சினிமா செய்திகள்

சாமான்யன் ரசிக்கும் பாட்டு வரிகளை ‘ஈசி’யாக பாடுவதாலேயே அவர் ‘எல்லார்’ ஈஸ்வரி!

எலந்தப் பயம் எலந்தப் பயம்…, காதோடுதான் நான் பேசுவேன்…, பளிங்கினால் ஒரு மாளிகை, கேட்டுக்கோடி உறுமி மேளம்…

சாமான்யன் ரசிக்கும் பாட்டு வரிகளை ‘ஈசி’யாக பாடுவதாலேயே அவர் ‘எல்லார்’ ஈஸ்வரி!

ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்ற விழாவில் ருசிகரத் தகவல்

சென்னை, ஜன. 3

‘‘எலந்தப் பயம் எலந்தப் பயம்…, பளிகினால் ஒரு மாளிகை…, காதோடுதான் நான் பேசுவேன்…, பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…, கேட்டுக்கோடி உறுமி மேளம்… இப்படி எந்த ஒரு சாமானியனும் ஜனரஞ்சகமாக ரசிக்கும் பாட்டு வரிகளை ஈசியாக பாடுவதால் இவர் எல்லார் ஈஸ்வரி என்று எனக்கு வாலிபக் கவிஞர் வாலி எழுதிய முகவுரை வாழ்நாளில் மறக்கவே முடியாது’’… என்று பிரபல பாடகி எல்ஆர். ஈஸ்வரி, விருது வழங்கும் விழாவில் ஏற்புரை ஆற்றுகையில் மலரும் நினைவுகளை ருசிகர தகவலாக வெளியிட்டார்.

கலைமாமணி டாக்டர் ஜி மணிலால் தலைமையில் வெற்றிகரமாக இயங்கி வரும் சென்னை கலை பண்பாட்டு பேரவை மற்றும் நேசம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள சபரி இன் ஹோட்டலில் முப்பெரும் விழா நடைபெற்றது.

பாவலர் ராமச்சந்திரன் எழுதிய அறிவே உன்னால் முடியுமா? என்னும் நூல் வெளியீட்டு விழா, ஐ சி எல் அமைப்பின் சார்பில் சிறந்த தமிழ்ப் படக் கலைஞர்கள் மற்றும் சின்னத்திரைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஆகியவை துரையரசன், உலகத் தமிழ் வர்த்தக சபை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடந்தது.

ஐகோர்ட் நீதிபதிகள் எம்.வேணுகோபால் டி. என். வள்ளிநாயகம் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, திரைப்பட கலைஞர்களுக்கு விருது, நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்துரைத்தார்கள்.

‘செக்யூரிட்டி’ படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் உதயா, கன்னிமாடம் நாயகி சாயாதேவி, அவரது தந்தையும், சின்னத்திரை வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகருமான யார் கண்ணன் உள்ளிட்ட கலைஞர்களுக்கு நீதிபதிகள் விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள்.

உதவி கமிஷனர்கள் ஹரி, ஸ்டீபன்

மேலும் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து இருக்கும் உதவி கமிஷனர்கள் ஹரி மற்றும் ஸ்டீபன், மகாகவி பாரதி நகர் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் நாஞ்சில் தாம்சன், கிண்டி ஆய்வாளர் சந்துரு ஆகியோருக்கும் நீதிபதிகள் விருதளித்து வாழ்த்தினார்கள்.

பார்வையாளர்களின் வேண்டு கோளுக்கிணங்க எல்ஆர் ஈஸ்வரி, பளிங்கினால் ஒரு மாளிகை…, எலந்தப் பயம் எலந்தப் பயம் எலந்தப் பயம்…, காதோடுதான் நான் பேசுவேன் ஆகிய பாடல்களில் இரண்டு சரணங்களைப் பாடி ரசிகர்களின் பலத்த கைதட்டல் பெற்றார்.

விருது பெற்றவர்களில் கிராமிய பாடல் புகழ் செந்தில் ராஜலட்சுமி தம்பதியும் ஒருவர். இவர்கள் இருவரும் இணைந்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்ற பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமாக ஒலித்த ‘‘கருத்த மச்சான் … என்ன மச்சான்…?’’ என்னும் பாடலை இணைந்து பாடி சபையோரின் அட்டகாசமான வரவேற்பை பெற்றார்கள்.

பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்

இந்த ஒரே பாடலில் கிட்டத்தட்ட 3000 மேடைகளுக்கு மேல் பாடி மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறோம் என்று குறிப்பிட்ட ராஜலட்சுமி, ‘‘நாங்கள் இருவரும் எல்ஆர் ஈஸ்வரி அம்மா முன்னிலையில் பாடுவதற்கு பயந்து கொண்டுதான் இருக்கிறோம். நடுங்கிக் கொண்டிருக்கிறோம். காரணம் 60 ஆண்டு காலம் பழுத்த அனுபவம் உள்ளவர் அவர். இன்னும் கலையுலகில் நிலைத்து நிற்பவர். எங்களுக்கெல்லாம் பில்டிங் ஸ்ட்ராங்… ஆனா பேஸ்மென்ட் வீக்… அதனால் இந்த நடுக்கம்’’ என்று சிரித்துக் கொண்டே சொல்ல எல்ஆர் ஈஸ்வரி உள்பட அனைவரும் கைதட்டினார்கள். இளம் தம்பதியை மனசாரப் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியை சினிமா மக்கள் தொடர்பாளர் கடையம் ராஜுவும், கவிச்சுடர் சிந்தை வாசனும் தொகுத்து வழங்கினார்கள்.

பிரபல இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், நடிகர் ரமேஷ் கண்ணா, எல்ஆர் ஈஸ்வரி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சத்யா கீதாஞ்சலி குழுவினர் இசைஞானி இளையராஜாவின் சூப்பர்ஹிட் திரையிசைப் பாடல்களை பாடினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *