சிறுகதை

சுயமரியாதை | ராஜா செல்லமுத்து

.

உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் மத்தியான வேளையில் மாரிச்சாமி பெரியவர் பசி கண்ணை மறைக்க அந்தத் தெரு வழியே நடந்து வந்து கொண்டிருந்தார்.

நிலையான நடை மாறியது. பசி மயக்கத்தில் அவரின் கால்கள் பின்னிக் கொண்டு சென்றன.

அருகில் இருக்கும் வீடுகளில் பசிக்குது என்று சோறு கேட்டார். சிலர் முறைத்து பார்த்தார்கள். சிலர் கதவை அடைத்து விட்டு சென்றார்கள். மாரிச்சாமி மயக்கத்தில் இருந்தார் . அவரின் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன.

எத்தனையோ வீடுகளை கேட்டுப் பார்த்தும் சாப்பாடு கிடைக்காத ஏக்கத்தில் , கடைசியாக ஒரே ஒரு வீட்டை மட்டும் கேட்டு பார்க்கலாம் என்று நினைத்தார் மாரிச்சாமி .

அம்மா பசிக்குது. கொஞ்சம் சாப்பாடு தாங்க என்று அவர் கேட்கும் தொனியே பாவமாக இருந்தது .

உள்ளே இருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி

ஐயா இருங்க. இந்தா வாரன் என்று சொல்லிப் போனார். அவள் அடுப்படியில் பார்த்தபோது குழம்பு கொதித்து கொண்டிருந்தது. இன்னும் குழம்பு கொதிக்க பத்து நிமிடம் ஆகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவள், வெளியே போனா பெரியவரை பார்க்க நேரிடும். மனது கஷ்டமாக இருக்கும் என்று நினைத்து அந்த பெண்மணி அடுப்படியில் நின்று விட்டாள். மாரிச்சாமி இந்த வீட்டிலும் நமக்கு சாப்பாடு கிடைக்காது போல என்று நினைத்தார்.

ஆனால் எந்த வீட்டிலும் சொல்லாத ஒரு பதிலை அந்தப் பெண்மணி சொல்லிவிட்டுப் போய் இருப்பது மாரிச்சாமிக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

சரி பார்க்கலாம் என்று நின்று கொண்டிருந்தவர், அந்த வீட்டை சுற்றி முளைத்திருந்த இலை, தழை,செடிகளைப் பிடிங்கி போட்டார்.

அந்தப் பெண்மணி பத்து நிமிடங்கள் கழித்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, வீட்டை சுற்றியுள்ள அத்தனை செடி கொடிகளையும் பிடுங்கி போட்டுவிட்டு அமர்ந்திருந்தார் மாரிச்சாமி

ஐயா,ஏன் இந்த வேலை செஞ்சீங்க? சாப்பாடு கொடுப்பதற்காகவா இப்படி பண்ணீங்க ? என்று கேட்டாள்.

இல்லம்மா. எனக்கு ஓசியில உங்ககிட்ட சாப்பாடு வாங்கி சாப்பிட அசிங்கமா இருந்தது. எத்தனையோ வீட்டுல சாப்பாடு கேட்டு பார்த்தேன். யாரும் அவங்க தரல. நாம ஏன் சும்மா சாப்பிடணும்? ஏதாவது ஒரு வேலை செஞ்சுட்டு சாப்பாடு கேட்கலாமே. அப்படின்னு நினைச்சு தான் உங்க வீட்டை சுத்தி இருக்கிற செடி எல்லாம் பிடுங்கிப் போட்டேன். இப்ப எனக்கு நீங்க குடுக்கிற சாப்பாட்டை சாப்பிடுறதில ஒரு திருப்தி இருக்கு. இந்த சாப்பாட்ட தலைநிமிர்ந்து சாப்பிடுவேன். ஏன்னா நான் வேலை செஞ்சுட்டு தான் உங்க சாப்பாட்டை சாப்பிடுறேன் என்ற சுயமரியாதை எனக்குள்ள இருக்கு என்று மாரிச்சாமி சொன்னபோது அந்தப் பெண்மணி அழுதுவிட்டாள்.

ஐயா சாப்பிடுங்க என்று சாப்பாட்டை கொடுத்தவள் வீட்டுக்குள்ளே போய் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வந்து மாரிச்சாமி என் கைகளில் திணித்தாள்.

ஐயா இத செலவுக்கு வச்சுக்குங்க என்று சொன்னாள் அந்தப் பெண்.

எனக்கு எதுக்கும்மா இந்த பணம் . அதான் சாப்பாடு கொடுத்து விட்டீர்களே ? என்று மறுத்தார் மாரிச்சாமி.

இல்லைய்யா சாப்பாடு கொடுத்தது என்னுடைய இரக்க குணம். இந்த நூறு ரூபாயை கொடுக்கிறது நீங்க செஞ்ச வேலைக்கு என்று அந்த பெண்மணி சொல்ல மாரிச்சாமி அதை வாங்காமல் தவிர்த்தார்.

ஆனால் அந்தப் பெண்மணி விடாப்பிடியாக மாரிச்சாமியின் கையில் அந்த நூறு ரூபாயை திணித்து விட்டார்.

ரொம்ப நன்றிம்மா. இதுமாதிரி வேலை இருந்தா சொல்லுங்க. நான் வேலை செஞ்சுட்டு உங்ககிட்ட சாப்பிடுகிறேன்.

எனக்கு யாரும் இல்லம்மா. பெத்த புள்ளைங்க எல்லாம் என்ன விட்டுட்டு போய்ட்டாங்க. அவங்க நல்ல வசதி வாய்ப்போடு தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா, என்னை யாரும் பாக்கல. நீங்க எங்கேயாவது வேலை இருந்தா சொல்லுங்க. நான் வேலை செஞ்சு சாப்பிடுகிறேன். வயசான காலத்துல யாரும் எனக்கு வேலை தரல. ஒரு உதவி செய்யுங்க என்று சொன்னார்.

ஐயா, நீங்க இங்கேயே இருங்க. எங்க காலனிய சுத்தி இருக்கிற தோட்டத்துக்கு காவக்காரனா இருங்க. நான் எங்க காலனி ஆட்கள் கிட்ட பேசிக்கிறேன் என்று அந்தப் பெண்மணி சொன்னாள்.

பசி மயக்கத்தில் இருந்த மாரிச்சாமி சாப்பிட்டதும் கொஞ்சம் தெளிய ஆரம்பித்தார்.

சரிம்மா, நான் இப்பவே என் வேலையை ஆரம்பிக்கிறேன். உங்க காலனி ஆளு கிட்ட சொல்லிருங்க என்று சொன்ன மாரிச்சாமி அந்த காலனி முழுசுக்கும் உள்ள செடி கொடிகளை பிடுங்க ஆரம்பித்தார் .

இதை அந்தக் காலனியில் உள்ள ஆட்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த மக்களுக்கு மாரிச்சாமி பெரியவரின் சுயமரியாதை பெருமிதம் தந்தது.

மாரிச்சாமி வேலைக்கு அவர்களும் சம்பளம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *