செய்திகள்

சென்னையில் 1.27 லட்சம் பேருக்கு வீடு தேடி தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ.25-

சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் இதுவரை 6.71 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

மேலும், இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் இலக்கை எட்ட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து, முகாம்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்தநிலையில் 11வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது.

ஒரு கோடி அளவில் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கும் நிலையில், காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து 11-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதுவரை 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற 11-வது மெகா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்திய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களையும் அமைச்சர் வழங்கினார். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி,துணை ஆணையாளர் எஸ்.மனிஷ், வடக்கு வட்டார துணை ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், கலாநிதி வீராசாமி எம்.பி., ஐடரீம் ஆர். மூர்த்தி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:-

11வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் சென்னையில் 1600 இடங்களில் இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 72 லட்சம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்து காத்திருக்கின்றனர். 2-வது மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

60 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கொரோனா தொற்று நேற்று சற்று உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம். எனவே தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.

சிங்கப்பூர், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், கொரோனாவிற்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

ஒட்டுமொத்த பொதுமக்களை காப்பதற்காக தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தி வருகிறது. போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதால், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

2 தவணை தடுப்பூசியும், செலுத்தியதால் தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

சென்னையில் குடிசை பகுதிகள் மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் முக கவசம் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. சென்னையில் உள்ள மால்களில் 51 சதவீதம் பேர் முககவசம் அணிகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *