செய்திகள்

சென்னையில் தொடரும் சோகம் : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, ஜூன் 16–

சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சென்னை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 37). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பெருமாள் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். கடந்த ஆறு மாதம் காலமாக ரம்மி விளையாடி, அதில் அதிக பணத்தை இழந்து கடன் சுமையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன்காரணமாக பெருமாளுக்கு அவரது மனைவி வரலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், பெருமாள் தான் பயன்படுதி வந்த செல்போனை அடகுவைத்து வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவரிடம் சண்டையிட்டுள்ளார். அதன்பின் இரவு தூங்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை எழுந்து பார்த்த போது பெருமாள் அவரது அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய படி சடலமாக கிடந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மணலி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக மணலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இறந்த நபரின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் ஆன் லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தொடரும் சோகம்

கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டத்தை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த 6–ந் தேதி மணலி புது நகரை சேர்ந்த பவானி என்ற பெண் ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் 20 சவரன் நகைகள் மற்றும் 3 லட்சம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். தற்போது பெயிண்டர் பெருமாள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னையில் ஆன் லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.