செய்திகள் வாழ்வியல்

சேரன்மகாதேவியில் மழை வளம் தரும் மிளகு பிள்ளையார் கோவில்

அருள்மிகு மிளகு பிள்ளையார் கோவில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ளது.

இந்த திருத்தலம் நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கன்னடியன் கால்வாய் என்ற கால்வாயின் கரையின் ஓரத்தில் உள்ளது.

காஞ்சிப் பெரியவரும் அவரது காவ்ய மாலா என்ற புத்தகத்தில் இந்த கால்வாய் பற்றி குறிப்பிட்டுள்ளதும் 1916–ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரசு பதிவுப் புத்தகத்தில் இந்த மிளகு பிள்ளையாரின் வழிபாடு பற்றி வெளியிடப்பட்டுள்ளதும் பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சேரன்மகாதேவி பகுதி மக்கள் மழை குறைவாகவும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும் காலங்களில் இந்த விநாயகருக்கு மிளகை அரைத்துப்பூசி அபிஷேகம் செய்து அந்த நீரை கால்வாய்க்குள் விழச் செய்தால் மழை பொழிந்து செழிப்பை வரவழைப்பது அற்புதமான அருள் என்கின்றனர். பிராத்தனை நிறைவேறியவுடன் அபிஷேக ஆராதனை செய்து அன்னதானம் செய்கின்றனர்.

இந்த கால்வாயின் பெருமை என்னவென்றால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்கிறது. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு அடிக்கடி உரசி, சண்டை போடுவதை காண்கிறோம்.

கர்நாடக மாநிலத்தவரும் கேரள மாநில மக்களும் தங்கள் நாட்டில் இருந்து வெளிவரும் உபரி நீரை அண்டை மாநிலமான தமிழ்நாட்டுக்கு கொடுப்பதை தடுக்க அரசியல் ஆக்கி ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பதை காணும் இந்நாளில் இந்த கோவில் உருவான விதம் வியக்க வைக்கிறது.

கர்நாடகாவில் இருந்து இங்கு வந்த இளைஞன் ஒருவன், கேரள மன்னரிடம் இருந்து உதவி பெற்று, இங்கு தமிழ்நாட்டில் தண்ணீர் வருவதற்காக வழி செய்து கட்டிய கால்வாயின் பெயர் அவனது நினைவாக கன்னடியன் கால்வாய் என அழைக்கப்படுகிறது. அந்த கால்வாயின் கரையில் மிளகை அரைத்து விசேஷ வழிபாடு செய்து எந்த நாளும் வற்றாமல் ஓடும் கால்வாயாக தண்ணீர் வர, விநாயகர் கோவில் கட்டியது. அற்புதமானது என்கின்றனர்.

இது மிக மிக பழமை வாய்ந்த கோவில். இதன் தல புராண வரலாற்றின் படி கேரளத்தை ஆண்ட மன்னன் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி வந்து அது குணம் ஆகவில்லை. எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை. அநேக வைத்தியர்கள் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. இறைவனை வேண்டிய மன்னன் கனவில் சிவபெருமான் தோன்றி, உன் உயரத்திற்கு ஒரு உருவ பொம்மையை எள்ளினால் தயார் செய்து அதனுள் துவரம்பருப்பு அளவுக்கு மாணிக்க கற்களால் நிரப்பி அந்த பொம்மையை ஏதாவது ஒரு அந்தணருக்கு தானமாக கொடுத்தால், உன் நோய் தீர்ந்து விடும் என்றார். அது போன்றே பெரிய பொம்மை தயார் செய்து, மாணிக்க கற்களை நிரப்பி நாட்டிலுள்ள அந்தணர்களுக்கு செய்தி தெரிவித்தனர். ஆனால் அங்குள்ள அந்தணர் யாரும் பெற்றுக் கொள்ள முன்வரவில்லை.

சிலையைப் பெற்ற பிரம்மசாரி அந்தணர்

இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பிரம்மசாரி அந்தணர் அந்த சிலையை பெற்றுக் கொண்டான். அந்த சிலை இந்த பிரம்மச்சாரியின் கைக்கு வந்தவுடன் உயிர்பெற்றது. ஆச்சரியத்தை தந்தது. உடனே அந்த வாலிபனிடம் உன் காயத்ரி பலனில் ஒரு பகுதியை கொடுத்து விட்டால் என்றால் மன்னனுடைய வியாதி உன்னை எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றது. எனவே காயத்ரியின் பலனில் பாதியை பொம்மைக்கு தாரை வார்த்தான்.

இந்த தானம் அந்த பிரம்மசாரியின் மனதை கஷ்டப்படுத்தியது. சுயநலன் கருதி இந்த செயலை செய்து விட்டோமே என்று வருந்தி, இதற்கு பிராயச்சித்தம் தேட எண்ணினான். இந்த மாணிக்க கற்களை நல்லதொரு பொது நலன் தரும் காரியத்திற்கு உபயோகிக்கலாம் என்று முடிவெடுத்தான். எனவே பொதிகையில் வசித்து வரும் முனிரிஷி அகத்தியரிடம் கேட்க எண்ணி பொதிகைக்கு புறப்பட்டான். அதற்கு முன்னர் அம்பாசமுத்திரம் என்ற ஊரில் உள்ள ஒரு அந்தணரிடம் பொதிகை சென்று திரும்பி வரும் வரை மாணிக்கம் நிறைந்த சிலையை கொடுத்து விட்டு, பொதிகைக்கு புறப்பட்டான்.

பொதிகைக்கு அந்தணன் வருவதை அறிந்த அகத்தியர் பல சோதனைகளை அவன் முன் வைத்தார். அந்த சோதனைகளில் வெற்றி பெற்று இறுதியில் அகத்தியரை அடைந்து காலில் வீழ்ந்து வணங்கி தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டினான்.

வெள்ளைப்பசு வாலைப் பிடித்தல்

அகத்தியர் அவனிடம் நல்ல பலன் தரும் விஷயங்களில் முதலாவது தண்ணீர் தானம் தான். நான் காவிரி , தாமிரபரணி தந்தது போல் நீயும் இந்தப் பணியில் ஈடுபடு என்றார்.

நீ மலையில் இருந்து இறங்கியவுடன் உனக்காக அங்கு ஒரு வெள்ளை நிறப்பசு ஒன்று நிற்கும். அதன் வாலை நீ பிடித்துக் கொண்டால் அது முன்னே செல்லும். அது செல்லும் வழியை நீ நன்கு கவனத்தில் கொள். அந்த வழிகள் நீ கால்வாய் வெட்டி, அந்த பசு சாணம் போடும் இடங்களில் மதகுகள் அமைக்க வேண்டும். அது சிறுநீர் கழிக்கும் இடங்களில் மறுகால்வாய் பாய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அது படுத்துக் கொள்ளும் இடத்தை ஏரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவைகளை உனக்கு காட்டிய பின்னர் ஒரு இடத்தில் பசு மாயமாகி விடும். அந்த இடமே இறுதியில் தண்ணீர் தேங்கும் பெரியகுளம் ஆகும் என்றார்.

ஆர்வத்துடன் மலையில் இருந்து இறங்கிய அந்தணனுக்கு வெள்ளைப்பசு மலை அடிவாரத்தில் அவனுக்காக காத்திருந்தது உற்சாகத்தைத் தந்தது. அகத்தியர் கூறியது போன்றே எல்லா வழிகளையும் மதகு அமைக்கும் இடம் , மறுகால் பாயும் இடம், சிறியகுளம் அமைக்கும் இடம் இறுதியில் பெரிய ஏரி அமைக்கும் இடங்களைத் தேர்வு செய்து, அம்பாசமுத்திரம் வந்து அந்தணரிடம் சிலையைப் பெற்றுக் கொண்டு அதனுள் காண்கையில் வெறும் துவரம்பருப்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அம்பாசமுத்திரம் அந்தணர் இந்த பருப்புகள் தான் இருந்தன என்று உரத்துக்கூற கேரள மன்னனிடம் இது பற்றி புகார் கூறினான்.

மன்னன் அந்த அம்பை அந்தணரை அழைத்து இந்த கன்னடத்து அந்தணர் உயரிய நோக்கத்தோடு அகத்தியரிடம் சென்று அருமையான உபாயங்களைக் கேட்டு வந்திருக்கின்றார். உண்மையைக் கூறுங்கள் என்று கேட்டும் மறுக்க மன்னன் சிவாலயத்திற்கு அழைத்துச் சென்று சிலை மீது சத்தியம் செய் என்று கூற பொய் சத்தியம் செய்த அந்தணர் எரிந்து சாம்பலானார். கன்னடத்து அந்தணன் மாணிக்கக் கற்கள் கிடைக்கப் பெற்றான். தான் எண்ணியது போலவும் அகத்தியர் வழிகாட்டியது போலவும் கால்வாய் மதகு, மறுகால், குளங்கள், இறுதியில் இந்த சேரன்மகாதேவியில் பெரிய ஏரி கட்டி இங்கு தண்ணீர் தேங்க வழி செய்தான். கட்டி முடித்த பின்னர் சரியான மழை பெய்யாததால், இங்கு ஒரு விநாயகருக்கு கோவில் எழுப்பி, அவரது உடலுக்கு மிளகை அரைத்து தேய்த்து அந்த அபிஷேக நீர் கால்வாயில் விழச் செய்தவுடன் மழை பெரிய அளவில் மழை பெய்து நீர் வந்து அனைத்து குளங்கள், ஏரி நிரம்பியது. அந்த இளைஞனின் பெயரைக் கடைசி வரையும் கூறவில்லை. அவன் கன்னட மொழி பேசியதால் அவன் பெயராலே இந்த கால்வாய்க்க கன்னடியன் கால்வாய் என்ற பெயர் உண்டாயிற்று.இன்றும் இங்குள்ள விவசாயிகள் மழை பெய்யாததால், மிளகு அரைத்து விநாயகருக்கு அபிஷேகம் செய்து அந்த நீர் கால்வாயில் விழுந்தவுடன் மழை பெய்வதை கண்டு வருகின்றனர்.

இந்த திருத்தலம் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்து இருக்கும். விநாயக சதுர்த்தி அன்று விசேஷ பூஜைகளும் சங்கடஹரசதுர்த்தி தோறும் சிறப்பு வழிபாடுகளும் உண்டு.

சேரன் மகாதேவி – 627 414 திருநெல்வேலி மாவட்டம்.

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கரத்தில் நிலை அறிவித்துத்

தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட

வித்தக விநாயக விரை கழல் சரணே

–– ஸ்ரீ விநாயகர் அகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *