சிறுகதை

கத்தரிக்காய் சமையல் சாதம்! | சின்னஞ்சிறுகோபு

“வீட்டிலே சும்மாதானே இருக்கிங்க! இன்னைக்கு நீங்கதான் சமைக்கிறிங்க! அப்பதான் வீட்டிலே பெண்கள் படும் கஷ்டம் உங்களுக்குப் புரியும்!” என்று கோபமான கண்டிப்புடன் என் மனைவி சொல்லவே நானும் வேறு வழியில்லாமல் சம்மதிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளானேன்!

‘என்ன பெரிய சமையல்? காலையில் காபி போடலையா! அது போல சிம்பிளா ஒரு சாம்பார் செய்து, நாலு அப்பளம் பொரித்து, சாதம் வைத்துவிடலாம்’ என்று வேறு வழியில்லாமல் முடிவு செய்தேன்!

பிரிஜ்ஜை திறந்துப் பார்த்தேன். பூசணிக்காய் கீற்று இருந்தது. ‘பூசணிக்காய் சாம்பார் செய்யலாம்தான். ஆனால் பூசணிக்காயின் தோலை அரிவாள்மனையில் சீவவேண்டும். அது ரிஸ்க்! கத்தரிக்காய் என்றால் எளிதாக ‘சதக்…சதக்…’கென்று வெட்டிப்போட்டு சாம்பார் வைத்துவிடலாம்!’ என்று தோன்றியது.

‘அப்போதுதான் சாம்பார் வைக்கும் அடிப்படை விஷயமே நமக்குத் தெரியாதே’ என்ற உண்மை என் மனதிற்குள் உறைத்தது!

ஐயயோ…சாம்பார் செய்வது எப்படி?

அப்போதுதான் சட்டென்று ‘யூடியூப்’ ஞாபகத்திற்கு வந்து மனதிற்கு தெம்பூட்டியது.

யூடியூப்பில் ‘காய்கறி சாம்பார் செய்வது எப்படி?’ என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக பார்த்து மனதில் செய்முறைகளை மனப்பாடம் செய்துக்கொண்டேன்! அப்புறம் வீட்டிலே கத்தரிக்காய் இல்லையே என்ன செய்வது என்று யோசித்தேன். இந்த லாக்டௌனில் கடைக்குப் போய் வாங்க முடியாதே!

அப்போதுதான் பக்கத்து போர்ஷன் பார்வதி மொட்டைமாடியில் சில தொட்டிகளில் கத்தரிச்செடி வளர்த்திருப்பதையும் சொந்த கிராமத்திற்கு சென்ற அந்த பார்வதி குடும்பத்தினர் இந்த லாக்டௌனால் இங்கே அப்பார்ட்மெண்ட்டுக்கு திரும்பாததும் அதில் சில கத்தரிக்காய்கள் காய்த்து இருந்ததும் நினைவுக்கு வந்தது.

மொட்டைமாடிக்கு ஓடோடி சென்று என் மனைவிக்கு தெரியாமல் ஒரு ஐந்து கத்தரிக்காய்களை பறித்து வந்தேன். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை!

அப்புறமென்ன சமையலறையில் புகுந்து கத்தியை எடுத்து கத்தரிக்காய்களை ஒரு தட்டில் வைத்து கேரட் வெட்டுவது போல வட்டம் வட்டமாக வெட்டித் தள்ளினேன்!

அப்போது பூனையைபோலை சமையலறைக்கு வந்து எட்டிப்பார்த்த என் மனைவி திடுக்கிட்டு, ” என்ன செய்யுறிங்க? எதுக்கு கத்தரிக்காயை வட்டம் வட்டமாக வெட்டி வைத்திருக்கிங்க? ” என்று சத்தமிட்டாள்.

“சாம்பாருக்குதான்! கத்தரிக்காய் சாம்பார் வைக்கப்போகிறேன்!” என்றேன் கம்பீரமாக!

“கத்தரிக்காயை குறுக்காலே மூணு நாலாக அல்லவா வெட்டவேண்டும்? இப்படி வட்டம் வட்டமாவா வெட்டுவாங்க? என்ன கத்தரிக்காய் பஜ்ஜியா போடப்போறிங்க? சரி, வெட்டிட்டிங்க….அடுத்தடுத்த வேலையை பாருங்க” என்றாள்.

எனக்கு வேர்த்துக் கொட்டியது!

அதோடு காலையில் செய்ததைப் போலவே ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து சமையலறை முன் போட்டு உட்கார்ந்தது என் செல்லப் பிசாசு!

‘இதென்னடாது….பிரச்சனை ஆரம்பிக்கிறதே’ என்று நான் கொஞ்சம் பயந்தேன்!

“பயப்படாதிங்க! நான் சொல்லித் தருகிறேன், அதுபோல செய்யுங்க!” என்றாள்.

அது எனக்கு கொஞ்சம் ஆறுதலாகவும் தெம்பாகவும் இருந்தது.

“அதோ அந்த குக்கரை எடுங்கள். அதில் அதோ அந்த டம்ளரால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள்” என்றாள்.

அதுபோலவே செய்தேன்.

“அதோ அந்த பித்தளை டம்ளரால் தலையை தட்டி ஒரு டம்ளர் அரிசியை எடுத்து அதோ அந்த சில்வர் பாத்திரத்தில் போடுங்கள்” என்றாள்.

அரிசியை பார்த்தால் இரண்டு பாத்திரங்களில் அரிசி இருந்தது! ஒன்று நல்ல வெள்ளையாக இருந்தது. இன்னொன்று கொஞ்சம் மங்கிய நிறமாக இருந்தது.

நான் யோசித்துக்கொண்டே, கொஞ்சம் மங்கியநிற அரிசியை அள்ளப் போனேன்! “அது இட்லி அரிசி ; பக்கத்தில் என்னைபோல நல்ல நிறமாக இருக்கிறதே அதுதான் பச்சரிசி! அதில் ஒரு டம்ளர் தலையை தட்டியெடுத்து அந்த பாத்திரத்தில் போடுங்கள்!” என்றாள்.

எனக்கு என் மனைவியின் தலையில் செல்லமாக தட்டவேண்டும் போலிருந்தது!

அரிசியை எடுத்துப் பாத்திரத்தில் போட்டு நன்றாக தண்ணீரை ஊற்றிக் களைந்து அரிசியை சுத்தம் செய்தேன். ” அரிசியில் மூன்று டம்ளர் தண்ணீரை ஊற்றி குக்கருக்குள் வையுங்கள்” என்றாள்.

என் மனைவி ஏதோ கொஞ்சம் கொஞ்சம் சொல்லிக் கொடுப்பதும் ஆறுதலாகத் தான் இருந்தது.

“சாம்பார் வைக்கப்போறேன்னு சொன்னிங்களே, அந்த சிறு கிண்ணத்தால் ஒருகிண்ணம் துவரம்பருப்பை எடுத்து, அந்த அரிசிக்கு மேல் ஒரு சிறுபாத்திரத்தில் வைத்து குக்கரில் கூடவே வேகவைத்து விடுங்கள்” என்றாள்.

இரண்டு கண்ணாடி பாட்டில்களில் துவரம்பருப்பு இருந்தது.ஒரு பாட்டிலில் இருந்த துவரம் பருப்பு மட்டும் கொஞ்சம் தடிமனாக இருந்தது. அது ‘ஏ’ ரகமாக இருக்கும் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டே எடுத்தேன்.

உடனே பாய்ந்து வந்தது ஆந்தைக் குரல்! “அது கடலை பருப்பு! கடலை பருப்புக்கும் துவரம் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாத நீங்க என்னைத்தை சமைக்கப் போறீங்க?” என்று என் நம்பிக்கையை பலவீனப்படுத்தினாள்.

ஒருவழியாக குக்கருக்குள் அரிசி, துவரம் பருப்பெல்லாம் வைத்துவிட்டு, குக்கரை மூட முயன்றேன்.அது மூடவே வரவில்லை. அவளிடம் உதவிக் கேட்கவும் மனசு இடம் கொடுக்கவில்லை! நீராவி எந்திரத்தை கண்டுப்பிடித்த அந்த ஜேம்ஸ்வாட்தான் இந்த குக்கரையும் கண்டுப்பிடிச்சானோ’ என்று அர்த்தமில்லாமல் ஏதோ நினைத்துக் கொண்டேன்.

மூச்சை ‘தம்’ பிடித்துக்கொண்டு, எப்படியோ ஒருவழியாக குக்கரை மூடிவிட்டு கம்பீரமாக நின்றேன்!

“என்ன நிக்கிறிங்க? இன்னும் வெயிட் போடவேண்டாமா?” என்றாள்.

” வெயிட்டா? அதான் போட்டிருக்கேனே! இந்த லாக்டௌவுனுக்கு முன் 70 கிலோ இருந்தேன். இப்போது 80 கிலோ இருக்கேனே” என்றேன்.

“உங்க வெயிட்டைச் சொல்லலை, நீங்கதான் தொந்தியானை மாதிரி இருக்கிங்களே! குக்கர் மீது வெயிட் போட வேண்டாமா!” என்றதும்தான் ஞாபகத்திற்கு வந்தது.

குக்கரின் மீது அந்த வெயிட்டைப் போட்டேன்!

அந்த கிண்ணத்தில் ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு எலுமிச்சையில் பாதியளவு புளியை எடுத்து ஊறப்போடுங்க. ஒரு மூன்று டீஸ்பூன் சாம்பார் பொடியையயும் ஒரு ஒன்றரை டீஸ்பூன் உப்பையும் அதில்போட்டு ஊறவிடுங்கள்! குக்கரில் ஐந்து விசில் அடித்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கிவைத்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே எங்கோ சென்றாள்.

எனக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது. வெளியே டிவியில் சினிமா பாட்டு சத்தம் கேட்டது. அந்த படத்தின் கதாநாயகி நயன்தாராவா, திரிஷாவா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, குக்கர் விசிலடித்தது! நான் தொடர்ந்து சினிமா நினைவுகளில் மூழ்கியிருந்தபோது அது அடுத்தடுத்து விசிலடித்தது!

திடீரென்று நான் சுயநினைவுக்கு வந்து, ‘இது எத்தனையாவது விசில்? மூனாவதா, நாலாவதாயென்று குழம்பினேன். உத்தேசமாக இது நான்காவது விசிலாகதான் இருக்கும் என்று நம்பி, அடுத்ததாக ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரை ஜாக்கிரதையாக இறக்கி வைத்தேன்.

அடுத்ததாக ஊறப்போட்டிருந்த புளியை நன்றாக கரைத்தேன்! ‘சாம்பார் எப்படியிருக்குமோ’யென்று என் வயிற்றில் புளிக்கரைப்பது போலிருந்தது! அந்த புளி, சாம்பார்பொடி, உப்பு கரைசலை வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தேன். அந்தக் கரைசலில் சில துளிகளை நாக்கில் விட்டுப் பார்த்தேன். அது அதிக காரமோ, புளிப்போ, கரிப்போ இல்லாமல் ஒருவித வித்தியாசமான ருசியில் நம்பிக்கையை அளித்தது. அந்த கரைசல் கொதிக்க ஆரம்பித்தபோது, நான் வட்ட வட்டமாக வெட்டி வைத்திருந்த கத்தரிக்காயை எடுத்து அதில் போட்டேன். அப்போது என் மனைவி மீண்டும் சமையலறைக்கு வந்து சேர்ந்தாள்.

“அட, சாம்பார் நல்லா கொதிக்குது போலிருக்கே! குக்கர் ஆவி நின்றிருக்கும். அதைத்திறந்து, துவரம் பருப்பையெடுத்து, லேசாக கடைந்துவிட்டு இந்த சாம்பாரில் ஊற்றுங்கள்!” என்றாள். அப்படியே செய்தேன்!

‘சாதம் சமைத்து, ஒரு சாம்பார் செய்வதற்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே, பெண்களெல்லாம் தெய்வபிறவிகள்தான்’ என்று நினைத்துக் கொண்டேன்!

“சரி,சாம்பார் நன்றாக கொதிக்க ஆரம்பித்துவிட்டது. நல்லா வாசனைகூட வருது! இறக்கி வைத்துவிடலாமா?” என்றேன்.

“ஏன் கடுகு தாளிக்க வேண்டாமா?” என்றாள்.

அவள் சொல்லியபடி கடுகை காய்ந்த எண்ணையில் போட்டேன். அது ‘பட பட’வென்று வெடித்தபோது, எனக்கு பள்ளிக்கூட வயதில் சீனிவெடி கட்டுகள் வெடித்தது நினைவுக்கு வந்தது!

” என்ன வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நிக்கிறிங்க! கடுகு கறுகிவிடப்போகிறது! அதை சாம்பாரில் கொட்டுங்க!” என்றாள்.

அது ஏற்கனவே ‘அது கறுப்பாகதானே இருக்கு’ என்று நினைத்துக்கொண்டே, தாளித்த கடுகை சாம்பாரில் கொட்டிவிட்டு, “சாம்பாரை இறக்கி வைத்து விடலாமா?” என்றேன்.

“ஏன், அதில் பெருங்காயம் போடவேண்டாமா? அதோ தூள் பெருங்காயம் டப்பாவில் இருக்கு பாருங்க! அதையெடுத்து லேசா கொஞ்சம் தூவுங்க” என்றாள்.

பெருங்காயத்தை தூவிவிட்டு, “சாம்பாரை இறக்கி விடலாமா?” என்றேன். நானே தயாரித்த சாம்பார் தளபுளவென்று கொதித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போதே ஒரு தனி உற்சாகமாக இருந்தது!

” ஏன் கருவேப்பிலை போட வேண்டாமா?” என்றாள்.

பிரிஜ்ஜை திறந்து இரண்டு கருவேப்பிலையை எடுத்து சாம்பாரில் போட்டேன்.

” இப்படிதான் கருவேப்பிலையை முழுசா காம்புடன் போடுவாங்களா? உருவி இலைகளை மட்டும் போடை வேண்டாமா?” என்றாள்.

எனக்கு ‘அட, ச்சே’ என்று சலிப்பாகி விட்டது. ஒரு கத்தரிக்காய் சாம்பார் சாதம் வைப்பதில்தான் எத்தனை எத்தனை பாடுகள்!

“கருவேப்பிலையை எடுத்துப் போட்டிங்களே, கூடவே கொத்துமல்லியும் இருந்ததே, அதிலும் கொஞ்சம் எடுத்துப் போட்டிருக்கலாமே! சரி பரவாயில்லை, சாம்பாரை இறக்கி வைத்துவிடுங்கள்!” என்றாள்.

நான் ஜாக்கிரதையாக சாம்பாரை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, சமையல் முடிந்து விட்டது. இனி சாப்பிட வேண்டியதுதான்” என்றேன்.

“ஏன் அப்பளம் பொறிக்க வேண்டாமா?” என்றாள்.

‘ஓ….அது வேறு இருக்கிறதா?’ என்று நினைத்தபடி, வாணலியை அடுப்பில் வைத்துவிட்டு, எண்ணெய் இருந்த ஜாடியை எடுத்தேன்.

“அதை ஏன் எடுக்கிறிங்க? அது நெய்! நெய்யிலா அப்பளம் பொறிக்கப் போறிங்க?!” என்று அதட்டினாள்.

அப்போது நல்லெண்ணெய் பாட்டிலிருந்த ஒரு நடிகை என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்!நானும் சிரித்தேன் . என் மனைவி ஞாபகம் வந்ததும் அடக்கிக்கொண்டேன்.

ஒருவழியாக நான் கத்தரிக்காய் சாம்பார் வைத்து அப்பளம் பொறித்து சமைத்து வைத்ததை நானும் என் மனைவியும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டோம்.

“அட, கத்தரிக்காய் சாம்பார் சூப்பராயிருக்கு! ஆனால் எனக்கு ஒரே ஒருவிஷயம் மட்டும்தான் புரியவில்லை! இந்தக் கத்தரிக்காயை எப்போது கடைக்குப் போய் வாங்கிட்டு வந்திங்க? அன்னைக்கு நீங்க காய்கறி வாங்கிட்டு வந்தபோது, பையிலிருந்து எடுக்க மறந்துட்டிங்க போலிருக்கு!” என்றாள்.

நான் அதற்கு லேசாக சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் சமாளித்தேன்! அது திருட்டு கத்தரிக்காய் என்பது என் மனைவிக்குத் தெரியாது! நீங்களும் சொல்லித்தொலைத்து விடாதீர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *