சென்னை, மார்ச் 11–
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுவரும் நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
அண்மை காலமாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை சற்று குறைந்தாலும், பெரும்பாலும் விலை அதிகரித்தபடியே உள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,000-த்தை தாண்டியது.
சவரனுக்கு ரூ.240 குறைவு
இதற்கிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,050-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,020-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து கிராமுக்கு ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.