், மாநில பிரச்சார செயலாளர் வக்கீல் அருள்மொழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மத்திய அரசு, வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து அனைத்து சமூக அமைப்புகளும் நீதிமன்றத்திலும், வீதிமன்றத்திலும் போராட வேண்டும் என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பின்னர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரியாரின் பிறந்தநாள் விழா சமூக நீதி விழாவாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு 2-வது ஆண்டாக பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா வருகிற 17ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளார். அன்றைய தினம், திருச்சி மாவட்டம் சிறுகனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரியார் உலகம் பணி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *