செய்திகள்

கையிருப்பில் போதிய உணவு தானியம்: மத்திய அரசு தகவல்

டெல்லி, டிச. 18–

நாட்டின் தேவையை பூர்த்தி செய்யுமளவுக்கு போதிய உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தவும், பிரதமரின் ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் ஒதுக்கீட்டை மேற்கொள்ளவும் அவசியமான உணவு தானிய தேவைகளைப் பூர்த்தி செய்ய, மத்தியத் தொகுப்பின் கீழ் இந்திய அரசு போதுமான உணவு தானியங்களை கையிருப்பில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2023 இல் சுமார் 159 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 104 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் கிடைக்கும். 15.12.2022 நிலவரப்படி, மத்தியத் தொகுப்பில் சுமார் 180 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 111 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் உள்ளன.

ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1 என ஆண்டின் குறிப்பிட்ட தேதிகளில் தேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை மற்றும் அரிசியின் இருப்பு நிலை எப்போதும் இந்த தேதிகளின் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது. அக்டோபர் 1, 2022 அன்று 205 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 103 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருந்தது.

உணவு தானியம் உறுதி

மத்திய அரசு இந்த ஆண்டு கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலையை, குவிண்டாலுக்கு ரூ. 2125 உயர்த்தியுள்ளது. இதனால், நல்ல தட்பவெப்ப நிலையுடன், அடுத்த பருவத்தில் கோதுமை உற்பத்தி மற்றும் கொள்முதல் இயல்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த பருவத்தில் கோதுமை கொள்முதல் ஏப்ரல் 2023 முதல் தொடங்கும். முதற்கட்ட மதிப்பீட்டின்படி கடந்த ஆண்டை விட கோதுமை பயிர் விதைப்பில் நியாயமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து நலத் திட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய தொகுப்பில் போதுமான உணவு தானியங்கள் இருப்பு இருப்பதையும், விலைகள் கட்டுக்குள் இருப்பதையும் இந்திய அரசு உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *