செய்திகள்

செம்மரக்கட்டை கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிக்க இருட்டில் ஓடிய விவசாயி கிணற்றில் விழுந்து பலி

வாழப்பாடி, செப். 14–

செம்மரக்கட்டை கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிக்க இருட்டில் ஓடிய விவசாயி, கிணற்றில் விழுந்து பலியானார்.

இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ராஜா (35). விவசாயியான இவருக்கு செம்மரக்கட்டை கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. செம்மரக்கட்டை கடத்திய பணத்தை பங்கு போடுவதில் இவருக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், கணேசன், செல்வம், தர்மன் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை கருமந்துறை அருணா கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த விவசாயி ராஜாவை, சீனிவாசன் தலைமையிலான கும்பல் காரில் கடத்தியுள்ளனர்.

அப்போது வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே நேற்று இரவு கார் வந்த போது காரிலிருந்து இறங்கி தப்பிச் செல்ல முயன்ற ராஜாவை, அவர்கள் துரத்தி உள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த கிணற்றில் ராஜா விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் 1 மணி நேரம் போராடி ராஜாவின் உடலை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கர் தலைமையிலான காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கார் டிரைவர் கருமந்துறையை சேர்ந்த கார்த்திக் மற்றும் இந்த கும்பலுக்கு உதவிய வாழப்பாடியைச் சேர்ந்த திலீப், ஜீவா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி ராஜாவை கடத்தி வந்து அவரது சாவிற்கு காரணமான செம்மரக்கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்த சீனிவாசன், கணேசன், தர்மன், செல்வம் உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *