செய்திகள்

எத்திராஜ் கல்லூரி முதல்வர் மரணம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை, செப். 21–

சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் கோதை (வயது 56), உடல்நலக்குறைவு காரணமாக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

கோதை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை உடல்நலக்குறைவால் நேற்று மறைவெய்தினார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன். 25 ஆண்டுகள் எத்திராஜ் கல்லூரியில் பணியாற்றி, 2019ம் ஆண்டு முதல் கல்லூரி முதல்வராகவும் பொறுப்பு வகித்து மாணவிகளின் நன்மதிப்பைப் பெற்ற கோதையை இழந்து வாடும் குடும்பத்தினர், சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியல் துறை பேராசிரியரான கோதை, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *