சிறுகதை

சத்தம் – ராஜா செல்லமுத்து

ஜெயராஜின் மகன் செந்தில் வேலன் நன்றாக படிக்கும் புத்திசாலி. வகுப்பில் முதல் மாணவன் ஒழுக்கத்தில் உயர்வானவன் .செய்யும் வேலையை சிறப்பாக செய்து முடிக்கும் நேர்மையானவன்.

இந்த கோட்பாட்டுக்குள் எல்லாம் செந்தில்வேலன் இருந்ததால் ஜெயராஜுக்கு தன் மகனைப் பற்றிய எண்ணம் எப்போதும் உயர்வாக இருக்கும் .

செந்தில் வேலன் எது கேட்டாலும் அது அறிவுபூர்வமாகவும் அந்த கேள்வியின் அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் ஆவலும் உடையவனாக இருப்பான்.

அதனால் தன் மகன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சலிக்காமல் பதில் சொல்வார் ஜெயராஜ்.

இன்று அவன் பெரியவன் ஆனாலும் அவன் சிறுவயதில் குடைந்து உடைந்து கேட்ட கேள்விகள் எல்லாம் ஜெயராஜன் காது மடல்களில் அழியாமல் அப்படியே தங்கி இருந்தன.

கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் தன் மகன் இப்போதெல்லாம் கேள்வி கேட்பதில்லை என்ற ஆதங்கம் ஜெயராஜுக்கு உண்டு.

செந்தில் இப்போ எல்லாம் நீ என்கிட்ட எதுவும் கேட்கிறது இல்லையே ? எல்லாம் செல்போனிலேயே கிடைக்குதுன்னு நினைக்கிறியா ?அப்பப்ப அப்பாகிட்ட ஏதாவது கேளு என்று பூடகம் போட்டார் ஜெயராஜ்.

நிச்சயமா அப்பா இந்த செல்போனை விட உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுகிறதுல இன்பம் சந்தோஷம் வேற எதுவும் இல்ல. கண்டிப்பாக எனக்கு தெரியாதது உங்ககிட்ட நான் கேட்கிறேன் பா என்று சொன்னான் செந்தில் வேலன் .

இல்ல முன்ன மாதிரி இப்ப என்கிட்ட எதுவும் நீ கேட்கவில்லை என்றார் ஜெயராஜ் .

கண்டிப்பா நான் கேட்கிறேன்பா என்று உத்தரவாதம் சொன்னான் செந்தில் வேலன்.

அப்பாவும் மகனும் ஆரம்பிச்சிட்டீங்களா? மகன் கேள்வி கேட்கிறதும் அப்பா பதில் சொல்றதும் அப்பப்பா இப்பதான் என் காது கொஞ்சம் ஓய்வா இருக்கு. இல்லன்னா சின்ன வயசுல நீ படுத்தி எடுத்துருவ எனக்கே அவ்வளவு எரிச்சல் வரும் நீ கேக்குறதுக்கு கேள்விக்கு அவர் பதில் சொல்ல முடியாமல் முட்டி மோதி முழிக்கிறத பார்க்கும்போது ஏதோ தப்பா கூட சொல்லுங்க அப்படின்னு நான் சொல்லுவேன். ஆனா உங்க அப்பா ஒரு வார்த்தை கூட தப்பா சொல்ல மாட்டார். எங்கேயோ தேடிக் கண்டுபிடிச்சது உண்மையை மட்டும் தான் உனக்கு சொல்லி இருக்கிறார் என்று அம்மாவும் தன் பங்கிற்கு செந்தில் வேலனின் அறிவ உச்சி மோந்து பாராட்டி பேசிக் கொண்டிருந்தார்.

இப்படி செந்தில்வேலனின் பழைய நினைவுகளை அம்மா அப்பா செந்தில் என்று மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஜெயராஜ் ஆரம்பித்தார்:– செந்தில் நீ ஒரு கேள்வி கேட்ட பாரு சின்ன வயசுல. அது இன்னமும் இந்த உலகத்துல நடந்துகிட்டு தான் இருக்கு .

ஆனா அந்த கேள்வி அந்த வயசுல நீ கேட்டது உன் வயசுக்கு மீறின அறிவுன்னு நான் நினைச்சேன். ஆனா இந்த உலக இருக்கிற வரைக்கும் அந்த கேள்வியோட அர்த்தம், அந்த கேள்விக்கு பதிலும் நீ கேட்ட கேள்வியிலேயே தங்கி இருக்கு என்று ஜெயராஜ் சொன்னபோது ,

வீதியில் கத்தரிக்காய், வெங்காயம் முட்டைக்கோசு. ஆப்பிள், ஆரஞ்சு என்று உடலுக்கு நன்மை தரும் பொருட்களை காய்கறிகளை கூவி கூவி விற்றுக் கொண்டும் உடலுக்கு தீமையை விடுவிக்கக் கூடிய மனிதர்களை அணு அணுவாக சாகடிக்க கூடிய விஷயங்களை அமைதியாக விற்றுக் கொண்டு, இப்போதும் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள் என்று ஜெயராஜ் சொன்ன போது, அது என்ன கேள்வி என்பது செந்தில் வேலனுக்கும் அம்மாவிற்கும் விளங்கியது.

அப்பா நான் கேட்ட கேள்வி உண்மை தானே ?அதோட அர்த்தம் இன்னும் அப்படியே தான இருக்கு பாருங்க .

இப்ப கூட உடலுக்கு நன்மை செய்கிற வாழ்வு கொடுக்கிற காய்கறிகளை பழங்கள கூவி கூவிவிற்றுகிட்டு போறாங்க .ஆனா மனுசன கெடுக்கிற அழிக்கிற சமூகத்த சீரழிச்சு,சிகரெட், பீடி கஞ்சா சாராயம் , பிராந்தி எல்லாம் சத்தம் இல்லாம தானே விக்கிறாங்க.

நான் அப்ப கேட்ட கேள்வி சரிதானப்பா . அது இப்பவும் தொடர்ந்துட்டு தானே இருக்கு என்றான் செந்தில்வேலன்.

உண்மைதான் இப்ப பாரு நம்ம அதை பத்தி பேசிட்டு இருக்கும் போது காய்கறிகளை வித்துட்டு போறாங்க . ஆனா டாஸ்மாக் கடை, கஞ்சா விக்கிறவங்க சத்தமே இல்லாம விக்கிறாங்க.

நல்லதை கூவி தான் சொல்ல வேண்டியது இருக்கு. கெட்டதை சத்தம் இல்லாம நமக்குள் நுழைச்சர்றாங்க என்றார் ஜெயராஜ்

அப்போது அந்த வீதி வழியாக காய்கறிகளை விளம்பரப்படுத்திக் கொண்டு ஒரு பாமரனின் குரல் சத்தம் சென்று கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *