சிறுகதை

குவளை – ராஜா செல்லமுத்து

சிவலிங்கம் எங்கு சென்றாலும் அது டீக்கடை, ஓட்டல், உணவு விடுதி, இல்லை திருமணம் அல்லது எந்த விசேஷமாக இருந்தாலும் தான் தனியாகக் கொண்டுபோகும் மண் குவளையை எடுத்துக் கொண்டு செல்வார்.

அங்கே காபி, டீ குடிக்க வேண்டும் என்றால் தான் எடுத்துப் போகும் மண் குவளையை நீட்டுவார்.

‘என்ன சார் இது?’ என்று மற்றவர்கள் கேட்டால்,

‘இது நான் தனியே சாப்பிடுறது. எனக்கு மத்தவங்க குடிக்கிறதுல குடிக்க முடியாது. அதனாலதான் இந்த தம்ளரைக் கூடவே நான் வச்சிருக்கேன்’ என்பார். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சிவலிங்கத்தின் செயலைப் பார்த்து சிரிப்பார்கள்.

‘என்ன இது இவருக்கு மட்டும் தனி தம்ளர்? அதுவும் மண் குவளை’ என்று கேலி செய்வார்கள் .

சிவலிங்கத்தை ஒரு சித்தர் என்று சொல்வார்கள். அவர் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் எது ஓட்டி சென்றாலும் அதில் தனக்கான ஒரு பிரத்தியேகமான குவளையை வைத்திருப்பார்.

தவறியும் அவர் ஓட்டலில் கொடுக்கும் தம்ளரில் காபி அருந்துவதில்லை. தனியாகவே சாப்பிடுவார்.

அப்படி ஒருநாள் அவர் ஒரு திருமண விருந்தில் கலந்து கொண்ட போது தான் கொண்டு போயிருந்த குவளையும் கையோடு வைத்திருந்தார்.

அங்கே திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் டீ, காபி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

படாரென சிவலிங்கம் தான் வைத்திருந்த குவளையை எடுத்து நீட்டி ‘இதில் காபி ஊற்றுங்கள்’ என்றார்.

அங்கு வந்திருப்பவர்கள் களுக்கென்று சிரித்து கொண்டார்கள்.

இதென்ன புதுசா இருக்கு? உங்களுக்கு மட்டும் தனி தம்ளர்? நீங்க என்ன தீண்டத்தகாத ஆளா? என்ன இது? என்று கேட்டபோது,

‘ஆமாம் இது என் குவளைதான். நான் யார் சாப்பிடுறதிலயும் சாப்பிடுறதில்லை. இதுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு’ என்று சொன்னார் சிவலிங்கம்.

‘அப்படி என்ன கதை இருக்கு?’ என்று திருமணத்திற்கு வந்திருந்த ஒருவர் கேட்டபோது….

‘இல்ல அது ரகசியம்’ என்று கூறி அந்த ரகசியத்தை உடைக்காமல் இருந்தார் சிவலிங்கம் .

‘சொல்லுங்கய்யா, என்னதான் ரகசியம் இருக்கு?’ என்று ஒருவர் விடாப்பிடியாக கேட்டபோது,

‘இந்தக் குவளை சின்ன வயசிலிருந்தே நான் கூட வெச்சி இருக்கேன். இந்த குவளைக்குள்ள ஒரு உயிர் இருக்கு. அது என்னோட அப்பாவோட உயிர். நான் சின்ன வயசா இருக்கும்போது இதுல தான் எங்க அப்பா காபி குடிப்பார். நான் பார்த்திருக்கேன். அப்போ ஒரு முறை நான் சின்ன வயசா இருக்கும்போது, நான் அழுத போது எங்க அப்பா காபி கொடுத்தார். நான் குடிச்சிட்டு குடித்த காபியை அப்பா குடிச்சிட்டிருந்தார். அப்போது திடீர்னு அவருடைய உயிர் காபி குடிச்சிட்டு இருக்கும்போது போயிருச்சு. பாதி காபியை குடிச்ச மனுஷன். மீதி காபி குடிக்காமல மறைஞ்சிட்டாரு.

எனக்கு அப்போ விவரம் தெரியாது. வளர்ந்து பெருசாகி எங்க அம்மாவும் எங்க அப்பா கூட இந்த தம்ளர தனியா வைத்திருந்தாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு அதுக்கப்புறம் இந்த தம்ளர எடுத்து நான் குடிக்க ஆரம்பிச்சேன். எங்க அப்பா என் கூட இருக்கிறது மாதிரியே ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டுச்சு. எதைக் கொடுத்தாலும் நானும் எங்கப்பாவும் சேர்ந்துதான் குடிக்கிறோம். அப்படின்னு ஒரு உணர்வு எனக்குள்ள பொங்க ஆரம்பிச்சிருச்சு.

அதிலிருந்து எங்க போனாலும் எது சாப்பிட்டாலும் எங்க அப்பாவும் சேர்ந்து குடிக்கிறது நினைச்சுதான் இதக் கூடவே எடுத்துட்டு போறேன். மத்தபடி மத்தவங்க வாய் வச்சு குடிக்கிறதில் குடிக்கக் கூடாது அப்படிங்கிற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.

எங்க அப்பாவும் கூட இருக்கிறார் என்ற எண்ணம் அவரும் என் கூட காபி குடிக்கிறார்; அப்படின்னு ஒரு உணர்வுதான் இதுல குடிக்கும் போதெல்லாம் வருது. வேற ஒன்னும் இல்ல’ என்று சிவலிங்கம் சொன்ன போது அவரின் கண்களும் நிறைந்திருந்தன.

‘சார் இன்னொரு காபி குடிங்க. நீங்க உங்களுக்கு குடிச்சுட்டு உங்க அப்பாவுக்கும் குடுக்கணும்ல’ என்று ஒருவர் உணர்வு மேலிட சொல்லிக் காெண்டே சிவலிங்கத்தின் குவளையில் காபியை ஊற்றிக் கொண்டிருந்தார்.

சிவலிங்கத்தின் அப்பாவின் நினைவு அதில் நிறைய ஆரம்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *