செய்திகள்

குடும்ப அட்டைகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.2,188 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை 

Spread the love

சென்னை, மார்ச் 26–

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் பொருட்களை வழங்குவதற்கு ரூ.2,187 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை கருத்தில் கொண்டும் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்படும். நியாயவிலைக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க டோக்கன் முறையில் ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் ரூ.1000 மற்றும் பொருட்கள் விநியோகிக்கப்படும். மேலும் மார்ச் மாதத்தில் வாங்க இயலாதவர்கள் ஏப்ரல் மாதத்தில் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 2 கோடியே 1 லட்சத்து 46,993 அரிசி குடும்ப அட்டைகள் இருப்பதாகவும் இந்த அட்டைகளுக்கு ரூ.1000 வீதம் நிவாரணத் தொகை வழங்க ரூ.2014 கோடியே 69 லட்சத்து 93,000 நிதி தேவைப்படும் என்று மதிப்பிட்டு அரசுக்கு உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் கடிதம் அனுப்பினார். மேலும், குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பருப்பு, பாமாயில், சர்க்கரை குறித்த விவரங்கள் குறித்து உணவுப்பொருள் வழங்கல் கழகத்தின் மோலாண் இயக்குநர் கடிதம் அனுப்பினார்.

அக்கடிதத்தில், பிப்ரவரி மாத ஒதுக்கீடு அடிப்படையில் பருப்பு 20 ஆயிரம் டன் (ஒரு டன் ரூ.30 ஆயிரம்) என ரூ.60 கோடி ஒரு மாதத்துக்கு தேவைப்படும். அதே போல் 1 கோடியே 56 லட்சம் பாக்கெட் பாமாயில், ஒரு பாக்கெட் ரூ.25 வீதம் ரூ.39 கோடி, அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகளுக்கு 2,950 டன் சர்க்கரை, ஒரு டன் ரூ.13,500 வீதம் ரூ.3 கோடியே 98 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் இதர அட்டைகளுக்கு 28,050 டன், ஒரு டன் ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.70 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.173 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரம் தேவைப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வீதம் நிவாரணம் மற்றும் இலவச பொருட்களை ஏப்ரல் மாதத்துக்கு மட்டுமே வழங்க உணவுப்பொருள் வழங்கல் ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டோக்கன் முறை

மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் முறை பின்பற்ற வேண்டும். ரூ.1000 மற்றும் இலவச பொருட்களை பெற விரும்பாதவர்கள், ‘www.tnpds.gov.in’ மற்றும் tnepds கைபேசி செயலி மூலம் அட்டை எண்ணை குறிப்பிட்டு விருப்பத்தை அறிவிக்கலாம்.

அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னையில் உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஆகியோர் ரூ.1000 நிவாரணத் தொகையை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ரூ.2,187 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *