போஸ்டர் செய்தி

சத்துணவு திட்டத்தின் மூலம் தினசரி 50 லட்சம் மாணவர்கள் பயன்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

சென்னை, பிப். 15

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் அட்சய பாத்திர மையம் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத் தின் மூலம் 50 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்று முதலமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார்.

இன்று (15 ந் தேதி), முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அட்சய பாத்திர மைய சமையல் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:

அட்சய பாத்திரா ஃபவுண்டேஷன் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட உள்ள அட்சய பாத்திர மைய சமையல் கூடத்திற்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ‘‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே”

அதாவது உலகில் வாழ்கின்றவர்களுக்கெல்லாம் உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர் என்கிறது மணிமேகலை காப்பியம்.

‘‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு” என்றார் வள்ளுவப் பெருந்தகை.

‘‘அன்னக் குவளையில் தான் இறைவன் ஏழைக்கு காட்சியளிக்கிறான்” என்றார் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள்.

‘‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்” என்றார் பேரறிஞர் அண்ணா.

தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மற்றும் ஏழை மக்களின் பசியினை போக்க தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சிலவற்றை இங்கே எடுத்துச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

வறுமையில் எம்.ஜி.ஆர்.

‘‘கொடிது கொடிது வறுமை கொடிது,

அதனினும் கொடியது இளமையில் வறுமை”

ஆம், ‘பசித்தால் அழ மட்டுமே தெரிந்த வயதில் பசியின் கொடுமைக்கு ஆளாகும் அனுபவத்தை நான் இளமையில் அனுபவித்தேன். பக்கத்து வீட்டில் இருந்த ஒரு தாய் முறத்தில் அரிசியை தந்து கஞ்சி காய்ச்சி எங்களுக்கு உதவியிருக்காவிட்டால் மூன்று நாட்களாக பட்டினியாக கிடந்த எங்கள் தாயும், நாங்களும் என்றோ இந்த உலகை விட்டு போயிருப்போம் என்றார் எம்.ஜி.ஆர் . அன்று எங்களை வாழ வைத்தது ஒரு தாய். இன்று அத்தகைய தாய்க்குலம் தான் முழு நம்பிக்கையோடு என்னை முதலமைச்சர் ஆக்கியுள்ளது என்றார்’ எம்.ஜி.ஆர்.

ஏழ்மை நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிசைந்து ஊட்டுவதற்கு சோறு இல்லாமல் கை பிசைந்து நிற்கும் அவல நிலையை போக்கச் சிறிதேனும் முயற்சி செய்வது எனது அவசர, அவசிய கடமை என்பதை உணர்ந்தேன். இந்த அடிப்படையில் தான் 2 வயது முதல் 10 வயது வரை உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு மதியம் ஒரு வேளையாவது சத்துணவு கிடைப்பதற்கு வழிவகை செய்யும் சத்துணவு திட்டம் என்ற ஒரு அற்புதமான திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார்.

1982ல் சத்துணவு திட்டம்

குழந்தைகள் தான் தேசத்தின் எதிர்காலம் என்பதாலும், பின்தங்கிய சூழ்நிலையில் வளர்ந்து வரும் குழந்தைகள் அறிவாற்றலுடன் கூடிய சத்தான குடிமகனாக வளர்ந்திட வழிவகுத்திட வேண்டும் என்று உணர்ந்ததாலும், புரட்சித் தலைவரால் 1982 ம் ஆண்டு சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டு, இந்தத் திட்டத்தை துவக்கியதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

இந்தத் திட்டம் ‘‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்” என்று அம்மாவால் பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே பல தலைவர்கள் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடைய இந்தத் திட்டம் நாடு முழுவதும் பரவி சிறப்பான திட்டம் என்று அனைத்து மக்களாலும் வரவேற்கப்பட்ட திட்டம் சத்துணவுத் திட்டம். அம்மா இத்திட்டத்திற்கு மேலும் மெருகேற்றி, சத்துணவில் வழங்கப்படும் உணவு வகைகளை மாற்றியமைத்து, கலவை சாதங்கள் உள்ளிட்ட 13 வகையான உணவுகளுடன் மசாலா முட்டைகளும் வழங்க உத்தரவிட்டார்.

சத்துணவுடன் வாரம் ஒரு முறை கருப்பு கொண்டைக் கடலை, பச்சைப் பயறு மற்றும் உருளைக் கிழங்கும் வழங்கப்படுகிறது. முட்டை உண்ணாத மாணாக்கர்களுக்கு முட்டைக்குப் பதிலாக வாழைப்பழம் வழங்கப்படுகிறது.

சத்துணவு திட்டத்தினை செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசு தனியாக நிர்வாக அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு

இன்றைய தினம், 43 ஆயிரத்து 283 சத்துணவு மையங்கள் மூலம் சுமார் 50 லட்சம் மாணவ, மாணவியர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர்.

படிக்கும் ஏழை மாணாக்கர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்தாலும், நகர்ப் பகுதிகளில் வாழும் சமுதாயத்தின் ஏழை, அடித்தட்டு மக்களுக்கும் பசியில்லா நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது தான் ‘அம்மா உணவகம்’. முதலில் சென்னையில் துவக்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, இத்திட்டம் மேலும் சிறப்பான முறையில் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம், பெரியோர்களுக்கு கோயில்களில் அன்னதானத் திட்டம், நகர்ப்புற ஏழைத் தொழிலாளர்களுக்காக அம்மா உணவகம் என மக்களின் பசியைப் போக்கும் திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில சிறுவர்கள் தங்கள் பசியை போக்க சாலையோரங்களில் வீசப்பட்ட உணவுகளை உண்பதற்காக தெரு நாய்களுடன் சண்டையிடும் நிகழ்வினைக் கண்ட பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா மிகவும் வருத்தமடைந்தார். அதன் விளைவாக, சமுதாயத்தில் பசியில் வாடும் குழந்தைகளே இருக்கக் கூடாது என்று கருதி, குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தினை ‘அட்சய பாத்திரா பவுண்டேஷன்’ என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனமாகத் தொடங்கி, அதன் மூலம், தனது எண்ணத்தை செயல்படுத்தி வரும் இந்த நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமுதசுரபி

சங்க காலத்தில், மணிமேகலை காப்பியத்தில் ‘‘அமுதசுரபி” என்ற அள்ள அள்ளக் குறையாத பாத்திரத்தின் மூலம் மக்களின் பசியினை மணிமேகலை போக்கி வந்தார் என்பதை படித்திருக்கிறோம். அதைப் போன்று, பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் தங்களது கல்வியினை தொடர, பசி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 2000 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு ‘‘அட்சய பாத்திரா” என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

இந்தியா முழுவதும் தினந்தோறும் 16 ஆயிரத்து 856 பள்ளிகளில் பயிலும் சுமார் 18 லட்சம் குழந்தைகளுக்கு இந்த நிறுவனம் உணவு அளித்து வருவது ஒரு உன்னதமான மனிதநேயச் செயலாகும்.

இந்த நிறுவனம் 2019 ம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ‘‘காலை உணவுத் திட்டம்” என்ற திட்டத்தினை செயல்படுத்தி, தற்போது சென்னையில் உள்ள 24 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 5,785 மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது என்பதையும், இத்திட்டத்திற்கு உணவு தயாரிப்பதற்காக, சுமார் 2 கோடி ரூபாய் செலவில் திருவான்மியூரில் ஒரு சமையலறை அமைத்து, அங்கு இட்லி, பொங்கல், உப்புமா போன்ற உணவு வகைகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது என்பதையும் அறிவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

27 ஆயிரம் மாணவர்களுக்கு

இந்த காலை உணவு திட்டத்தினை சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு கிரீம்ஸ் சாலையில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி பரப்பிலும் மற்றும் பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் சுமார் 35 ஆயிரம் சதுர அடி பரப்பிலும், முறையே 12 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் மாணாக்கர்களுக்கு உணவு வழங்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் அமைப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இந்த நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்காக இங்கு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களிலேயே இவ்விரு மைய சமையல் கூடங்கள் அமைய அம்மாவின் அரசு அனுமதி அளித்துள்ளதுடன், இதற்கு குடிநீர், மின் இணைப்பு மற்றும் மின்சார கட்டணத்தையும் சென்னை மாநகராட்சியே செலுத்த அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது.

கிரீம்ஸ் சாலையில் அட்சய பாத்திர நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட உள்ள நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சமையல் கூடத்திற்கு உண்டான செலவினத்திற்கு கவர்னர் தனது விருப்புரிமை நிதியின் மூலம் நிதி உதவி வழங்கியுள்ளதற்கு எனது பாராட்டுதல்களை கவர்னருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். காரணம், பிற எந்த பொருளையும் தானம் பெறுபவர்கள், மன நிறைவு அடையாமல் இன்னும் வேண்டும் என்றே சொல்வார்கள். ஆனால், போதும் என்ற மன நிறைவை பெறுபவருக்குத் தரும் தானம் அன்னதானம் மட்டுமே.

அட்சய பாத்திரா என்ற இந்த நிறுவனம், சென்னை மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பசியின்றி படிப்பினை தொடர, உங்களது காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இந்த நிறுவனத்தை கேட்டுக் கொள்கிறேன்.

இன்று நான் முதலமைச்சராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இந்த நன்நாளில் இந்த நிகழ்ச்சியிலே பங்கு பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். பள்ளி மாணவர்களின் பசியை போக்க, எங்கள் இயக்கத்தின் தலைவர் புரட்சித் தலைவரால் துவக்கப்பட்டு, பின்னர் அம்மாவால் மெருகேற்றப்பட்ட மதிய சத்துணவுத் திட்டத்தினை போன்று, அட்சய பாத்திரா நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் சமையல் கூடங்கள் அமைக்க நடத்தப்படும் பூமி பூஜை விழா என்ற ஒரு அன்னதானம் வழங்குதல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில், இந்த இனிய நாளில் கலந்துக் கொள்வதை நான் பெருமையாகக் கருதுகின்றேன்.

இந்த விழாவினை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அட்சய பாத்திரா ஃபவுண்டேஷன் நிர்வாகிகளுக்கும், அதனுடைய தலைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த நேரத்திலே தெரிவித்து, மென்மேலும் இந்த நிறுவனம் வளர்ச்சியடைந்து ஏழை, எளிய மாணவ, மாணவியர் பசியை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன்,

எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், வி.சரோஜா, கே. பாண்டியராஜன், சென்னை மாநகராட்சியின் ஆணையர்

ஜி.பிரகாஷ், அட்சய பாத்திரா பவுண்டேஷன் தலைவர் மது பண்டிட் தாசா, அட்சய பாத்திரா பவுண்டேஷன் துணைத் தலைவர் சஞ்சலபதி தாசா, அட்சய பாத்திர பவுண்டேஷன் வட்டாரத் தலைவர் ஜெய் சைதன்ய தாசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *