வாழ்வியல்

தன்னம்பிக்கை, அன்பு , உதவி என்ற நல்லுறவுப் பண்புகளைப் பெருக்கி மனத்தளர்ச்சியை விரட்டி முன்னேறுவது எப்படி ?

தன்னம்பிக்கை, அன்பு ,உதவி என்ற நல்லுறவுப் பண்புகளைப் பெருக்கி மனத்தளர்ச்சியை விரட்டி முன்னேறுவது எப்படி ? என்ற உளவியல் ஆராய்ச்சிக் கருத்துகள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மனம் உற்சாகமாக இருக்க அடிப்படையாக மூன்று விதமான நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. இவை தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை, அன்பு என்ற உறவுப்பிடிப்பு, எதிர்காலம் என்ற நம்பிக்கை ஆகியவை ஆகும்.

நமது வாழ்க்கை மேல் உள்ள ஈடுபாடு, ஆர்வம் இந்த மூன்றிலும் இருக்கின்றது. முதலில் நான், தான் என்ற கடந்தகாலம், சாதனைகள், இனிய நினைவுகள் தொடர் வெற்றிகள் போன்றவை நம்மை உற்சாகப்படுத்துகின்றன.

ஆனால் மனத்தளர்ச்சி ஏற்படும்போது நான் எதையும் சாதிக்கவில்லை; நான் உபயோகமில்லாதவன்; நான் தாழ்வானவன், எனது இறந்த காலம் துயரமானது என்ற தாழ்வு மனப்பான்மையும் அவநம்பிக்கையும் ஏற்படுகிறது.

அப்போது முதலிலிருந்த மனநிலையில் இருந்து விலகல் ஏற்படுகின்றது. இரண்டாவதாக பெற்றோர், உறவினர், குழந்தைகள், நண்பர்கள், சமூகத்தினர் யாராவது நம்மிடம் அன்பு பாராட்டி உதவிகள் செய்வார்கள் என்ற நிகழ்கால நம்பிக்கை துணைக்கு வருகின்றது. இதிலும் நான் ஆதரவற்றவன், எனக்கு யாருமில்லை என்ற அவநம்பிக்கை ஏற்படும்போது எனக்கும் ஒரு எதிர்காலம் உண்டு நான் வாழ்வேன் என்ற எண்ணமும் இறை நம்பிக்கையும் தொடர்ந்து தளராமல் உழைக்கத் தூண்டுகிறது.

ஆனால் நாளை நமக்கில்லை என்ற நிலை ஏற்படுமாயின் மூன்றாவது பாதுகாப்பிலிருந்தும் நழுவி விடுகின்றது. இதனால் குழப்பம், மயக்கம், கலக்கம், சஞ்சலம், துக்கம், சலிப்பு, களைப்பு, தவிப்பு, தனிமை, விரக்தி, வேதனை, அழுகை, ஆங்காரம் போன்ற பல எதிர்மறை உணர்ச்சிகள் உருவாகின்றன. விளைவாகப் பலருக்கு இயக்கமின்மை, கவனமின்மை, உற்சாகமின்மை, தெம்பின்மை, சிந்தனையின்மை, தெளிவின்மை, தீர்மானமின்மை, தன்னம்பிக்கையின்மை, ஆர்வமின்மை, உணர்ச்சியின்மை, பாசமின்மை, மகிழ்ச்சியின்மை, பொழுதுபோக்கின்மை ஏற்படுகிறது. இதனால் குற்ற உணர்வு, சுயவெறுப்பு மற்றவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது. மனத்தளர்ச்சியினால் மனநோய்கள் ஏற்படும்.

இப்படியான மனத்தளர்ச்சி நிலமை இரண்டு கிழமைகளுக்கு மேலாகவும் எந்த ஒரு விடயத்திலுமோ ஆர்வமற்று, மகிழ்ச்சியற்று இருப்பார்களாயின், அந்நிலையை பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு (MDD – Major Depressive Disorder) என அழைப்பர். இதைப் போக்க ….

என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை, அன்பு என்ற உறவுப்பிடிப்பு, எதிர்காலம் இனியதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை ஆகிய உள்ள உறுதியுடன் ‘‘முயற்சி செய்வேன் ; வெற்றி பெறுவேன்’’ என்ற எண்ணத்தை உள்ளத்தில் ஏற்படுத்தி அதை செயலில் வெளிப்படுத்தி தொல்வியில் துவண்டு விடாமல் அதில் நல்ல பாடம் கற்றுக்கொண்டு இடைவிடாமல் முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அதனால் புதியபரிணாம வளர்ச்சிப்படியில் மனித மனமும் உடலும் மகிழ்ச்சியுடன் மனத்தளர்ச்சி மறைந்து நேர்மறை உணர்வு ஏற்படும் . தலைக்கு மேல் வெள்ளம் போனபின் சாணென்ன, முழமென்ன என்ற துணிச்சல் தோன்றி புதுத் தெம்பைத் தரும்.

சோர்வும் ஆற்றாமையும் ஓடிவிடும். இடையூறுகளை உடைத்தெரியும் ஆற்றல் ஏற்படும். அப்போது மனதின் ஆற்றல் எல்லாம் பொலிவுடன் மேலோங்கி மனத்தளர்ச்சியை விரட்டி வளர்ச்சியுடைய வெற்றிப்பாதைக்கு வழிகாட்டும் என்று உளவியல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *