ஏர் இந்தியா தலைமை நிர்வாக இயக்குநர் பெருமிதம்
சென்னை, மார்ச் 9–
ஏர் இந்தியா நிறுவனத்தின் 1,825 பைலட்களில் 275 பேர் பெண் பைலட்கள் (15 சதவீதம் பேர்) என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா குழுமம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மார்ச் 1 ஆம் தேதி முதல் பைலட் உள்பட முற்றிலும் பெண் ஊழியர்களைக் கொண்டு விமானங்களை இயக்கியது. டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியாவுடன் இணைந்து 90க்கும் மேற்பட்ட பெண் பைலட்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை இயக்கினர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வளைகுடா பாதையில் 10 சர்வதேச விமானங்களையும், ஏர் ஏசியா இந்தியாவுக்குள் 40க்கும் மேற்பட்ட விமானங்களையும் இயக்குகிறது. முற்றிலும் பெண்கள் கொண்ட காக்பிட் மற்றும் கேபின் ஊழியர்களால் இயக்கப்படும் 90க்கும் அதிகமான விமானங்களில் ஏர் இந்தியா, உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் 40 விமானங்களை இயக்கி வருகிறது.
அதிக பெண் பைலட்கள்
ஏர் இந்தியா குழுமத்தின் ஒட்டுமொடத்த ஊழியர்களில் 40 சதவீதத்திற்கும் மேல் பெண்களே உள்ளனர். அதேபோல, 1,825 விமானிகளில் 15 சதவீதம் பேர் அதாவது 275 பேர் பெண்களாக உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பெண் பைலட்களைக் கொண்ட விமான நிறுவனம் ஏர் இந்தியாதான்.
இதுகுறித்து, ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான காம்ப்பெல் வில்சன் கூறுகையில், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வணிக பெண் பைலட்களைக் கொண்ட நாடு இந்தியாதான். ஏர் இந்தியாவில் எங்களுடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பெண்கள் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும் என்ற சக்திவாய்ந்த செய்தியை இதன் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.