தருமபுரி, மார்ச் 7–
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் மின்வேலி அமைத்த விவசாயி பலியானார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த யானைகளை அடர்வனப் பகுதிக்கு இடம் பெயரச் செய்ய வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவற்றின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், பாலக்கோடு வட்டம் காளி கவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி நேற்று இரவு 2 பெண் மற்றும் 1 ஆண் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் அப்பகுதியில் தவிப்புடன் சுற்றி வருகின்றன.
யானைக்குட்டிகளை வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்யும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விளை நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்த பாறைக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (50) என்ற விவசாயியை பாலக்கோடு போலீசார் கைது செய்துள்ளனர்.
இது பற்றி அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறும்போது, ‘கடும் நோய் தாக்கம், ஆள் பற்றாக்குறை, நிலையற்ற சந்தைத் தன்மை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இடையில் விவசாயிகள் வேளாண் தொழிலை செய்து வருகின்றனர். விளைநிலத்தை தரிசாக விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு செல்ல மனமில்லாமல், பல சிரமங்களையும் பொறுத்துக்கொண்டு விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.
யானை, காட்டெருமை, காட்டுப் பன்றி, மயில், குரங்கு, மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாயிகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. அவைகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் தொடர்ந்து வனத்துறைக்கும், அரசுக்கும் கோரிக்கை வைக்கின்றனர். ஆனாலும் அரசு தரப்பில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படவில்லை. இது போன்ற சூழலில், பயிர் தொடர்ந்து நாசமாவதை தாங்க முடியாமல் ஒரு சில விவசாயிகள் சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கும் நிலைக்கு செல்கின்றனர் என்று கூறினார்.