செய்திகள்

ஜி20 கூட்டமைப்பின் மாநாடு நாளை தொடக்கம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே இன்று பேச்சுவார்த்தை

ஜகார்தா, நவ. 14–

இந்தோனேசியாவின் பாலி நகரில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் இன்று சந்தித்து பேசுகின்றனர்.

உலகின் முன்னணி பொருளாதாரங்களைக் கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் மாநாடு பாலியில் நாளை தொடங்குகிறது. அதில் கலந்து கொள்வதற்காக பாலி வருகை தரும் அமெரிக்க அதிபர் பைடனும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இன்று சந்தித்துப் பேசவுள்ளனா். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதிபர் ஷி ஜின்பிங்கை அவர் நேரில் சந்தித்துப் பேச இருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 5 முறை காணொளி, தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்திகளாகத் திகழும் இரு நாடுகளின் அதிபர்கள் சந்தித்துப் பேசவுள்ளது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்டவற்றால் சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர், இரு நாடுகள் சார்பிலும் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டவையும் சர்வதேச அளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. தைவான் விவகாரத்திலும் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு காணப்படுகிறது.

இத்தகைய சூழலில், அதிபர்கள் பைடன்-ஜின்பிங் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பருவநிலை மாற்றம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *