செய்திகள்

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் நந்தகுமாருக்கு தேசிய சிறந்த பொறியியல் ஆசிரியர் விருது

சிவகாசி, செப். 16–

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.நந்தகுமாருக்கு புது டெல்லி தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலால் தேசிய அளவிலான ஏ.ஐ.சி.டி.இ விஸ்வேஸ்வரயா சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆன்லைன் நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கலந்து கொண்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் சிறந்த ஆசிரியர்களை கவுரவித்து விருதுகளை வழங்கினார்.

தேசிய அளவில் பொறியியல் மற்றும் தொழில்நுடப ஆசிரியர்களை கவுரவிப்பதற்காக ஏ.ஐ.சி.டி.இ ஆல் நிறுவப்பட்ட முதல் விருது இதுவாகும். இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆசிரியர்களில் தமிழ்நாட்டிலிருந்து டாக்டர் எம்.நந்தகுமார் மட்டுமே தேசிய அளவில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்.

புதுமையான கற்பித்தல் – கற்றல் நடைமுறைகள், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தில் செயல் திறன், ஆராய்ச்சி இதழ்களில் வெளியீடு, நிறுவன மேம்பாட்டிற்காக அரசிடமிருந்து பெறப்பட்ட நிதி, சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான பங்களிப்புகள், மாணவர்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இந்த விருதைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்களில் அடங்கும்.

டாக்டர் எம்.நந்தகுமார் தனது பி.எச்.டி “பசுமை அச்சிடுதல் ” “ஆப்செட் அச்சிடலில் சுற்றுச்சூழல் மேலாண்மை ” பற்றிய ஆராய்ச்சியை சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மேற்கொண்டார். ஆப்செட் பிரிண்டில் மை தயாரிப்பதற்காக பெட்ரோலிய அடிப்படையிலான எண்ணெய்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழல் நட்பு பாம் ஆயில் மெத்தில் ஈஸ்டர் அடிப்படையிலான காய்கறி எண்ணெய் மை ஒன்றை தன் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.

இவரது ஆராய்ச்சிப் படைப்புகள் 5 புகழ்பெற்ற சர்வதேச பத்திரிகைகளிலும் 7 சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. ப்ரீப்ரெஸ், டிஜிட்டல் மற்றும் ஆப்செட் பிரிண்டிங் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற 21 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற இவர், டிப்ளோமா மாணவர்களுக்கு டிஜிட்டல் மற்றும் நான் இம்பாக்ட் அச்சிடுதல், வடிவமைப்பு மென்பொருள், அச்சு உற்பத்தி, டெஸ்க் டாப் பப்ளிஷிங் போன்ற தலைப்புகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

கனடா, இந்தியா கூட்டு நிறுவன திட்டம், மாற்றுத்திறனாளிகள் திட்டம் மற்றும் பாலிடெக்னிக் மூலம் சமூக மேம்பாடு போன்ற பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு நிதியளித்த திட்டங்களில் ஒருங்கிணைப்பாளராக அவர் பணியாற்றி வருகிறார். அச்சிடும் தொழில்நுட்பத்திற்கான தேசிய அளவிலான பொதுவான பாடத்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், புது டெல்லி மாஸ்டர் பிரிண்டர்களின் அகில இந்தி கூட்டமைப்பு, கனடா இந்தியா நிறுவன ஒத்துழைப்பு திட்டத்தின் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றி வருகிறார்.

டாக்டர் நந்தகுமார் 2013–ம் ஆண்டில் புது டெல்லியில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கல்விக்கான சொசைட்டி வழங்கிய அருட்செல்வர் டாக்டர்.என்.மஹாலிங்கம் ” சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியர் விருது”, சென்னை சவீதா பொறியியல் கல்லூரி ” சிறந்த கல்வியாளர் விருது” மற்றும் உ.பி.அரசு புது தில்லியில் உள்ள தொழில்நுட்பக் கல்விக்கான இந்திய சொசைட்டி 2019–ம் ஆண்டில் வழங்கிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் குறிப்பிட்ட துறைகளில் செய்த சிறந்த பணிகளுக்கான தேசிய விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *