ஆர். முத்துக்குமார்
75–வது குடியரசு தினத்தை நாடு கொண்டாட தயாராகி விட்டது. ‘மக்கள் பங்கேற்பை’ அதாவது ஜன் பதிதாரி என்ற கருத்தில் பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரையாற்ற இருக்கிறார்.
நமது ராணுவ வலிமை, மிடுக்கான ராணுவ அணிவகுப்பு, கண்கவர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ரதங்கள், நாட்டியம், இசை நிகழ்வுகள், பாரம்பரிய உடையணிந்து இந்தியாவில் இருக்கும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ வெளிப்படுத்தும் அம்சங்கள் இந்த வருடமும் ஜனவரி 26 அன்று காலை நடைபெறும்.
இம்முறை எகிப்து அதிபர் சிசி குடியரசு தின சிறப்பு விருந்தினராகபங்கேற்பார். இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு முறை பயணத்தை நம் மண்ணில் துவக்கும் அவர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார். குடியரசு தின நிகழ்வு முடிந்த பிறகு ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து கலந்து பேசவும் இருக்கிறார்.
உக்ரைன் விவகாரம், கொரோனா தொற்றுக்குப் பிறகான பொருளாதார மீட்சிபோன்ற உலக விவகாரங்கள், இரு நாடுகளிடையே வர்த்தக விரிவாக்கம், ராணுவ தளவாட ஒப்பந்தங்கள் என பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கிறது.
இந்தியா – எகிப்துக்கு இடையே வர்த்தகம் சமீபமாக அதிகரித்து வருகிறது. 2021–22–ல் ரூ.59 ஆயிரம் கோடி வர்த்தகம் ஆகியுள்ளது. அதில் ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்திருப்பது நல்ல செய்தியாகும்.
எகிப்தில் இந்தியாவின் 50 நிறுவனங்கள் ரூ.25 ஆயிரம் கோடி வர்த்தகம் செய்து கொண்டும் இருக்கிறது.
எகிப்து அதிபர் சிசியுடன் ஐந்து மந்திரிகள், பல மூத்த அதிகாரிகள் மற்றும் பல துறைகளில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்கள், நிபுணர்கள் கொண்ட உயர்மட்ட குழுவும் வர இருப்பது வருங்காலத்தில் இந்தியா– எகிப்து நல்லுறவுகளுக்கு நல்ல அடித்தளம் போடும் நிகழ்வாகவே அமையும்.
நமது வெளியுறவு கொள்கைகள் ரஷ்யாவையும் அமெரிக்காவையும் நட்பு நாடாகவே பார்க்கிறது. சீனாவை சற்றே அச்சத்துடன் பார்த்து வருகிறோம், அவர்களை பாகிஸ்தானுக்கு இணையான எதிரி நாடாக அறிவிக்கவில்லை என்றாலும் பல கட்டங்களில் எதிரியாகத் தான் பார்த்தும் வருகிறோம்.
சமீபமாக இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகளை கண்டும் காணாமல் தள்ளி நிற்க ஓர் காரணம் சீனாவின் முதலீடுகளை இலங்கை விரும்ப தொடங்கியதால் என்றும் யோசிக்க வைக்கிறது.
உலக அரங்கில் எலியும் – பூனையுமாக இருக்கும் பல நாடுகள் வர்த்தக உறவுகளை அறுத்துக் கொள்ளாது இருக்கின்றன, அதற்கு ஜப்பான், சீனா மற்றும் ரஷ்யா ஓர் நல்ல முன்உதாரணங்கள் ஆகும்.
ஜப்பானுடன் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் கூட வரப்பு சிக்கல்கள் இரண்டாம் உலக போர் காலத்தில் இருந்தே நிலவுகிறது. ஆனால் தங்களுக்குள் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளவில்லை! அதை போன்றே என்றேனும் நாமும் பாகிஸ்தான் அதிபரை அழைத்து நமது ராணுவ மரியாதையை செலுத்தி நமது வலிமையையும் காண வைக்கும் நாள் வரவேண்டும்.
நம் இரு நாடுகளுக்கு இடையே இன்று இருக்கும் சண்டை சச்சரவுகள் சிறிய பகுதியில் யாருக்கு உரிமை என்பது மட்டுமே!
நம் நாட்டில் மாகாணங்கள் பிரிக்கப்பட்ட நாளில் எழுந்த வரப்புச் சண்டைகள் மெல்ல தணிய ஓரு முக்கிய காரணம் கால ஓட்டத்தில் மக்கள் நடமாட்டமாம். பகையையெல்லாம் கடந்து நமது தேசம் என்ற உணர்வோடு செயல்பட பணிகளுக்காக குடியேற ஆரம்பித்ததால் தான்.
குறிப்பாக மத்திய அரசுப் பணிகளில் வெவ்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் கட்டாயமனதால் கூட இருக்கலாம்!
பாகிஸ்தானில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார சூழலிலும் அரசியல் குழப்பம் நிலவும் தருவாயில் இந்தியாவின் நடவடிக்கைகளை தவறான கோணத்தில் உலக நாடுகள் பார்க்கலாம்.
ஆனால் தேவைப்படும் உதவிகளை செய்ய முற்பட்டால் நாம் நம் இரு நாடுகளின் நூறாவது குடியரசு தினத்தை கொண்டாடும் நாளில் பகையை மறந்து கிழக்கு, மேற்கு ஜெர்மனியை போல் இணைந்து செயல்படும் நாடாக மாறவில்லை .என்றாலும் எல்லை போர் பதட்டம் நிலவாத பகுதியாக மாறிடும், மாறவேண்டும்.
நாம் ஜி.20 நாடுகளின் தலைமையில் இருக்கும் போது பல முன்னணி நாடுகளின் ஆதரவோடு அப்படி ஓர் நல்லநாள் உருவாக ஆலோசனை செய்ய துவங்கலாம்.
பாகிஸ்தான் நம்மோடு அமைதியையோ, நட்பு நேச நாடாகவோ மாற ஆசைப்படாது என்பதற்கு மதவெறியர்கள் காரணமாக இருக்கலாம். அதே சந்தேகக் கண்ணோடு தானே நம்மையும் அவர்கள் பார்ப்பார்கள்.
மொத்தத்தில் உடனடி தீர்வு என்பது எட்டாத கனியாக இருந்தாலும் அசைக்க அசைக்க மலையையும் நகர்த்தி விடலாம் அல்லவா!