செய்திகள்

தமிழகத்தில் 16 ந்தேதி வரை கனமழை: புயலுக்கு வாய்ப்பு

சென்னை, மே 12–

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அரபிக் கடலில் 14 ந் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

மேலும் நீலகிரி ,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

14ந் தேதி நீலகிரி, கோவை, தென் தமிழக மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களில் இடி, மின்னலுடன் காற்று வீசக் கூடும் என்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 15ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், மற்றும் காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஒரு இடங்களில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

16ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *