செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜூன்.18-

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவியதைத் தொடர்ந்து, அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட கள பணிக்குழுவை மண்டல வாரியாக அரசு நியமித்துள்ளது.

சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மேலாண்மை செய்தல், தொற்று கண்டறிதல், பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகிய மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு இந்தக் குழு உதவிகரமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் இந்த களப் பணிக்குழுவில் சிலருக்கு மாற்றாக வேறு சில அதிகாரிகளை நியமித்து தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எம்.எஸ்.சண்முகம், டி.என்.வெங்கடேஷ், எம்.கருணாகரன் மற்றும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.) ஜி.சிவருத்ரயா ஆகியோருக்கு மாற்றாக தமிழ்நாடு குடிநீர் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் எல்.நிர்மல்ராஜ் (ஆலந்தூர் மண்டலம்), தொழில் வழிகாட்டி நிறுவன செயல் இயக்குனர் எஸ்.அனீஷ் சேகர் (பெருங்குடி), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநர் வி.விஷ்ணு (சோழிங்கநல்லூர்), சிறப்பு டி.ஆர்.ஓ. ஜெ.பாலசுப்ரமணியம் (ராயபுரம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ‘டாஸ்மாக்’ பொதுமேலாளர் ஆர்.சுகுமார் மற்றும் டி.ஆர்.ஓ. பிரின்ஸ்லி ராஜ்குமார் ஆகியோர் கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளை கவனிப்பதற்காக சென்னை மாநகராட்சி ஆணையரின் நேரடிக் கட்டுப்பாட்டில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்தப் பணி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *