செய்திகள்

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு, பணம் பெற டோக்கன்: இன்று முதல் விநியோகம்

சென்னை, டிச. 27–

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு, பணம் பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டது. இந்த பரிசு தொகுப்பை, ஜனவரி 2 ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க, அமைச்சர்கள் மாவட்டங்களில் தொடங்கி வைக்க உள்ளனர்.

இன்று முதல் டோக்கன்

இந்நிலையில், ஜனவரி 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில், அதனை பெறுவதற்காக, இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி நடைபெறுகின்றன. பரிசு தொகுப்பு தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டு பயனாளர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.

மேலும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த நாளில், இந்த குடும்பத்துக்கு பொங்கல் பரிசு மற்றும் பொருட்கள் வழங்கப்படும் என்ற விவரங்கள் விபர பலகை மூலமாக தெரியப்படுத்தப்படும். பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்காக பயனாளர்கள் ஒரே நேரத்தில் கூடி, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது.

விடுமுறைக்காக வெளியூர் சென்றவர்கள் டோக்கன் பெற முடியாத சூழல் ஏற்பட்டாலும் பொங்கல் பரிசு வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது. போகிப் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து பயனாளர்களுக்கும் பரிசுத் தொகுப்பை வழங்க அறிவுறுத்தப்படுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *