செய்திகள்

கேளிக்கை பூங்காக்கள் பாதிப்பிலிருந்து மீள மத்திய, மாநில அரசுகளின் வரிவிலக்கு தேவை

கேளிக்கை பூங்காக்கள் பாதிப்பிலிருந்து மீள மத்திய, மாநில அரசுகளின் வரிவிலக்கு தேவை

வி.ஜி.பி. ரவிதாஸ் கோரிக்கை

சென்னை, மே.20-

கொரோனா தாக்கத்தில் இருந்து வெளியேற கேளிக்கை தொழிலுக்கு சலுகைகள் தேவைப்படுவதாக வி.ஜி.பி. ரவிதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய பொழுதுபோக்கு பூங்காக்களின் கூட்டமைப்பின் தென் மண்டல பொறுப்பாளர் வி.ஜி.பி. ரவிதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேளிக்கை பூங்காக்கள் ஏறக்குறைய 80 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கி வருவதால், அரசின் கருவூலத்துக்கு கணிசமான பங்களிப்பினை கொடுக்கிறது. ஒரு பொறுப்பான தொழில் துறை என்ற வகையில் கொரோனா பரவலை குறைப்பதில், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முடிவை நாங்கள் புரிந்துகொண்டு, அனைத்து கேளிக்கை பூங்காக்களையும் மூடினோம்.

இத்தகைய சூழலில் வணிகத்தை நடத்துவது பெரிய கேள்விக்குறியாகிவிட்டது. கேளிக்கை தொழில் இப்போது பிழைப்புக்காக போராடுகிறது. கொரோனா மற்றும் அதற்கு பிந்தைய அசாதாரண சூழல் காரணமாக திட்டமிட்ட வருவாய் இழப்புகள் மட்டும் ரூ.1,100 கோடி ஆகும். கொரோனா தொற்றுநோயின் காரணமாக நடவடிக்கைகளை நிறுத்தியதால் கேளிக்கை பூங்கா தொழில் மூலதனத்தை கூட மீட்டெடுக்க முடியாமல் உள்ளது.

கொரோனா தாக்கத்தில் இருந்து வெளியேற கேளிக்கை தொழிலுக்கு அவசர தூண்டுதல் தேவைப்படுகிறது. எனவே கேளிக்கை பூங்காக்களுக்கு ஒரு வருடத்துக்கு ஜி.எஸ்.டி. வரியை தள்ளுபடி செய்யவேண்டும். வட்டி இல்லாத மற்றும் இணை இலவச விதிமுறைகளில் பணி மூலதன வரம்புகளை இரட்டிப்பாக்குவதோடு, நிதி நிறுவனங்களில் இருந்து கடன்கள் மற்றும் பணி மூலதனத்துக்கான அசல் மற்றும் வட்டி தவணைகளை செலுத்துவதில் ஒரு வருடம் அவகாசம் அளிக்கவேண்டும்.

மின்சார துறையால் விதிக்கப்படும் குறைந்தபட்ச, நிலையான செலவு கட்டணங்களை தள்ளுபடி செய்யவேண்டும். பிரமாண்டமான நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளதால் சொத்துவரி, வேளாண்மை அல்லாத வரி, கிராம பஞ்சாயத்து கேளிக்கை பூங்கா வரி, நீர் பூங்கா, தீம் பூங்காவின் வரியை தள்ளுபடி செய்யவேண்டும். மேலும் தற்போது உள்ள அனைத்து உரிமங்களையும் ஒரு வருடத்துக்கு கட்டணம் இல்லாமல் நீட்டிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *