செய்திகள்

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: பரிசல் இயக்க தற்காலிக தடை

Spread the love

அரூர், ஜூலை 23

கர்நாடக அணைகளிலிருந்து காவேரி ஆற்றில் நீர் திறப்பு தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும், சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், கலெக்டர் மலர்விழி வேணடுகோள்விடுத்து உள்ளார்.

கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்துப்போனதன் காரணமாக காவேரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டு வந்தது.

இந்தநிலையில், கர்நாடக தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை காவேரியில் திறக்க வேண்டும் என காவேரி ஆணைய கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. ஆனால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் தண்ணீர் இல்லை என கர்நாடக மாநிலம் சொல்லி வந்தது.

தொடரும் தண்ணீர் திறப்பு

தொடர்ந்து, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், இரண்டு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து, கடந்த புதன்கிழமை கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 855 கன அடி தண்ணீர் காவேரியில் திறக்கப்பட்டது.

தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்ததால், காவேரியில் 2000, 5000, 8300, 10000 கன அடி என தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரித்தது. இந்தநிலையில், கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை காவேரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

தொடர்ந்து நீர்வரத்து, 1000, 2000, 3000 என படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 6500 கன அடியாக உயர்ந்தது. இன்று தொடர்ந்து அதிகரித்து 7000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

பரிசல் இயக்க தடை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவேரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்க தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒகேனக்கலில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *