செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதம் மட்டும் 24 லட்சத்து 31 ஆயிரம் பேர் பயணம்

சென்னை, மே. 13–

சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில், நடப்பு ஏப்ரல் மாதத்தில் 24 லட்சத்து 31 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். ஏப்ரல் 26ந் தேதி மட்டும் ஒரே நாளில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு மேல் பயணம் செய்துள்ளனர் என்பது சாதனையாகும்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு , சென்ட்ரல்-பரங்கிமலை வரையும் விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரையும் ரயில் சேவை முழுமையாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தது.

கடந்த 2015ல் இந்த ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து தற்போது முதன்முறையாக ஒரு மாதத்தில் அதிகபட்ச பயணிகள் ஏப்ரலில் பயணம் செய்துள்ளனர்.

கோயம்பேடு – ஆலந்தூர் வரையில் 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயிலின் முதல் சேவை கடந்த 2015-ம் ஆண்டு ஜூனில் தொடங்கப்பட்டது. அப்போது, தினமும் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை பயணம் செய்தனர். அதன்பிறகு, ஒவ்வொரு பகுதியாக மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் முடிந்து, சேவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது ரெயில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

அதிலும், வண்ணாரப்பேட்டை-ஏஜி டி.எம்.எஸ். இடையே திட்டப்பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்கப்பட்டபோது, பயணிப்போர் எண்ணிக்கை மாதம்தோறும் 29 % உயர்ந்தது.

கூடுதல் நுழைவாயில் திறக்காத நிலையிலும்…

நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரெயில்களில் 19.37 லட்சம் பேரும், பிப்ரவரி மாதத்தில் 23.62 லட்சம் பேரும், மார்ச் மாதத்தில் 23.89 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்.

ஆயிரம்விளக்கு, எல்ஐசி ரெயில் நிலையங்களில் முழுமையாக வசதிகள் செய்யப்படவில்லை. கூடுதல் நுழைவு வாயில் திறக்கப்படவில்லை. இருப்பினும், இந்த மார்க்கத்தில் அரசு அலுவலர்கள் அதிகம் இருப்பதால் இங்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் பேசுகையில், உலகத் தரத்தில் மக்களுக்கு போக்குவரத்து சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்து வருகிறது. தரமான சேவை, சரியான கட்டணம், குறைந்த நேரம், பயணிகள் பாதுகாப்பு ஆகியவை முக்கிய விஷயமாக உள்ளது. இதன்காரணமாக, பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது என்றார்.

முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவடைந்து, ரெயில்சேவை தொடங்கிபிறகு, சில நாள்கள் இலவச பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டனர். இதன்பிறகு, பயணிகள் எண்ணிக்கை உயர்ந்தது. குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு, தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்தது. சில நாட்களில் ஒரு லட்சத்தை நெருங்கிவந்தது. மே மாதத்தில் அதிகபட்சமாக கடந்த 6-ஆம் தேதி 92,917 பேர் பயணம் செய்துள்ளனர் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *