செய்திகள்

தமிழகத்தில் ரூ.40 கோடியில் வெங்காய சாகுபடி இயக்கம்

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை, ஏப்.14-

ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்க தமிழகத்தில் ரூ.40 கோடியில் வெங்காய சாகுபடி இயக்கம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் முடிந்ததும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

முதலமைச்சரின் ஆணைப்படி, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், 2022–2023ம் ஆண்டில் 15 புதிய அறிவிப்புகளை ரூ.104 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

விளைநிலங்களில் மண் வளத்தை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்திடவும், இந்த ஆண்டில் நெல் தரிசில் பயறு சாகுபடி திட்டம் 10 லட்சம் ஏக்கரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் வெங்காய சாகுபடி பரப்பை உயர்த்தியும், வெங்காய சேமிப்பு அமைப்புகளை உருவாக்கியும், பொதுமக்களுக்கு ஆண்டுமுழுவதும் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையில், இந்த ஆண்டில் வெங்காய சாகுபடி இயக்கம் ரூ.40 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

இந்த ஆண்டில் தர்மபுரி மாவட்டத்தில் மா மகத்துவ மையமும், நெல்லை மாவட்டத்தில் நெல்லி மகத்துவ மையமும் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடியை அதிகரித்திட ரூ.4 கோடியே 20 லட்சம் செலவில் முந்திரி மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் பலா மதிப்பு கூட்டும் மையம் ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி–1, கள்ளக்குறிச்சி–2, செங்கல்ராயன், பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளில் புதிய உருளை கொள்முதல் செய்யவும், கள்ளக்குறிச்சி–1, கள்ளக்குறிச்சி–2, எம்.ஆர்.கே, செங்கல்ராயன், தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவைப்பகுதியை தானியங்கி மயமாக்கவும் ரூ.3 கோடியே 81 லட்சம் ஒதுக்கப்படும்.

வேலூர், அறிஞர் அண்ணா, தர்மபுரி சர்க்கரை ஆலைகளின் அரவை எந்திர மின் மோட்டாரை கட்டுப்படுத்தும் கருவிகளும், செங்கல்ராயன், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு, பல் சக்கரத்துடன் கூடிய அழுத்த உருளையின் மின் மோட்டாரை கட்டுப்படுத்தும் கருவியும் ரூ.2 கோடியே 7 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.