நாடும் நடப்பும்

ஒரே சூரியன், ஒரே மின் விநியோகம் : மோடி அழைப்பு


ஆர். முத்துகுமார்


கடந்த ஒரு வாரமாக தொடர் மழையால் தமிழகத்தில் சூரிய வெப்பத்தை காணாது துணிகள் எல்லாம் ஈரமாய் துணிக் கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் சூரிய ஒளி சமாச்சாரத்தை பேசுவது ‘வெந்த புண்ணில் சூடான வேலை’ பாய்ச்சுவது போல் இருக்கும்!

ஆனால் சமீபகால இயற்கை இடர்களை ஆண்டுக்கு ஆண்டு சந்தித்து வரும் இந்நேரத்தில் பிரதமர் மோடி அறிவித்திருக்கும் ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகம்’ என்ற அறைக்கூவல் உலகப் பார்வையை இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்துள்ளது.

ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பங்கேற்றார். அப்போது அவரும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இணைந்து “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகம்” திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

புதிய திட்டம் குறித்து பிரதமர் மோடி பேசும்போது, “சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பசுமை சூழலைப் பாதுகாக்க சூரிய மின் சக்திக்கு மாற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதற்கு “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகம்” திட்டம் பாதை அமைத்து கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

இது பிரதமர் மோடியின் கனவு திட்டமாகும். அவரது முயற்சியால் கடந்த 2015 நவம்பர் 3-ம் தேதி சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ) உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் செயல் படுகிறது. இந்த கூட்டமைப்பில் 124 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உலகம் முழுவதும் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க ஐஎஸ்ஏ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகம்” திட்டம் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த பின்னணியில் கடந்த 2-ம் தேதி கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐஎஸ்ஏ கூட்டத்தில் “ஒரே சூரியன் பிரகடனம்” என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகள் புதிய திட்டத்தை முன்னின்று வழிநடத்த உள்ளன. ஜெர்மனி, ஜப்பான் உட்பட 80 நாடுகள் திட்டத்தில் ஆர்வத்துடன் இணைந்துள்ளன.

முதல் கட்டத்தில் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் சூரிய மின் விநியோக திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன. 2-வது கட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகள், 3-வது கட்டத்தில் உலகம் முழுவ தும் சூரிய மின் சக்தி இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

புதிய திட்டம் குறித்து ஐஎஸ்ஏ பொது இயக்குநர் அஜய் மாத்தூர் கூறும்போது, “வரும் 2050-ம் ஆண்டுக்குள் 2,600 ஜிகாவாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப் படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.19,36,503 கோடி மிச்சமாகும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சூரிய மின் சக்தியை அளவிடும் தொழில்நுட்பம் விரை வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் எந்தெந்த நாட்டில் எவ்வளவு சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை கணக்கிட முடியும். இன்று உலகமே கண்டு அஞ்சுவது சீனாவின் ‘ஒரே சாலை, ஒரே மண்டலம்’ என்ற அறைக்கூவலை தான்! காரணம் 64 நாடுகளை கடல், சாலை, ரெயில் வழித்தடங்களை இணைத்து அதை தனக்கு பிரத்யேக வர்த்தக சர்வாதிகார ஆதிகத்தை அவிழ்த்துவிட இருப்பதாக சர்வதேச நாடுகள் கூறி அதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டதை அறிவோம்.

குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை நாடுகள் சீனாவுடன் இணைந்து நம் கழுத்தையே நெருக்கி விடும் அபாயத்தை உணர்ந்து எதிர்த்து வந்தது.

தற்போது நமது பிரதமர் மோடியின் ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகம்’ அழைப்பு அமைதியான,ஒளிமயமான, வளமான எதிர்காலத்தை உலகம் பெற ஏதுவானது என்று பாராட்டப்பட்டு வருகிறது.

அது சரி, சூரிய வெப்பம் 365 நாட்களுக்குக் கிடைக்காதே? உலகளாவிய மின் விநியோகம் சாத்தியமா? இது தற்போதைய தொழில்நுட்ப வசதிகளால் சரிபட்டு வராது! ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்பட இருக்கும் அறிவியல் புரட்சிகளால் ‘தந்தியில்லா தொலைத் தொடர்பு’ போல் நொடிப் பொழுதில் சூரிய ஒளியை மின் சக்தியாக்கிய விண்ணிலிருந்து உலகெங்கும் இல்லங்களில் விளக்கெறிய செய்யப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

ஆகவே மோடியின் அழைப்பை ஏற்று உலக நாடுகள் புதிய சிந்தனையுடன் மின் தயாரிப்பை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தமிழக பொறியியல் கல்லூரிகளில் இது பற்றிய ஆராய்ச்சிகள், விசேஷ படிப்புகள் நடைபெற ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.

அந்த ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களுக்காக காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *