நாடும் நடப்பும்

தமிழ்ப் பணியில் சிறப்பித்த மூவர் : அடுத்தடுத்து மறைவு!


ஆர்.முத்துக்குமார்


அரிய மனிதர்களில் சிலர் எதிர்பாராத வயதில் அகால மரணம் அடைந்து விடுவதை கண்டு அதிர்ச்சியும் துன்பமும் அடைவது வாடிக்கையாகி வருகிறது. இயற்கை சீற்றம், விபத்து போன்ற சில எதிர்பாராத நிகழ்வுகளை யாராலும் தவிர்த்து விட முடியாது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

முன்னரே அறிந்தால் குணப்படுத்திவிட முடியும், அல்லது மரணத்தை தள்ளிப்போட முடியும் என்பது போன்ற பாதிப்புகளில் அரிய மனிதர்களை திடீரென இழக்கும்போது நமக்கும் சமூகத்துக்கும் ஆறுதல் கூற முடியாது என்பதே உண்மை. அந்த வகையில் கடந்த 6 ந்தேதி தொடங்கி 11 ந்தேதிக்குள் ஒரே வாரத்தில் 3 தமிழ் ஆர்வலர்களை தமிழ் கூறும் நல்லுலகம் இழந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மானுட நேயர்

மகிழ்கோ: தமிழ் ஆர்வலர். உவமைக் கவிஞர் சுரதாவின் நெருங்கிய நண்பராய், சுரதாவின் இறுதி காலங்களில் அவருடைய அணுக்கத் தொண்டராகவும் விளங்கியவர் (ம.ஆனந்தராசன் எனும்) ஓவியப் பாவலர் மகிழ்கோ. இந்திய ஒன்றிய அரசின் தொழில்துறை அமைச்சகத்தின் கீழான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தில் பணி புரிந்தாலும், தமிழ் ஈடுபாடும் பெரியாரிய சிந்தனையும் அவருடைய அலுவல் பணிக்கு இணையான செயல்பாடுகளாக இருந்தன.

அந்த அடிப்படையில் சாதி மத வேறுபாடு இன்றி, தமிழ்நாடு முழுவதும் இருந்து, தன்னிடம் தொழில் பயிற்சி பெற வந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் உதவியாய் இருந்துள்ளார். தொழில் பயிற்சியை கடந்து அரசு அலுவலகங்களில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் காலநேரம் பார்க்காமல் உடன் இருந்து செய்பவர்.

மேலும் எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் தனிமனித இயக்கமாய் தன் கைக் காசை சற்றும் யோசிக்காமல் செலவு செய்பவராய் காலமெல்லாம் இருந்துள்ளார். அதனால் அவருடைய வாழ்நாளில் எந்த பணம் பொருளையும் பெரிதாக சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக இறுதி வரை மனித நேயம் மாறாமல் வாழ்ந்த அவர், தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற மனிதர்களைதான் தனது சொத்தாக சேர்த்து வைத்துள்ளார். உரிய நேரத்தில் கண்டுபிடிக்காத புற்றுநோய் காரணமாக ஏற்பட்ட அவருடைய திடீர் இழப்பு, அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மட்டுமின்றி தமிழ்கூறும் நல்லுலகுக்கும் மனித நேயத்துக்கும் பெரும் இழப்பு என்றே சொல்லலாம்.

தமிழை வளர்த்தவர்

பிறைசூடன்: திரை இசையால் தமிழை வளர்த்தவர். தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும், நடிகரும் ஆவார். இவர் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும் 100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும் 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் “கலைச்செல்வம்” விருதையும் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கபிலர் விருதும் பெற்றுள்ளார்.

நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் – உடன்பிறப்பு என மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியால் புகழப்பட்டவர். திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்தவர். அத்துடன் ஆன்மீக சொற்பொழிவு கூட்டங்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும் தொடர்ந்து பேசி வந்தவர்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பல முக்கியமான பங்களிப்புகளை வழங்கிய பிறைசூடன் ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்களைப் பரிந்துரைக்கும் குழுவில் சமீபத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கவி அரங்கம், பேச்சரங்கம் என எதிலும் ஆர்பாட்டம் சிறிதுமின்றி, அமைதியாக ஆனால் ஆழமான கருத்துகளை எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்வதில் வல்லவர். உணவு உண்டுவிட்டு, குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது மயங்கி விழுந்து இறந்து போனார் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவருடைய இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி இசை உலகுக்கும் தமிழுக்கும் பெரும் இழப்பு எனலாம்.

ஆன்மிக சொற்பொழிவாளர்

பால ரமணி: ஆன்மிக சொற்பொழிவாளர். பிரபல எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் கணவர் என்பதுடன் கவிஞர், எழுத்தாளர், சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் பால ரமணி. கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஒன்றியம் மூங்கிலடி என்ற கிராமத்தில் பிறந்த இவர், கம்பராமாயணம் குறித்து ஆய்வுகள் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தார். நூல்களையும் எழுதியுள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசின் கம்பர் விருது மற்றும் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சராசரி வாழ்நாளுக்கும் குறைவு

ஒரு வார காலத்தில் அடுத்தடுத்து மறைந்த 3 பேருக்கும் கவிஞர் என்ற பொது ஒற்றுமையுடன் தமிழ் ஆர்வம், மனித நேயம் என்ற பொதுத்தன்மை உண்டு. அதனைக் கடந்து, இன்றைய இந்தியர்களின் சராசரி வாழ்நாளோடு ஒப்பிடும்போது, மிகக் குறைந்த வாழ்நாளில் (62 முதல் 65 வரையான வயது) 3 பேரும் நம்மை விட்டு போய் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது.

தமிழ் நலனில் போதிய அக்கறை செலுத்தியவர்கள், தாங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால்தான் தமிழுக்கு தொண்டு செய்ய முடியும் என்று தங்கள் உடல் நலனில் போதிய அக்கறையை செலுத்தினார்களா என்று தெரியவில்லை. அப்படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது உடல்நல பரிசோதனை செய்து கவனித்து இருந்தால் இத்தகைய அரிய மனிதர்களை நாம் இழந்திருக்க மாட்டோம் என்று உறுதியாய் நம்பலாம். எத்தனை மருத்துவ வசதிகள் பெருகி இருந்தாலும் கூட நம்மிடமும் போதிய விழிப்புணர்வு வேண்டும் என்பதே இவர்கள் மரணத்தில் நாம் படித்துக்கொள்ள வேண்டிய பாடம்.

தமிழுக்கு இம்மூவரின் அர்ப்பணிப்பு அபாரமானது. அதனால் தங்களது உடல் ஆரோக்கியம், சொந்த வாழ்க்கை பற்றி கவனியாது ‘மெய்’ மறந்து தமிழ்ப் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் இப்படி மிக இளம் வயதிலேயே நம்மை விட்டு பிரிந்து உள்ளனர்.

அவர்களது தமிழ்ப்பற்றை பாராட்டும்போது, உடல் ஆரோக்கிய விவகாரத்தில் , ‘சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்’ என்பதை மறந்து விடக்கூடாது என்பதையும் நமக்கு சுட்டிக்காட்டியே விடை பெற்றுச் சென்றுள்ளார்கள்.

இம்மூவரும் ‘மக்கள் குரல்’, ‘டிரினிட்டி மிரர்’ ஆசிரியர் குழுமத்துடன் நெருங்கிய தொடர்புடைய நண்பர்கள் என்பதையும் நினைவு கூர்ந்து அவர்களது மறைவுக்கு ‘மக்கள் குரல்’, ‘டிரினிட்டி மிரர்’ கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *