செய்திகள்

தமிழகத்தையே உலுக்கிய கச்சநத்தம் படுகொலை வழக்கு: 27 பேருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகங்கை, ஆக. 5–

தமிழகத்தையே உலுக்கிய கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபாச்சேத்தி அருகே கச்சநத்தம் என்ற கிராமம் உள்ளது. இது ஆதிதிராவிட இன சமூகத்தினர் அதிகம் வசிக்கும் கிராமம் ஆகும். இந்த கிராமத்தினருக்கும், ஆவாரங்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்களும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 2018ல் கச்சநத்தம் கிராமத்தில் கருப்பர் கோயில் திருவிழா நடந்தது. சாமி கும்பிடும் போது முதல் மரியாதை வழங்குவதில், இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆவரங்காடு கிராம இளைஞர்கள் மீது பழையனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த ஆவரங்காடு கிராமத்தினர், கச்சநத்தம் கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் வீடுகளை சேதப்படுத்தி, அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்டனர். பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த படுகொலை சம்பவத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. இதுதொடர்பாக பழையனூர் போலீசார் வழக்குப்பதிந்து சுமன், அருண்குமார், சந்திரக்குமார் உள்ளிட்ட 33 பேரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்தரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 27 பேர் மதுரை, திருச்சி, மகளிர் சிறைகளில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 27 பேர் குற்றவாளிகளாக சிவகங்கை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

இதனையொட்டி, திருப்புவனம், சிவகங்கை நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில், குற்றச்சாட்டப்பட்ட ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.