சினிமா செய்திகள்

‘‘சில காயங்கள் மருந்தால் சரியாகும்; சில காயங்கள் மறந்தால் சரியாகும்: சம்பத்ராம்

20 ஆண்டுகளுக்கு முன் தலை மட்டுமே காட்டியவர்; 200 –வது படத்தில் கம்பீரமாய் தலை நிமிர்த்துகிறார்!

‘‘சில காயங்கள் மருந்தால் சரியாகும்; சில காயங்கள் மறந்தால் சரியாகும்: சம்பத்ராம்

ஆமை வேகத்தில் நகர்ந்தவர் 5 மொழிகளிலும்… இன்றோ – அடையாளம் காணும் சாதனை நாயகன்!

முயல் வேகத்தில் வந்து முப்பது படங்களை முடிப்பதற்குள் கண்ணிலிருந்து காணாமல் போகிறவர்கள் இருக்கிறார்கள்.

ஆமை வேகத்தில் ஊர்ந்து ஊர்ந்து 50, 100, 150, 200 என்று சிறுகச்சிறுக கண்ணில் தெரிந்து காலூன்றுபவர்களும் இருக்கிறார்கள், இந்தக் கலையுலகத்தில்.

இதில் 2 ம் வகையைச் சேர்ந்தவர் தான் சம்பத்ராம் என்னும் இளைஞர். நின்றால், நடந்தால், யாரிடமும் பேசினால்… சினிமாவே கனவு… என்பதாகவே இருந்து கொண்டிருக்கும் சம்பத்ராம், ‘செட் ப்ராப்பர்டி’ அதாவது அரங்கத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கும் ஜடப் பொருட்களைப் போல, வாயே திறந்து பேசாமல், கூட்டத்தோடு கூட்டமாக நிறுத்தப்பட்டிருந்தவர்… இன்றைக்கு 200வது படத்தில் (கசகசா) அவரைப் பிரதானமாக்கி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால்… அபரிமிதமான பொறுமையின் உச்சத்தில் சாதனை படைத்திருக்கும் அவரைப் பாராட்டாமல் இருந்தால் எப்படி…?

ஓராண்டு ஈராண்டு அல்ல, இருபதாண்டுகள்… மில்லீனியம் 2000வது ஆண்டு துவங்கிய நாள் முதல் கோடம்பாக்கம் வட்டாரத்தில் வலது காலெடுத்தவர், நகர்ந்து போன 7 ஆயிரத்து 310 நாட்களில் இன்று… சினிமா வட்டாரத்தில் (இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள்) நன்றாகவே பேர் உச்சரிக்கப்படும் விதத்தில் உயர்ந்திருக்கிறார்.

சங்கரின் ‘முதல்வன்’ தலை மட்டுமே

ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் திரைப்படத்தில் ஒரு ‘அட்மாஸ்பியர்’ ஆர்ட்டிஸ்டாக (சும்மா, பத்தோடு, பதினொன்று அத்தோடு இது ஒன்று). அறிமுகமானவர். தொடர்ந்து பல திரைப்படங்களில் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் (ஷாட்டில் நிற்கவேண்டும்) ஆகவே தலை காட்டியவர்.

முதன்முதலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் முதல் திரைப்படம், அஜித் நடித்த தீனா மூலம் ஓரளவுக்கு ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இதேவேளையில் விஜயகாந்த் நடித்து மகாராஜன் இயக்கத்தில் உருவான வல்லரசு படத்தில் முதன்முதலாக ‘டயலாக்’ பேசி நடித்தார்.

தொடர்ந்து ரன், ரமணா, தூள், அரசு, மதராசபட்டினம், யாவரும் நலம், சிங்கம், காஞ்சனா, திமிரு புடிச்சவன், காஞ்சனா 3, அசுரன், செல்லமே, புலி ஆகிய பல வெற்றிப்படங்களில் வில்லன்களுக்கு அடையாளமாகவும், ஹீரோக்களுக்கு அடியாளாகவும் இருந்தவர்.

ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, மாதவன், விஷால், சரத்குமார், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விமல், விதார்த் தவிர மற்ற நடிகர்கள் நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.

முதன்முதலில் முக்கிய வில்லனாக நடித்து மலையாளத்தில் அறிமுகமானது மோகன்லால், சுரேஷ் கோபி இருவரும் இணைந்து நடித்த ஜனகன் படத்தில் தான்… அதைத்தொடர்ந்து மோகன்லால், மம்முட்டி நடித்த 6 படங்களில் நடித்திருக்கிறார்.

கனடா தமிழர் தயாரிப்பில் ஆங்கிலம்.

கனடாவில் வாழும் ஒரு தமிழ் இயக்குனர் கென் கந்தையா இயக்கத்தில் PEARL IN THE BLOOD ஆங்கிலத் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது விரைவில் வெளியாக உள்ளது.

மகாராஜன் இயக்கத்தில் வல்லரசு ஹிந்தி ரீமேக்கான சன்னி தியோல் நடித்த இந்தியன் திரைப்படத்திலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான குரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

25 வயதான டாக்டர் தமிழ்ச் சுடர் இயக்கத்தில் கசகசா படம் விரைவில் ஓடிடி பிளாட்பார்மில் வெளியாக இருக்கிறது… இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிரைம் திரில்லர் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.

முழுக்க முழுக்க திருச்சி மாநகரில் எடுக்கப்பட்ட திரைப்படம். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, டி.ஐ, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், தயாரிப்பு இயக்கம் என்று 8 பொறுப்புக்களை ஏற்று அஷ்டாவதானி ஆகியிருக்கிறார். டாக்டர் தமிழ் சுடர்… இவர் ஒரு சித்தா மருத்துவர்.

தென்னிந்திய 4 மொழிகளிலும், இந்தியிலும் நடித்திருக்கும் சம்பத்ராம் இன்றைய தேதியில் ‘டபுள் செஞ்சுரி’ அடித்திருக்கிறார்.

நெருக்கமான இயக்குனர்கள்

‘‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில், இயக்குனர்களின் அலுவலகம் மட்டுமின்றி வீடு வரை சென்று நான் சந்திக்க கூடிய எனக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர்கள் என்றால் அது “வல்லரசு” என்.மகாராஜன், ஏ.ஆர்.முருகதாஸ் தான்…

மகாராஜன் தான் இயக்கிய வல்லரசு உள்பட நான்கு படங்களிலும் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தார். அதேபோல இயக்குனர் ஏ.ஆர். முருகதாசும் தன் முதல் படமான “தீனா” திரைப்படத்தில் முதல்முறையாக என் முகம் வெளியில் தெரியும்படியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். தொடர்ந்து “ரமணா”, பதினைந்து வருட இடைவெளிக்குப் பிறகு. (இந்த இடைவெளிக்கான காரணம் இது வரை எனக்கு புலப்படவில்லை) “ஸ்பைடர்” திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.

2001 ம் ஆண்டு பொங்கலன்று “தீனா” திரைப்படம் ரிலீசாகி மாபெரும் வெற்றி அடைந்தது. அடுத்த படத்தை இயக்குவதற்கான ஆய்த்த வேலைகளில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஈடுபட்டிருந்தார். நானும் அவரை தொடர்ந்து சந்தித்து வந்தேன்… அவரும் என்னுடன் டீ அருந்தி அன்பாகப் பேசுவார்…

என்னுடைய தொடர் முயற்சியை கண்ட அவர், தன்னுடைய இரண்டாவது படம் துவங்குவதற்கு சிறிது காலம் பிடிக்கலாம் என்பதால் ஒரு நாள் என்னிடம்… “டைரக்டர் உதயசங்கர், கேப்டனை வைத்து “தவசி” என்கிற திரைப்படத்தை பண்றாரு… நான் போன் பண்ணி சொல்லிடறேன்… நீங்க போய் பாருங்க” என்றார்…

நானும் மகிழ்ச்சியாக “ஓகே சார்… ரொம்ப நன்றி சார்” என்று கூறிவிட்டு “தவசி” திரைப்படத்தின் அலுவலகத்துக்கு சென்றேன்… உதவி இயக்குனர்கள் ராஜ்மோகன் மற்றும் மணி பாஸ்கர் இருவரையும் சந்தித்தேன்.

ஒரு நாளைக்கு சம்பளம் ரூ.500 ஓகேவா?

அக்கால கட்டத்தில் (இக்காலக்கட்டத்திலும் தான்) என்னை போன்ற அறிமுகமில்லாத அட்மாஸ்பியர் நடிகர்கள் பெரிய இயக்குனர்களை அவர்களின் அறைக்கே சென்று சந்திப்பது என்பது மிகவும் அரிதான விஷயம்… இருந்தபோதிலும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசின் சிபாரிசால் எனக்கு அந்த பாக்கியம் அன்று கிட்டியது…

மறுநாளே (சமீபத்தில் காலமான காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்) மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி என்னை தவசி அலுவலகத்துக்கு வரவழைத்து…” சம்பளம் எவ்வளவு வாங்கிட்டு இருக்கீங்க” என்று கேட்டார்… “நீங்க என்ன கொடுத்தாலும் வாங்கிக்கிறேன் சார்” என்றேன்… அவரும்

“தினமும் சம்பளம் ஐநூறு ரூபா வாங்கிக்குங்க… ஓகேவா” என்றார்… அதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்கல… ஏன்னா அதுக்கு முன்னாடி வரைக்கும் மற்ற படங்கள்ல ஒரு நாளைக்கு 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரைக்கும் தான் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன்…உடனே மகிழ்ச்சியுடன் “ஓகே சார்… ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று கூறிவிட்டு வந்தேன்…

பிறகு தவசி திரைப்படமும் 2001 நவம்பர் 14 ஆம் தேதி ரிலீசாகி மாபெரும் வெற்றி அடைந்தது…

கடந்து வந்த பாதை கரடு முரடான பாதை

கடந்து வந்திருக்கும் பாதைகள் கரடு முரடானவை… எத்தனை எத்தனை ஏமாற்றங்கள்… சோதனைகள்… சிரமங்கள்… சிக்கல்கள். இத்தனைக்கும் ஈடு கொடுத்து வந்திருக்கிறீர்களே சம்பத்ராம், ‘சபாஷ்…’ என்று கையை குலுக்காமல்… கிட்டே நெருங்காமல்… மூன்றடி சமூக இடைவெளி விட்டு வாயார வாழ்த்திய போது (‘உயிர்க்கொல்லி’ கொரோனா வைரஸ்… ஊரையே ஆட்டிப் படைக்கும் நேரத்தில்…) அவர் அமைதியே உருவாகி சொன்ன வார்த்தைகள், ஒரு நிமிடம் நெகிழ வைத்தது.

‘‘துணிந்து நில்: உன்னை நீ செதுக்கிக் கொண்டே இரு; வெற்றி பெற்றால் சிலை. தோல்வி அடைந்தால் சிற்பி.’’

* ‘‘சில காயங்கள் மருந்தால் சரியாகும்; சில காயங்கள் மறந்தால் சரியாகும்…!’’

அளந்து சொன்ன அந்த 20 வார்த்தைகள்:

சம்பத்ராமின் அனுபவ முதிர்ச்சி யையும், இலக்கிய உணர்வையும் படம் பிடித்துக் காட்டியது.

வீ. ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *