செய்திகள்

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும்: பள்ளிக்கல்வி ஆணையர் உறுதி

சென்னை, ஏப்.25-

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நீண்டகாலமாக அமலில் உள்ள இருமொழி கொள்கையை மாற்றி மும்மொழி கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழி கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுப்படுத்தி உள்ளது. தாய்மொழியாகிய தமிழ், உலகத்துக்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழி கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது.

2006-ம் ஆண்டின் தமிழ்நாடு (தமிழ் மொழி கற்கும்) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாய பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்தம் தாய்மொழியையும், விருப்ப பாடமாக படித்து தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

எனவே தமிழ்நாடு அரசால் தெளிவுப்படுத்தப்பட்ட மொழி பாடக்கொள்கை குறித்து உண்மைக்கு புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்பவேண்டாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.