செய்திகள்

சென்னையில் 200–ஐ கடந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

சென்னை, செப்.15-

தமிழகத்தில் நேற்று 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோவையில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 901 ஆண்கள், 690 பெண்கள் என மொத்தம் 1,591 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 212 பேரும், கோவையில் 201 பேரும், ஈரோட்டில் 128 பேரும், தஞ்சாவூரில் 119 பேரும், செங்கல்பட்டில் 116 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 2 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 36 லட்சத்து 26 ஆயிரத்து 996 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 26 லட்சத்து 37 ஆயிரத்து 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 20 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 27 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். 23 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 217 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,537 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து 85 ஆயிரத்து 244 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 549 பேர் உள்ளனர். 27 நாட்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று 40 ஆயிரத்து 993 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 244 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 210 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 73 ஆயிரத்து 447 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *