செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

சென்னை, ஏப். 29–

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் உள்பட பலர் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், சம்பவம் நடந்த சில நாள்களிலேயே சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார்.

தீவிர விசாரணை

இந்த வழக்கில் 103 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடந்து முடிந்துள்ளது. 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, அண்மையில் வி.கே.சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, அதிமுக வா்த்தக அணியைச் சோந்த மர வியாபாரி சஜீவன் ஆகியோரிடம் போலீசார் அண்மையில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.