செய்திகள்

தமிழக அரசுக்கு வணிகவரிகள், பதிவுத்துறை மூலம் ரூ.23 ஆயிரத்து 314 கோடி கூடுதல் வருவாய்

சென்னை, நவ.19-–

வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை மூலம் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டைவிட ரூ.23 ஆயிரத்து 314 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-–

வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிக வரித்துறையில் கடந்த ஆண்டில் இதே மாதம் ரூ.56 ஆயிரத்து 310 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் ரூ.20 ஆயிரத்து 529 கோடி கூடுதலாக அதாவது ரூ.76 ஆயிரத்து 839 கோடி வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பதிவுத்துறையில் கடந்த ஆண்டு 17.11.2021 அன்று ரூ.7,877.52 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. ஓராண்டு கடந்த நிலையில் 17.11.2022 வரை ரூ.2,785.65 கோடி கூடுதலாக அதாவது ரூ.10 ஆயிரத்து 633.17 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வகையில் இரண்டு துறைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.23 ஆயிரத்து 314.65 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக வணிக வரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக, இவ்விரு துறைகளிலும் இதுவரை இல்லாத அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிக வரித்துறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வரி செலுத்தும் வணிகர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 54 ஆயிரத்து 153 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி வரி வரம்புக்குள் கூடுதலாக 1 லட்சத்து 19 ஆயிரத்து 186 வணிகர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வணிக வரித்துறையில் வரித் தணிக்கைகள், கூடுதல் சுற்றும் படைகள் மூலம் சரக்கு வாகனங்களை கண்காணித்தல், சோதனை கொள்முதல் அதிகரிப்பு, போலி பட்டியல் வணிகம் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே வணிக வரித்துறை வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

பதிவுத்துறையிலும் பதிவு பணி நாட்கள் அதிகப்படுத்தியது, பதிவு நாளன்றே ஆவணங்களை திருப்பி தருவது, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவில் முன்னுரிமை, பதிவுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக பதிவு எல்லைகளை சீரமைத்தது மற்றும் புதிதாக 5 பதிவு மாவட்டங்களை உருவாக்கியது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக தொடர்ந்து பதிவுத்துறையிலும் வருவாய் அதிகரித்து வருகிறது.

இரண்டு துறைகளும் ரூ.23 ஆயிரத்து 314.65 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியதை முன்னிட்டு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வணிக வரி ஆணையர் தீரஜ்குமார், வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள் மற்றும் வணிக வரி இணை ஆணையர் (நிர்வாகம்) சங்கீதா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *