சிறுகதை

சோம்பேறிகள் ராஜா செல்லமுத்து

பனிவிழும் அதிகாலை தொடங்கி சுள்ளென வெயிலடிக்கும் விடிகாலை வரைக்கும் இடியாப்பம் புட்டு வடைகறி என்ற சத்தம் அகிலன் தெரு கண்ணகி தெரு நெடுஞ்செழியன் தெரு என நகரத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
ஒருவன் மாற்றி ஒருவனாக வந்து கொண்டே இருப்பார்கள். இது ஆனந்திற்கு சந்தோசத்தைத் தந்தாலும் ஒரு பக்கம் எரிச்சலைத் தந்தது.
யார்ரா இவங்க. காலங்காத்தால தூக்கத்த எழுப்பி விட்டுட்டு…. டேய் சும்மா போகமாட்டீங்கனா? இந்த பனியில் எவன்டா இடியாப்பம் வடைகறி வாங்குவான். போக மாட்டானுக போல. அதிலயும் சும்மா சத்தம் போட்டாலும் பரவாயில்ல .ரெகார்ட் பண்ணி அத பென் டிரைவ்ல போட்டு ஸ்பீக்கர்ல இவ்வளவு சத்தமா வச்சிட்டு இருக்காங்க.
நீ வேற இதுவாவது பரவாயில்ல . பல்லு நடுங்குற இந்த பனியில ஒருத்தன் எளநீர் எளநீர் செவ்வெளநீர் இப்படி கத்திட்டு போவான் அப்பிடியே எவன் என்ன வேணாலும் பேசலாம். என்ன வேணும்காலும் செய்யலாம்னு ஆகிப் போச்சு .இத கேக்கிற உரிமையோ எதிரக்கிற உரிமையோ எவனுக்குமில்லைன்னு சொல்லிட்டாங்கள்ள என்று புரண்டு படுத்துக்கொண்டே பேசினான் சிவா.
அதுக்கு இப்பிடியா என்ன? காலையிலயே இவ்வளவு சத்தமா வால்யூம் வச்சு கொன்னுட்டு இருக்காங்க என்ற படியே ஆனந்தும் புரண்டு படுத்தான்.
இருவரும் மெல்ல பேசிக் கொண்டே இருந்தனர்.
மணி என்னாடா ஆகுது?
ஆறு முப்பத்தஞ்சு
என்ன ஆறு முப்பத்தஞ்சா?
ஆமா
ஐயய்யோ இந்நேரம் முழிப்பு வந்திருச்சே. இதுக்கெல்லாம் அந்த இடியாப்பக் காரனுக தான் காரணமுடா ஒருத்தன் மாத்தி ஒருத்தி இடியாப்பம் வடைகறி புட்டுன்னு சொல்லியே நம்மள உசுப்பி விட்டுட்டாங்க. நாமெல்லாம் நாக்குல தண்ணியில்லாம உப்பு சப்புன்னு எதுவுமில்லாம உட்காரந்திட்டு இருக்கும் போது இவங்க வேற இப்படி சத்தம் வச்சிட்டு போனா எவனுக்கு தூக்கம் வரும்…. தெனமும் இப்படி தாண்டா நம்மள எழுப்பி விட்டுர்றாங்க. ஏண்டா ஆனந்த்து.
ம்
முன்னமெல்லாம் ஒரு ஆள்தான இடியாப்பம் வித்திட்டு வருவான்.
ஆமா
ஆனா இப்பயெல்லாம் நிறைய பேரு வித்து வாரானுகால
ம்
இதுல இருந்து என்ன தெரியுது
வியாபாரம் அதிகமாச்சுன்னு தெரியுது.
போடா இவனே இவ்வளவு ஆளுக வாரானுகன்னா வீட்டில எல்லாரும் சோம்பேறியா போய்ட்டாங்கன்னு அர்த்தம்டா
என்ன சொல்ற?
ஆமாடா
இப்ப இருக்கிறவங்க எங்க காலையில எந்திரிச்சு வாசல் தெளிச்சு கோலம் போடுறாங்க
வாசலே இல்ல .எல்லாம் அப்பார்ட்மெண்ட். எப்படி கோலம் போட முடியும்? வாசல் இருந்திட்டாலும் கோழி கூப்பிட எந்திரிச்சு கோலம் போட்டுட்டு தான் மறுவேல பாப்பாங்க. கல்வி வாழ்க்கையை மட்டும் மில்ல நம்ம பண்பாட்டையும் காலச்சாரத்தையும் கூட கொஞ்சம் சீரழிச்சதா நினைக்கிறேன் என்ற ஆனந்த் மெல்ல எழுந்து பனிக்கட்டியாய் குளிர்ந்து போயிருந்த தண்ணீரை எடுத்து முகம் கழுவினான்.
யப்பா என்னமா குளிருது. இந்த பனியில எழுப்பி விட்டுட்டானே படுபாவி என்று தனக்குத் தானே பேசிக்கொண்டே முகம் கழுவினான்.
இடியாப்பம் புட்டு வடைகறி என்ற ஸ்பீக்கர் சத்தம் கேட்டு இவன என்ற ஆனந்த் வாசலுக்கு ஓடிவந்தான்.
தம்பி இடியாப்பம் இங்க வா என்று ஒரு பெண் கூப்பிட இடியாப்ப வண்டி மெல்ல நகர்ந்து கேட்டவள் முன்னால போய் நின்றது.
முப்பது ரூபாய்க்கு இடியாப்பம், மூணு வடைகறி என்றாள் அந்தப் பெண்.
‘‘ உனக்கெல்லாம் என்ன ஆச்சு நல்லா தானே இருக்க. சமச்சு சாப்பிட்டா கொறஞ்சா போயிருவ .’’திட்டிக் கொண்டே நின்றிருந்தான்.
புட்டு இடியாப்பம் வடைகறி என்ற ஸ்பீக்கர் சத்தம் மறுபடியும் கேட்க திரும்பினான். அதே தெருவில் இன்னொரு இடியாப்பக்காரன் வந்து கொண்டிருந்தான்.
இடியாப்பம் இங்க வாங்க என்று மேல்மாடியிலிருந்து ஒருத்தி கயிறு கட்டி துணிப்பையை கீழே இறக்கினாள்.
அம்பது ரூபாய்க்கு இடியாப்பம் நாப்பது ரூபாய்க்கு வடைகறி அஞ்சு புட்டு என்ற பட்டியலை மேலே இருந்து ஒபபித்தாள் ஒரு பெண்.
ஏய் நீயும் சமைக்கலயா?
டேய்…. சிவா இங்க வந்து பாருடா என்று கொஞ்சம் சத்தமாகக் கூப்பிடடான் ஆனந்த்.
என்னாச்சு என்று ஓடிவந்தான் சிவா.
அங்க பாரு என்று காட்ட …..
நீ சொன்னது சரிதாண்டா. எல்லாரும் பெரிய சோம்பேறி தான் என்று இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த அதிகாலையில் இடியாப்ப வியாபாரம் களை கட்டிக் கொண்டிருந்தது.
செய்வதற்கு நேரமிருந்தும் அதைச் செய்யாதவர்கள் சோம்பேறிகள்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *