போஸ்டர் செய்தி

உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்: ஓ.பி.எஸ். எடப்பாடி சூளுரை

சென்னை, ஜூன்.12–

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி அம்மாவின் தலைமையில் பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றியைப் பெற்றிட இன்று ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது.

அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடந்தது.இதில் அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்பட தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், 5 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம் வருமாறு:–

வாக்காளர்களுக்கு நன்றி

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அண்ணா தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும்; தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும்; தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

பிரதமரை வழிமொழியும் வாய்ப்பு

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அண்ணா தி.மு.க.விற்கு அளித்தமைக்கு இந்தக் கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கு சிறப்புடன் பணியாற்றுங்கள்

தமிழ் நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, புரட்சித் தலைவி அம்மாவின் தலைமையில் பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றியைப் பெற்றிட இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்தக் கூட்டம் சூளுரைக்கிறது.

தூய அரசியல் பணிகளை மேற்கொள்ளுங்கள்

தமிழ் நாட்டின் தன்னிகரில்லா மக்கள் இயக்கமான அண்ணா தி.மு.க., கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வகுத்துத் தந்த ஏழை, எளியோருக்கும், தாய்க்குலத்திற்கும் தொண்டாற்றும் தூய அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும்,

புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் உடல்நல குறைவால் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், சி.வி. சண்முகம் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை.

இதேபோன்று கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வராததால் எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய 3 பேரும் பங்கேற்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *