சிறுகதை

கிழிசல் காரணம்


ராஜா செல்லமுத்து


ஒரு விழாவிற்காக ஜெயபாஸ்கரனும் முத்துவும் சென்றிருந்தார்கள்.

அது ஒரு இலக்கிய விழா. அந்த இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக நிறைய இலக்கிய வாதிகள், எழுத்தாளர்கள் பார்வையாளர்களுடன் அந்த அரங்கமே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

அந்த விழா முடிவடையும் வேலையில் மதிய உணவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதனால் விழாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் போகாமல் மதிய உணவை உண்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள்.

அதன்படியே ஜெயபாஸ்கர், முத்து இருவரும் அந்த விழாவின் கடைசி நேரம் வரை இருந்தார்கள் .

விழா நிறைவு பெற்றது. உணவு அருந்தும் இடத்திற்கு சென்றபோது, அங்கே தனக்கு தெரிந்த ஒரு பெண்மணியை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டுப் போனான் முத்து,

அந்தப் பெண்ணுக்கும் இலக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தது.

ஆனால் எப்படி அந்த விழாவிற்கு வந்து இருக்கிறாள்? என்பது அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

அந்த பெண்ணும் இன்னொரு பெண்ணும் உணவருந்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

நேரடியாக அந்தப் பெண்ணுடன் சென்ற இந்த விழாவிற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது ? என்று கேட்டான் .

பதிலேதும் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

சொல்லு இந்த விழாவிற்கு என்ன சம்பந்தம் என்று மறுபடியும் கேட்க அவள் பதில் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

ஆனால் முத்து விடுவதாக இல்லை அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு தெரிந்த ஒரே நபர் முத்துவாகத்தான் இருந்தான். அவன் சொல்லாமல் இந்த இடத்திற்கு அவள் வந்தது எப்படி? என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. குழப்பமாகவும் இருந்தது.

அப்படி அவன் அந்தப் பெண்ணை விசாரித்துக் கொண்டு போகும்போது அவன் மனதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்தன.

இந்தப் பெண் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருக்கிறாளா? அல்லது எனக்கு மட்டுமே தெரிந்த இந்த விழாவிற்கு அவள் எப்படி வந்தாள்? என்ற சந்தேகங்கள் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தன .

அவள் சொல்லாமல் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்த போது அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.

குழப்பத்தின் உச்சிக்கே போனான்.

எப்படி இந்தப் பெண் இந்த இடத்திற்கு வந்தாள் என்று அவன் குழம்பி நடந்தபோது அவன் அணிந்திருந்த பேண்டை பைக்கில் இருந்த கம்பி கிழித்தது .

பெரிய கிழிசலை அது ஏற்படுத்திவிட அவன் மனது சஞ்சலப்பட்டது .

மேற்கொண்டு ஆனால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.

இலக்கியவாதிகள் நிறைந்து இருக்கும் அந்த இடத்தில் கிழிந்த சட்டை போட்டுக்கொண்டு எப்படி நடக்க முடியும்? என்று குழம்பி நடந்தான்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்தப் பெண் தப்பித்தாள்.

இப்போது முத்து மனது முழுவதும் அந்தப் பெண் அந்த விழாவிற்கு எப்படி வந்தாள் ? என்பதை விட தன்னுடைய பேண்ட் எப்படி கிழிந்தது ? என்று கிழிந்த கால்சட்டை போட்டுக்கொண்டு நாம் வெளியே நடக்க முடியுமா ? என்பதில் அவன் கவனம் முழுவதும் நிறைந்தது .

ஒரு விஷயத்தை மறப்பதற்கு இன்னொரு விஷயம் வரும் என்பது முத்துவிற்கு நிகழ்ந்தது.

இப்போது அவள் எப்படி இந்த விழாவிற்கு வந்தாள் என்பதை விட இந்தப் பேண்ட் எப்படி கிழிந்தது? என்றுதான் வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தான் முத்து.


Leave a Reply

Your email address will not be published.