சிறுகதை

குழந்தை அறிவு… | ராஜா செல்லமுத்து

“குழல் இனிது யாழ் இனிது என்பார்… 

குழந்தையின் மழலைச்சொல் கேளாதார்…”

வெக்கை வானம் வெயிலை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஓரு வெப்ப நேரம். மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் மெல்ல இறங்கியது. சின்னச் சின்னத் தூறல் மழை அதுவரையில் தாகம் தகித்துக் கிடந்த பூமியில் சொட்டுத் தண்ணீர் விழவும் அதை ஆர்வத்தோடு உள்ளிழுத்து உறிஞ்சியது. மழை விழும் நேரம், பொட்டல் பூமியிலிருந்து ஒரு விதமான வாசனையை வெளிக் கொணர்ந்தது கிராமத்து மண்.

“ஏலேய், கிருட்ணா, லேசா தூத்த போடுது. அதுக்குள்ள அடமழ புடிச்சாலும் புடிச்சிரும் ;வெரசா போயி அரிசி கிரிசி வாங்கிட்டு வா. இல்ல அடச்ச கதவு தொறக்க முடியாம மழ அப்படிப் பெய்யும் என்று கிருஷ்ணனை அவன் அம்மா தூரத்து குரலில் துரத்திக் கொண்டிருந்தாள்.

“சரிம்மோ, இந்தா போய்ட்டு வாரேன் என்ற கிருஷ்ணனின் குரலும் அந்தக் கிராமத்தெருவில் மண் வாசத்தோடு மிதந்து வந்தது.

“ஏய், இது வேனல் மழப்பா. புடிச்சசதும் விட்டுரும்; ரொம்ப நேரம் நீட்டிக்காது” என்று ஒரு பெருசு சிறுமழையைப் பற்றி சிறப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“அம்மா மணி மாமா வீட்டுக்கு போயிட்டு வருவமா? என்று மழலை மொழியில் பேசினாள் மதுமிதா.

“மழ பேயுதேடி, கொஞ்சம் நிக்கட்டுமே”

“ம்ம், தூறல் தான. போயிட்டு வருவமே என்று குழந்தையின் அறிவைமீறிப் பேசினாள் மதுமிதா

“சரி நீ தான் கூட்டிட்டு போய்ட்டு வாயேன்” என்றாள், பாட்டி பால்த்தாய்

“ம்ம், சின்னப்புள்ள தான் சொல்லுதுன்னா நீயும் ஒத்து ஊதுறியே என்ற மாரி. மதுவைப் பார்த்தாள்.

மூன்று வயதுக் குழந்தை முப்பது வயதுப் பெண் போல பேசிக் கொண்டிருந்தாள்.

“யம்மா என்ன இந்த குழந்தைக் குள்ள கெழவியோட ஆவிய ஏதும் அடச்சி வச்சுட்டாங்களா என்ன? இவ்வளவு தெளிவா பேசுது என்று உறவுகள் பேசிக் கொண்டிருந்தனர்.

“ம்ம்ம் ” என்று அழுது அடம்பித்துக் கொண்டிருந்தான் மதுமிதா.

“அழாதேடா” போவோம்” என்று மாரி சொல்வதற்குள் வாசல் வரை வந்து நின்றாள் மதுமிதா. சின்னத் தூறல் இப்போது விட்டிருந்தது. மழ விட்டுருச்சு .அதான் நான் சொன்னனே இது வேனல் மழ ரொம்ப நேரம் நிக்காதுன்னு என்ற பெரியவர் கடகடவெனச் சிரித்தார்.

“சரி வா போகலாம்” என்று மாரி சொல்ல

“அம்மா நீ போகும் போது தூக்கிக்க. வரும் போது, நான் நடந்து வாரேன் என்ற மது கைகள் இரண்டையும் எறக்கை போல் தூக்கிக் கொண்டு தன் ஆவலை வெளிப்படுத்தியது.

“சரி வா” என்ற அம்மா மதுமிதாவை அப்படியே அலாக்காகத் தூக்கினாள்.

இவ்வளவு வயசாச்சு. நடந்து வரமாட்டியா? என்று அன்புக் கோபம் கொண்டபோது

நான் வரும் போது நடந்து வாரேனே என்று மழலை மொழியில் மதுமிதா பேசியது மாரியை என்னவோ செய்தது.

“எப்பப் பாரு. எங்க போனாலும் உன்னைய தூக்கிட்டு தான் திரியனுமா? இனிமே நீ நடந்து தான் வரணும் சரியா? இல்லன்னா உன்னைய எங்கயும் கூட்டிட்டு போகமாட்டேன்

“ம்ம், என்று இரட்டை ஜடை போட்ட தலையை மேலும் பலமாக ஆட்டியது குழந்தை .மாரியின் இடுப்பில் ஏறிக் கொண்ட மதுமிதா தன் சின்னக் கழுத்தை சாய்த்து நெடு வானம் பார்த்தாள். நீல வானில் மிதந்து கொண்டிருந்தன நிறைய மேகங்கள் .அதோடு சேர்த்து மழை மேகங்களும் மெல்ல மெல்ல மிதந்து கொண்டிருந்தன.

“அம்மா மழ போயிருச்சு” என்று இரண்டு கைகளையும் தட்டித் தட்டி ஆரவாரம் செய்தது.

சும்மா இருக்க மாட்டியா?

“பேசாம உட்காரு என்று அன்பு அரற்று அரற்றினாள் மாரி

“ம்ம்” என்று தன் மழலை உதட்டில் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்தது குழந்தை சிறிது நேரத்திற்கெல்லாம் மணி வீட்டிற்குச் சென்றார்கள்.

“வாங்க வாங்க” என்று வரவேற்றான் மணி.

“குழம்பு வாங்கிட்டு போகலாம்னு வந்தோம்ண்ணே”

“ம்ம்” ஊத்திட்டு போம்மா என்ற மணி சமையலறைக்குக் கூட்டிப் போனான்.

உருளைக் கிழங்கும் கறியும் குழம்புச் சட்டியில் ஒன்று சேர்ந்து மிதந்தது.

‘‘போட்டுக்கிரவாண்ணே எவ்வளவு வேணும்னாலும் போட்டுக்கம்மா ” என்று உத்தரவு உரிமையைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டான் மணி. கறியையும் உருளைக் கிழங்கையும் அள்ளிப் போட்டுக் கொண்டு,

சரிண்ணே போயிட்டு வாரேன் என்று கிளம்பினாள் மாரி.

“சரிம்மா” என்று வழிவிட்டான் மணி

“போகலாமா மது”

“ம்ம்” என்று உற்சாக மொழியில் தலையாட்டிய குழந்தையை வா போகலாம் என்று கூப்பிடவும்

“அம்மா”

“ம்”

“நீ சாவடி வரைக்கும் தூக்கிட்டு வாரீயா? அதுக்கப்பறம் நான் நடந்துவாரேன்” என்ற மதுவை ஒரு மாதிரியாகப் பார்த்த மாரி மதுவைத் தூக்கினாள்.

“ஐ” ஐ என்று இரண்டு கைகளையும் தட்டி விளையாடிய மதுவை

“சும்மா இருக்க மாட்டியா?

என்று செல்லக் கோபம் கொள்ளவும் இடுப்பில் இருந்தவள் அமைதியானாள்.

சாவடி வரவும் எறங்குறயா? என்று இறக்கிவிட்டாள்.

“ம்ம” என்று இறங்கியவள்

“அம்மா”

“ம்”

“ரங்கசாமி கடை வரைக்கும் தூக்கிட்டு வா” அதுக்கப்பறம் நடக்கிறேனே என்று மதுவை ஏறிட்டுப் பார்த்தவள்

சரி எனத் தூக்கி மறுபடியும் இடுப்பில் வைத்து

“ஐ ஐ ” எனத் தலையாட்டினாள்.

“ம்ம் ” பேசுமா இருக்க மாட்டியா? கறிக் கொழம்பு கையில இருக்கு; கீழ கொட்டிரப் போகுது; ஆடாம வா என்று சொல்லவும் அமைதியாக வந்தாள் மதுமிதா

“ரங்கசாமி கடை வரவும்

“கடை வந்திருச்சு எறங்கிக்க என்று மதுமிதாவை இறக்கி விட்டாள் மாரி.

“அம்மா … அம்மா”

“ம்” சொல்லு”

“அம்மா ஒடுசி வீட்டு வரைக்கும் தூக்கிட்டு வா” அதுல இருந்து நான் நடக்கிறேன்.

“எய், நீ கண்டிப்பா அதுக்கப்பறம் நடப்பியா?

“கண்டிப்பா நடப்பேன்மா” என்ற மது” மாரியின் இடுப்பை விட்டு இறங்கவே இல்லை.

இடது இடுப்பில் மதுமிதா இருந்தாள் ;வலது கையில் கறிக் குழம்புத்தூக்கு வாளி இருந்தது.

ஒடுசி வீடு வரவும் மதுமிதாவை இறக்கிவிட்டவள்

“அம்மா என்று கூப்பிட்ட மதுவை ஏறிட்டுப் பார்த்தவள்,

என்ன? என்றாள்.

அம்மா வீடு பக்கத்தில தான அப்படியே தூக்கிட்டு வந்திரு என்று கொஞ்சம் மழலையில் சொன்ன போது

ஏய் என்னைய நீ ஏமாத்திட்ட என்று மாரி சொன்ன போது கடகடவெனச் சிரித்தாள் மதுமிதா.

சற்று நேரத்திற்கெல்லாம், வீடு வந்தனர். நடந்த அத்தனையும் வீட்டில் சொல்ல, வீடே கெக்கலி கொட்டிச் சிரித்தது. மதுமிதாவும் சேர்ந்து சிரித்தாள் ;குழந்தை அறிவை நினைத்து குதூகலம் கொண்டனர்.

அப்போது விட்டுப் போயிருந்த தூறல் மழை தொடர் மழையாய்த் தொடர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *